அலுவலக வேலையும் பொதுச்சபை பணியும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வேறெங்கேயோ போவானேன்? சர்க்கார் சிப்பந்திகளையே எடுத்துக் கொண்டால் ஐம்பத்தைந்து, உசந்தால் (ஜட்ஜ் மாதிரியானவர்களுக்கு) அறுபது என்று ஏதோ ஒரு வயஸில் ‘கம்பல்ஸரி’ யாக ‘ரிடயர்’ செய்துதானே விடுகிறார்கள்? உத்யோகங்கள் எல்லாவற்றுக்குமே வயஸில் லோயர் லிமிட், அப்பர் லிமிட் இரண்டும் வைத்திருக்கிறார்கள்.

தினந்தினமும் ஆபீஸுக்குப் போய் அடியிலிருந்து நுனி வரை ஃபைல் பார்ப்பது, எழுதுவது, டைப் அடிப்பது, அல்லது இன்ஸ்பெஷன் பண்ணுவது, அல்லது டிராயிங் போடுவது, டூர் போவது என்பது போலில்லாமல் ஊராட்சி, நாட்டு ஆட்சி ஆகியவற்றின் ஸபைக்காரர்கள் அவ்வப்போது மட்டும் கூடி, பேச்சு வேலையே முக்யமாய் நடத்தி மேல் மட்டங்களில் மட்டுமே ஸுபர்வைஸ் செய்கிறது போலத்தான் பணி செய்கிறார்களென்பது வாஸ்தவம். அதனால் மற்ற சிப்பந்திகளைப்போல இவர்களை தினசர்யையால் ஐம்பத்தைந்து அறுபது வயசிலேயே ஆட்டங் கண்டு போகக் கூடியவர்களென்று வைத்து ரிடையர் செய்யவேண்டியதில்லைதான். ஆனாலும் ‘டெய்லி ருடீன்’ (தினசரி அலுவல்) எப்படியிருந்தாலும், அகத்தோடு இருந்து ஓய்வெடுத்துக் கொள்பவரானாலுங்கூட, எழுபது வயஸுக்கு மேல் விருத்தாப்யக் கோளாறுகள் ஒருவருக்கு தலைதூக்குவதுதான் பொது இயல்பு என்பதைக் கவனித்தால், சட்ட ஸபை, மற்ற போது ஸபைகளிலுள்ளவர்களுக்குக்கூட வயஸுக்கு மேல் வரம்பு வைக்க ந்யாயமுண்டுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is விதிவிலக்கான வயோதிகர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மூதறிஞர்களின் ஆலோசனைக் குழு
Next