திருத்தக் கூடிய விதிகளும் – திருத்தக் கூடாத விதிகளும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அமென்ட்மென்டைப் பற்றிச் சொல்லும்போது இன்னொன்று கவனிக்கவேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் நல்லவர்களாக, ஸ்வய நலம் அல்லது ஸ்வய ஜாதி அல்லது ஸ்வய கட்சி நலமில்லாமல் தேச நலனையே கருதுபவர்களாக இருக்கப்பட்டவர்கள் போடும் ரூல் (விதி) களையும் ‘லா’க்களையும் (சட்டங்களையும்) பிற்பாடு அப்படியில்லாதவர்கள் ஸ்வய நலனுக்காக மாற்றி அமென்ட் செய்கிற ஆபத்தும் இருக்கிறது. இவ்விஷயமாகப் பழைய காலத்தில் இருந்த உத்தமமான அம்சம் என்ன என்றால், அடிப்படையாக நம்முடைய ராஜ்யங்கள் எல்லாவற்றுக்குமே தர்ம சாஸ்த்ரம்தான் கான்ஸ்டிட்யூஷன் (அரசியல் நிர்ணயச் சட்டம்) மாதிரி இருந்ததாகும். இருக்கப்பட்ட அநேக தர்ம சாஸ்த்ரங்களில் எல்லா விஷயங்களையும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் விவரிக்கும் மநுதர்ம சாஸ்திரத்தைத்தான் எந்த அரசனும் பின்பற்றியதாக அவனைப் பற்றிய ப்ரசஸ்திகளிலும் (சாஸன வாயிலாக) , மற்ற இலக்கியம், காவியம் முதலானவற்றிலும் காணப்படுகிறது. “மநுநீதி வழுவாது” என்று எந்த அரசனின் ஆட்சியையும் பற்றிச் சொல்லப்படுவதால், கொஞ்சங் கூட ஸ்வயச் சார்பே இல்லாமல் ரிஷிகள் வகுத்த தர்ம சாஸ்த்ரங்களின் ஸாரமாக மநு கொடுத்த அந்த ப்ரமாண நூலில் காண்கிற விதிமுறைகள் பின்னால் வந்த அரசர்களால் மாற்றப்படவேயில்லை என்று தெரிகிறது. இந்த அடிப்படைச் சட்டத்துக்கு ‘அமென்டமென்ட்’ என்பது கிடையாது. அதன் விதிகள் அவற்றின் ரூபம் சிதையாமலே காக்கப்பட்டு வந்தன.

தர்ம நெறிகளைக் குறித்ததாகவும், அவற்றை அநுஸரிப்பதற்கு ஏற்றவகையில் ஸமூஹத்தைப் பல பிரிவுகளாக்கி அவை ஒன்றுக்கொன்ற இசைந்து செயல்படும்படியாகவும் விதிகளைத் தரவே ஏற்பட்டது மநு தர்ம சாஸ்த்ரம். அதற்குப் பேரே தர்ம சாஸ்த்ரமே ஒழிய ராஜீய (அரசியல்) சாஸ்த்ரமல்ல. தேசத்தில் ஒட்டு மொத்தமாகவும், தேச ப்ரஜைகளில் ஒவ்வொருவரின் வாழ்ககையில் தனித்தனியாகவும் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பதெற்கே ஏற்பட்டது அந்த நூல். அந்த நூல் ஒரு ராஜாவின், ராஜாங்கத்தின் கடமையே இப்படிப்பட்ட தர்ம ஸ்தாபனம்தான் என்று உணர்த்துவதாகும். அரசியல் என்பது தர்மத்தை நிலைநாட்டுவதன் ஒரு அங்கமாகத்தான் பூர்விகர்களால் கருதப்பட்டது.

அர்த்த சாஸ்த்ரம், சுக்ரநீதி முதலான நூல்கள் பிற்பாடு அரசியலையே ப்ராதானமாக வைத்துச் செய்யப்பட்டன வென்றாலும், அவையும் தர்ம சாஸ்த்ரத்தை அநுஸரித்தேதான் பெரும்பாலும் செய்யப்பட்டன. யதார்த்த ஸெளகர்யங்களையும், தேவைகளையும் முன்னிட்டு தர்ம சாஸ்த்ர விதிகளை அப்படியே பின்பற்றாமல் சிற்சில விஷயங்களில், கொஞ்சம் மாற்றிச் செய்யவும் ராஜநீதி சாஸ்த்ரங்கள் இடம்தரத்தான் செய்கின்றன. ஆனாலும், இங்கேயுங்கூட அரசியல் சாஸனத்தின் அடிப்படை அமைப்பு – basic structure என்கிறார்களே, – அது போன்ற தர்ம சாஸ்த்ர அஸ்திவாரத்துக்கு ஹானி உண்டாக்காமலே செய்வேண்டுமென்பதுதான் கொள்கையாயிருந்திருக்கிறது. அப்படி எங்கேயாவது அர்த்த சாஸ்த்ரம் தர்மசாஸ்த்ரத்துக்கு வித்யாஸமாகப் போனாலும் சதுர்தச வித்யைகளிலுள்ள நாலு சாஸ்த்ரங்களில் ஒன்றாய் உள்ள தர்ம சாஸ்த்ரத்தைத் தான் ப்ரமாணமாக எடுத்துக் கொள்ளவேண்டுமென்றும், அந்த வித்யைகளுக்குப் பிற்பட்டே ஸ்தானம் பெறுகிற நாலு உபவேதங்களில் ஒன்று மட்டுமேயான அர்த்த சாஸ்த்ரம் முதலான அரசியல் நூல்களின் அபிப்ராயத்தைத் தள்ளிவிடவேண்டுமென்றும் ஆன்றோர் கருதியிருக்கிறார்கள். அந்த உத்தமக் கொள்கையைக் கடைப் பிடித்துத்தான் தமிழ் நாட்டு அரசர்கள் தங்களை மநு நூல் வழி நடப்பவர்களாகவே சொல்லிக் கொண்டார்கள். அர்த்த சாஸ்த்ர வழி நடப்பவர்களாக அல்ல.

எதற்குச் சொல்லவந்தேன் என்றால், தமிழ் வேந்தர்களின் ஆட்சிக்காலத்தில் சட்டத்திருத்தம் பண்ண இடமே இல்லாமலும் இல்லை, ஆனால், அதே ஸமயத்தில் சட்டத் திருத்தம் என்ற பெயரில் அவ்வப்போது ஆட்சியிலிருப்பவர்களின் இஷ்டப்படியும் ஸெளகர்யப்படியும் எந்த விதியை வேண்டுமானாலும் மாற்றலாம் என்றும் இல்லாமல், தர்ம சாஸ்த்ர அடிப்படை விதிகளை, intact -ஆக (கட்டுக் குலையாமல்) ரக்ஷிக்கத்தான் வேண்டும் என்றும் இருந்தது. தர்ம சாஸ்த்ரத்தை வேராகக் கொண்டு ராஜாங்க வ்ருக்ஷம் ரக்ஷிக்கப்பட்டபோது அந்த வேரைக் கொஞ்சம்கூட பாதிக்காமலே, யதார்த்த நடைமுறைகளையொட்டிக் கிளைகள் மாதிரித்தான் புதுச் சட்டங்கள் போட்டது. அவச்யமேற்படும்போது கிளைகளைக் கொஞ்சம் வெட்டி விடுகிறாற்போல, ஒன்றிரண்டைக் கழித்துக் கட்டியும் விடுகிறாற்போல இந்தப் புதுச் சட்டங்களை ‘அமென்ட்’ பண்ணவும் செய்தார்கள்.

சோழராட்சியில் க்ராம மஹா ஸபை அங்கத்தினருக்கான க்வாலிஃபிகேஷன்களில் மூன்றாவதான வயஸு பற்றிய விதியை இப்படித்தான் ரிவைஸ் பண்ணினது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வேட்பாளரின் யோக்யாதாம்சங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சாஸ்திர அறிவும், காரியத்திறனும்
Next