அபிப்ராய பேதம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

எல்லா வர்க்கத்தினருக்கும் இடம் தரும்படியாக ராஜாங்கம் அமையட்டும். ஆனால் இப்படிப்பட்ட ப்ரதிநிதிகளை வயஸு வந்த எல்லா ஜனங்களுமே தேர்ந்தெடுக்கும் முறைதான் ஸரியான வழியா என்பதில்தான் கொஞ்சம் அபிப்ராயபேதம் இருக்கிறது. கொஞ்சம் அபிப்ராய பேதம் என்று சொல்வது அவ்வளவு ஸரியில்லை, நிறையவேதான் அபிப்ராய பேதம். ஆனால் இப்படி ரொம்பவும் கொஞ்சம் பேருக்கே இருக்கிறது. இப்படி இருப்பதால், தேசத்தில் பொதுவாயுள்ள அபிப்ராயத்தைக் கவனிக்கும்போது இந்த அபிப்ராயபேதம் கொஞ்சமாகவே தெரிகிறது.

இம்மாதிரி வித்யாஸமாக நினைப்பவர்கள் என்ன சொல்கிறார்களென்றால் நிர்வாஹம் பண்ணுவதற்கு ஒரு தகுதி வேண்டுமென்பது போலவே, ஒருத்தர் அப்படிப்பட்ட தகுதி உள்ளவர்தானா என்று எடை போட்டுப் பார்த்து அவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும். ஒரு அபேக்ஷகர் (வேட்பாளர்) என்றால் அவர் ஏதோ ஒரு கட்சியில் இருப்பார். அதற்கென்று கொள்கைகள் இருக்கும். ஸ்வயேச்சை அபேக்ஷகர் என்றால் அவருக்கும் ஏதோ கொள்கைகள் இருக்கத்தான் வேண்டும். தேர்ந்தெடுக்கிறவர்கள் இந்தக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கவேண்டும். ‘நம் தேசத்தில், தற்போதுள்ள நிலவரங்களில் இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நிர்வாஹம் செய்வது நல்லதா?’ என்று சீர்தூக்கி முடிவு பண்ணக்கூடியவர்களாக வோட்டர்கள் இருக்கவேண்டும். ‘அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்” என்று எதையாவது சொல்லிக்கொண்டு வோட்டு கேட்டால், “அது ஸாத்யந்தானா? ஸாத்யமானாலும் அப்படிச் செய்யலாமா?” என்று யோசித்துப் பார்த்து, பேச்சில் ஏமாந்து போகாமல் வோட்டுப் போடக்கூடியவர்களாக இருக்கவேண்டும். மொத்தத்தில், குடியரசு எல்லாருக்குமானாலும், அதிலே ராஜாங்கம் அமைப்பவர்கள் எல்லா வர்க்கத்தினருக்கும் ப்ரதிநிதிகளாயிருக்க வேண்டியவர்களானாலும், அவர்களுக்கு நிர்வாஹத்துக்கான யோக்யதாம்சம் இருக்க வேண்டியிருக்கிறது; அப்படிப்பட்ட யோக்யதாம்சம் அவர்களுக்கு இருக்கிறதா என்று பரிசீலனை பண்ணி அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு யோக்யதாம்சம் வேண்டியிருக்கிறது. அதாவது அபேக்ஷகர், வோட் போடுபவர் இருவருக்கும் யோக்யதாம்சம் வேண்டியிருக்கிறது.

ஒரு வேலை கொடுக்கும்போது, மனுப் போட்ட பலபேரிலே யாருக்குக் கொடுக்கலாம் என்று ஸெலக்ட் செய்யவேண்டியிருக்கிறது. ரொம்பவும் விஷயம் தெரிந்தவர்களைத் தான் ஸெலக்ஷன் கமிட்டியில் போட்டு அவர்கள் மூலம், மனுப் போட்ட பல பேரில் ஒருத்தருக்கு வேலை கொடுக்கிறார்கள். அதாவது வேலைக்கு வைக்கிறவனின் யோக்யதாம்சத்தைப் பரீக்ஷித்து அவனை ஸெலக்ட் செய்வதற்கு அவனை விட யோக்யதாம்சம் வாய்ந்தவரை நாட வேண்டியிருக்கிறது. குடியரசுத் தேர்தலில் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், இன்னாருக்கு இன்ன யோக்யதாம்சம் என்று சீர் தூக்கிப் பார்க்கவேண்டியவர்களான வோட்டர்களுக்கும் ஓரளவுக்கு யோக்யதை வேண்டித்தான் இருக்கும்.

தேச நிர்வாஹம், அரசியல் கொள்கைகள் முதலியவற்றைப் பற்றி ஓரளவேனும் விஷயஞானமுள்ளவர்கள் ஆலோசனை செய்து வோட் கொடுத்தால்தான் ஆட்சி ஸரியானவர்களிடம் போகும். விஷயம் தெரியாதவர்கள் எலெக்ட் செய்யும்படிவிட்டால் தப்பானவர்கள் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடுமே, அதனால் ரொம்பவும் அனர்த்தமாகி விடுமே… என்பதெல்லாந்தான் நான் சொன்ன ‘கொஞ்சம் பேரின்’ கவலை, ஆக்ஷேபனை எல்லாம்.

விஷயம் தெரிந்தவர்களும் ஸ்வயநலக்காரர்களாயிருக்கிறார்கள், தேச நலனைக் கருதாமல் தங்கள் ஸொந்த அபிமானங்களின் மீது வோட் போடுபவர்கள் அவர்களிலுந்தான் இருக்கிறார்கள் – என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் இருப்பதற்குள் நல்லதாக, safe ஆக ராஜாங்கம் அமையவேண்டுமானால் அதற்கு, ஒன்றும் தெரியாத பாமர ஜனங்களிடம் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத் தருவதைவிடத் தெரிந்தவர்களிடம் தருவதுதான் உசிதமானது. இருப்பதற்குள் இப்படிச் செய்தால்தான் குறைச்சல் அனர்த்தம் என்று வைத்துக்கொள்ளலாம்!

ஆனதினால், படிப்பு, ஸொத்து இம்மாதிரி ஏதோ ஒன்றினால் ராஜீய விஷயங்களில் ஓரளவு ஞானமும் பொறுப்புணர்ச்சியும் பெற்றிருப்பவர்கள் மட்டுமே வோட்டுரிமை பெற்றுத் தேர்ந்தெடுக்கும் முறையைப் பின்பற்றுவதுதான் ஸரி என்று இந்தக் ‘கொஞ்சம் பேரு’க்குத் தோன்றுகிறது. ஜாதி, மதம், பொருளாதார வர்க்கம் முதலானவற்றில் குறிப்பிட்ட ஏதோ ஒன்றை மட்டும் சேர்ந்தவர்களாயில்லாமல் எல்லாவற்றையும் சேர்ந்தவர்களான இப்படிப்பட்ட விஷயமறிந்த எல்லாருக்கும் வோட்டுரிமை தரவேண்டும்; அப்படிச்செய்வதால் இது குறிப்பிட்ட ஒரு பிரிவின் ஆட்சியான மற்ற ‘க்ரஸி’களில் ஒன்றாக இல்லாமல் ‘டெமாக்ரஸி’ என்றே மதிக்கப்படவேண்டியதாகும் – என்கிறார்கள். எலெக்ட் ஆகிற அபேக்ஷகரும் இப்படியே ஏதோ ஒரு வர்க்கமாகத்தான் இருக்க வேண்டுமென்று வைக்காததால் டெமாக்ரஸிக் கொள்கை இன்னம் பலப்படுகிறது. இதற்கு மேல் Adult Franchise (வயது வந்தோர் யாவரும் வோட்டளிக்கும் முறை) என்று போனால், விஷயம் தெரியாத எராளமான பாமர ஜனங்களைக் கொண்ட நம் தேசத்தில் ஸரியனாவர்களிடம் நிர்வாஹம் போகாமல் கஷ்டப்பட வேண்டி வரப் போகிறதே என்று நான் சொன்ன ‘கொஞ்சம் பேர்’ நினைக்கிறார்கள். நவீன முன்னேற்றப்போக்கு இல்லாதவர்கள், பழம் பெருச்சாளிகள் என்று முன்னேற்றத் தலைவர்கள் வர்ணிக்கிற ‘கொஞ்சம் பேர்!’

இந்தத் தலைவர்கள் ஜனங்கள் அத்தனை பேரையும் ஸ்வதந்த்ரப் போராட்டத்தில் தூண்டிவிட்டுத்தான் வெள்ளைக்காரனைப் போகப் பண்ணியிருக்கிறார்கள். அதனால் இப்போது அத்தனை பேரும் தேச ஆட்சிக்கு உயிர் நாடியாயுள்ள எலெக்ஷனில் கலந்து கொள்ளும்படிச் செய்யாமல், வோட்டர்களுக்கு யோக்யதாம்சம் நிர்ணயித்தால், ஜனங்கள் தங்களை என்ன பண்ணுவார்களோ என்ற எண்ணமும் இருக்கலாம். ‘வெள்ளைக்காரர்களை எதிர்த்து என்னென்ன பண்ணுவதற்கு ஜனங்களுக்குக் கற்றுக் கொடுத்தோமோ அதைத் தங்களிடமே அவர்கள் திருப்பிக் கொண்டால் என்ன பண்ணுவது?’ என்றும் இருக்கலாம். இப்படி எவனோ அந்நியனுக்குப் பண்ண வேண்டியிருந்ததை நம் தேசத்தின் தலைமையில் இருக்கும் நம்மவர்களுக்கே பண்ணலாமா என்று யோசிக்காமல் செய்யக் கூடியவர்கள் என்றாலே விஷயம் தெரியாதவர்கள், அரசியல் அறிவு போதாதவர்கள் என்பதற்காக ஒருத்தருக்கு ஒரு உரிமை கொடுக்கப்பட்டால் அப்படிப்பட்டவர்கள் அந்த உரிமையைத் தப்பாகத்தான் ப்ரயோகிப்பார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குடியரசு, ஜனநாயகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  விசித்ர அம்சம் கொண்ட தேர்தல் முறை
Next