மணியும் பெண்மணியும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அந்த பெண் யாரென்றால் ஜாம்பவானுடைய புத்ரிதான். அப்பாவின் பெயரையொட்டி அவளுக்கு ஜாம்பதி என்று பெயர். ‘யாருமே வரமுடியாததாக அப்பா அமைந்திருக்கிற குஹை வீட்டுக்குள் இந்த லாவண்யமூர்த்தி வந்து விட்டாரே. அப்பா கோபித்துக்கொண்டு இவரை என்ன பண்ணிவிடுவாரோ?’ என்று பயப்பட்டாள்.

அந்த ஸமயத்தில் ஜாம்பவான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அதனால் ஜாம்பதி ரஹஸ்யக் குரலில் க்ருஷ்ணரிடம், அவர் யார், என்ன கார்யமாக வந்திருக்கிறாரென்று சுருக்கமாகப் பதில் சொல்லும்படிக் கேட்டாள்.

பகவான் அப்படியே சொன்னார்.

உடனே அவள், “இங்கே நீங்கள் வந்ததற்கே என் பிதா கோபப்படுவார். ஸ்யமந்தகத்தை வேறே நீங்கள் யாரோ ஒருத்தருக்காக எடுத்துக் கொண்டுபோக நினைக்கிறீர்களென்று அவருக்குத் தெரிந்தால் எரிகிற கொள்ளியில் எண்ணெய் விட்ட மாதிரி ஆகும். அதனால் இப்போதே நீங்கள் சத்தம் செய்யாமல் அதைக் கழற்றி எடுத்துக் கொண்டு ஓடிப்போய்விடுங்கள்” என்றாள்.

அவரைப் போகச் சொல்வதற்கு அவளுக்கு மனஸ் இல்லைதான். இருந்தாலும் அப்பாவால் அவருக்கு ஹானி உண்டாகிவிடப்போகிறதே என்பதால், அவரிடம் கொண்ட ப்ரேமையாலேயே உண்டான த்யாக எண்ணத்தில் இப்படிச் சொன்னாள்.

பகவானிடம் ப்ரேமை கொண்ட ஒரு பெண் – ருக்மிணி – தன்னையே அவர் எடுத்துக் கொண்டு ஓடிப்போய்விட வேண்டுமென்று தூது அனுப்பினாள். இந்தப் பெண்ணோ ஸ்திரீகளுக்கு இருக்கிற நகை ஆசையைக்கூட விட்டு, லேசிலே கிடைக்காத திவ்யமணியை அவர் எடுத்துக்கொண்டு ஒடிவிட வேண்டுமென்று ப்ரார்த்தித்துக் கொண்டாள்.

பகவானானால் ரஹஸ்யத்தைக் காப்பாற்றாமல் கலகலவென்று சிரித்தார். “போதும் போதும், எனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்கிற திருட்டுப் பட்டங்கள். ஸத்ராஜித்தின் வாயிலிருந்து தப்ப வழிகிடைத்ததே என்று நான் இப்போது தான் ஸந்தோஷப்பட்டேன். நீயானால் உன் அப்பாவின் வாயில் விழச் சொல்கிறாய். ஒன்று அவரே ஸ்யமந்தகத்தை இஷ்டப்பட்டுத் தரட்டும். அல்லது அவருடன் நேரே யுத்தம் பண்ணி ஜயித்து அதை எடுத்துக்கொண்டு போகிறேன்” என்றார்.

“அப்பா குணம் எனக்குத் தெரியும். ‘கரடிப்பிடி’ என்று அவர் தமக்குக் கிடைத்த பண்டத்தைக் கொடுக்கவே மாட்டார். அதுவும் வயஸுக்காலத்தில் பிறந்த செல்லக் குழந்தைக்காக அவர் ஸம்பாதித்து வந்திருக்கும் அபூர்வமான மணியை ஒருநாளும் இஷ்டப்பட்டுக் கொடுக்க மாட்டார். ஆனதினால், நீங்கள் நேர்வழியில்தான் வாங்கிக் கொள்வீர்களென்றால், அவருக்கு முன்னால் கைநீட்டி யாசித்துத் தோற்றுப்போக வேண்டாம். யுத்தத்திலேயே ஆரம்பியுங்கள்” என்றாள் ஜாம்பவதி. அவருடைய மானவமானங்களில் தனக்கும் பங்கு இருப்பதாக நினைக்கிற அளவுக்கு அவரிடம் சுத்தமான ப்ரேமை உண்டாகியிருந்தது.

உடனே இதுவரையில் இந்தக் கதையில் ஊர் அபவாதத்தை வாங்கிக் கட்டிக்கொண்டு சோப்ளாங்கி மாதிரியிருந்த பரமாத்மா மஹா கம்பீரமாகச் சங்கையெடுத்து ‘பூம் பூம்’ என்று கோஷம் பண்ணினார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஐயத்துக்கு ஆளான ஐயன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சண்டையில் ஸ்பரிச இன்பம்
Next