ஐயத்துக்கு ஆளான ஐயன் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ப்ரஸேனன் வேட்டையிலிருந்து திரும்பி வராததைப் பார்த்தவுடன் ஸத்ராஜித்துக்கு க்ருஷ்ணரிடம்தான் ஸந்தேஹம் உண்டாயிற்று. ஸந்தேஹமென்று சொன்னால் போதாது. நன்றாக confirmed ஆகவே, ‘க்ருஷ்ணன்தான் காட்டிலே தம்பியை மடக்கிக் கொன்று போட்டிருக்கிறான்’ என்று தோன்றிவிட்டது. பாகவதத்தின்படி, க்ருஷ்ணன் ப்ரஸேனனோடு போகாவிட்டாலும் ஆளைவிட்டு அவனைக் கொன்றதாக நினைத்தான். ‘ஏற்கனவே ஸ்யமந்தகத்தின் மேலே ஒரு கண் வைத்திருந்தான். ப்ரஸேனன் அதைப் போட்டுக் கொண்டு காட்டுக்கு போனது நல்ல வாய்ப்புக் கொடுத்துவிட்டது. வேட்டைக்குப் போனவன் திரும்பி வராவிட்டால் ஏதோ துஷ்ட மிருகம் அடித்துப் போட்டு விட்டது என்று ஊரார் நினைத்துக் கொள்வது ஸஹஜம்தானே? அப்படி இதையும் நினைத்துக் கொண்டு போகட்டுமென்று க்ருஷ்ணனேதான் ஆட்களை அனுப்பி அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு, மணியைத் தன்னிடம் அவர்கள் சேர்ப்பிக்கும்படி ஏற்பாடு பண்ணியிருக்கிறான்’ என்று முடிவு செய்துவிட்டான்.

ஸாஷாத் பரமாத்மாவே நராகாரமாக அவதாரம் பண்ணினால் மநுஷ்யர்களுக்கு ஏற்படுகிற எல்லாக் கஷ்டங்களும் அவருக்கும் வருகின்றன! அபவாதம்கூட வருகிறது. மநுஷ்யர்களோடு மநுஷ்யனாகக் கஷ்டங்களுக்கு ஆளாகிற மாதிரி இருந்து கொண்டே அதன்மூலம் அவர்களுக்கு அநேக பாடங்களை போதிக்கவேண்டுமென்பதுதான் அவதார ரஹஸ்யம்.

“க்ருஷ்ணன் ப்ரஸேனனைக் கொலை பண்ணியிருக்கிறான்; மணியைத் திருடிக்கொண்டு எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறான்” என்று நிரபராதியான பகவான் மேல் ஸத்ராஜித் இரண்டு க்ரிமினல் குற்றங்களைச் சுமத்தினான். எங்கே பார்த்தாலும் இந்த மித்யாவாதவத்தை (பொய்யான நிந்தையை)ப் பரப்பினான்.

ஊர்வாய் பொல்லாதது. ஜனங்கள் மனஸ் சாஞ்சல்யம் (சஞ்சலத்தன்மை) வாய்ந்தது. ஒருநாள் ‘ஹாஹூ’ என்று தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிற தலைவர்களை இன்னொரு நாள் சீந்தாமலே தூக்கி எறிவதை ப்ரக்ருதத்திலே (நடைமுறையில்) பார்க்கிறோமல்லவா? என்றைக்குமே கொஞ்சம் இப்படித்தான் இருந்திருக்கிறது. எந்த க்ருஷ்ணனால்தான் கம்ஸாதிகளின் கொடுமையிலிருந்து தப்பி யதுகுலம் ஸகல ஸந்துஷ்டியும் ஐச்வர்யமும் அடைந்ததோ, எவனுடைய கருணைதான் எந்த ஆபத்திலும் அவர்களை ரக்ஷித்ததோ, அந்த க்ருஷ்ணனையே, அவனுடைய அந்த ஸொந்த ஜனங்களிலேயே பல பேர் இப்போது ஸத்ராஜித்தோடு சேர்ந்து கொண்டு அபாண்டமாகப் பேச ஆரம்பித்தார்கள். “குழந்தை நாளிலேயே வெண்ணெய் திருடினவன்தானே? திருடும், கபடும் அவன் தேஹத்தோடு பிறந்தவை. இதுவும் பண்ணியிருப்பான், இன்னமும் பண்ணியிருப்பான்” என்று வாய்கூசாமல் நிந்தித்தார்கள். காளிங்கனிடமிருந்து காப்பாற்றியது, கோவர்தனத்தைத் தூக்கிப் பிடித்து ப்ரளய வர்ஷத்தைத் தடுத்தது எல்லாம் மறந்தே போய்விட்டது.

தான் மனஸாலும் நினைக்காத குற்றத்தைத் தன்மேல் தன்னைச் சேர்ந்தவர்களே சுமத்துகிறார்களே என்று பகவான் மனக்லேசம் அடைந்தார் – அதாவது அப்படி நடித்தார். மநுஷ்யனைப் போல மனக்லேசம் அடைந்ததற்குப் பொருத்தமாக, தமது ஐச்வர்யமான (ஈச்வரத் தன்மைக்குரிய) ஸர்வஜ்ஞத்தையும் விட்டமாதிரி நடித்தார். (எதையும் தன்னால் அறியும்) ஸர்வஜ்ஞத்வத்தைக் காட்டாமல் மநுஷ்யர்கள் மாதிரியே ‘இன்வெஸ்டிகேட்’ செய்து ப்ரஸேனன் எப்படிச் செத்துப் போனான் என்று எல்லாருக்கும் ‘ப்ரூவ்’ பண்ணிக் காட்டுவது என்று முடிவு செய்தார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஜாம்பவான்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மணியும் பெண்மணியும்
Next