விதிவிலக்கான வயோதிகர்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ரிஷிகள் மனஸினால் பரத்தில் இருந்துகொண்டே வெளிப்பார்வைக்கு இஹத்திலும் ஈடுபட்டு ஸதாஸர்வகாலம் லோக மங்களத்துக்காகக் கார்யம் செய்துகொண்டிருந்தவர்கள். எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் உயிரோடு இருந்தாலும், தேஹ-புத்தி சக்திகள் குறையாமல், ‘செனிலிடி’ வராமல் இருந்தவர்கள். ஞான வைராக்யமென்பதற்காக லோக கல்யாணத்தை விட்டு விட்டு ஓட வேண்டுமென்றில்லாமல், அதில் ஊன்றி நின்ற அதே ஸமயத்திலேயே இதிலும் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். வஸிஷ்டர் மாதிரியானவர்கள் எத்தனையோ தலைமுறைகளுக்குப் புரோஹிதர்களாக இருந்து நல்லதை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்கள். அப்போது ‘அப்பர் லிமிட்’ தேவைப்படவில்லை. ஆனால், அது ரொம்ப பழைய கதை. ‘த்ரேதாயுகத்துச் ஸமாசாரம்’ என்கிறோமே, வாஸ்தவமாகவே அந்தக் காலத்தைச் சேர்ந்த கதை. அப்புறம் எல்லாமே வரவர க்ஷீணித்து வந்திருப்பதில், கலியுகத்தில் ரொம்பப் பெரியவர்கள்கூட நல்ல வ்ருத்தாப்யம் எழுபது வயஸுக்கு மேல் ஏற்பட்டு, தேஹ சக்தி, புத்தி சக்தி இரண்டும் நலிவதாகத்தான் ஆகி வந்திருக்கிறது. ஆயிரம் வருஷம் முந்தி நிச்சயம் இப்படி ஆகித்தானிருக்க வேண்டுமென்று உத்தரமேரூர் சாஸனத்திலிருந்து தெரிகிறது.

அபூர்வமாக விதிவிலக்கான வ்ருத்தர்கள் இருக்கிறார்கள்.பெர்னாட்ஷா இருக்கிறார்*. சர்ச்சில் கொஞ்சங்கூடக் கிழம் தட்டாமல் அவருடைய தேசத்தையே ஆவேசத்தில் கிளம்பி உலக மஹாயுத்தம் நடத்தியிருக்கிறார். காந்தி எத்தனையோ வருஷமாகப் பூஞ்சையாகத்தானிருந்தாலும், மனோபலத்தாலும் ராம நாம சக்தியாலும் கடைசிவரை தீக்ஷ்ண புத்தியுடனும் ஆரோக்யத்துடனும் இருந்திருக்கிறார். விச்வேச்வரய்யா இருக்கிறார். Grand Old Man என்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எக்காலத்திலும் எந்த இடத்திலும் இருக்கக்கூடுமானாலும், ஒரு ஊர் ஆட்சியையோ ராஜ்ய நிர்வாஹத்தையோ ஏற்று நடத்தக்கூடிய பொறுப்பை எப்படிப்பட்டவரிடம் கொடுக்கலாம் என்று விதி செய்யும்போது, ஜனங்களின் ஜெனரல் லெவலைப் பார்த்துத்தான் செய்யமுடியுமே தவிர, விதிவிலக்காக இருப்பவர்களுக்கு இடமளிக்கும்படியான ரீதியில் செய்ய இயலாது. ஒரு கான்ஸ்டபிள் வேலை என்றால் பொதுவாகப் பார்த்து இன்ன உயரம், பருமன், ‘வெய்ட்’ உள்ளவன்தான் செய்ய முடியும் என்று வைக்கிறார்கள். அதற்கு விலக்காகச் சற்று குட்டையாக, ஒல்லியாக உள்ள ஒருவன் எத்தனைதான் சூரத்தனம் காட்டிப் பேர் பெற்றவனாயிருந்தாலும், கான்ஸ்டபிள் வேலைக்கு மனுப்போட்டால், ‘எல்லாம் ஸரிதாம்பா; ஆனால் ப்ரிஸ்க்ரைப் பண்ணின உசரம், பருமன் இல்லையே!’ என்று சொல்லிக் கையை விரிக்கத்தான் செய்வார்கள்.


* அதாவது உரை ஆற்றப்பட்ட காலத்தில்

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தர்ம ஒழுங்கின் ஸத்ய அடிப்படை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அலுவலக வேலையும் பொதுச்சபைப் பணியும்
Next