மூதறிஞர்களின் ஆலோசனைக் குழு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நல்ல விருத்தாப்யத்திலும் புத்தி தீக்ஷ்ணம் குறையாமல் யோசனைகள் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களென்றால், அவர்களது புத்தி தேசத்துக்கு ப்ரயோஜனப்படும்படியாக ஒரு அட்வைஸரி கவுன்ஸில் (ஆலோசனை ஸபை) அமைத்துக் கொள்ளலாம். கவுன்ஸில் என்றதால் அவர்கள் எல்லாரும் ஒரே ஸமயத்தில் ஒரு இடத்தில் கூடி ஸெஷன்ஸ் நடத்தி விவாதிக்க வேண்டுமென்பதுகூட இல்லை. இந்தப் பெரிய தேசத்தில் ஒரு மூலையிலிருந்து இன்னொன்றுக்குப் போய் இம்மாதிரிக் கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூட அவர்களுக்கு அசக்தமாயிருக்கலாம். சட்டஸபைக்காரர்கள் ஒவ்வொரு செஷனிலும் கூடிப் பல நாள் விவாதிக்க வேண்டும் என்றிருப்பதைப் போலவும் இல்லாமல், எப்போது அந்தப் பெரியவர்களின் யோசனை தேவை என்று தோன்றுகிறதோ அப்போது ராஜாங்கமே அவர்களுக்கு எழுதிக் கேட்டோ, ஆளனுப்பியோ அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றுப் பரிசீலிக்கலாம்- கமிஷன், டெலிகேஷன் என்று போட்டுப் பலரை விசாரித்து அபிப்ராயங்கள் பெறுவதுபோல். கவர்மெண்ட் கேட்டால்தான் அவர்கள் யோசனை தெரிவிக்கலாமென்றில்லாமல் அவர்களுக்காகவே எப்போது எதைப் பற்றி ஏதாவது யோசனை தெரிவிக்கலாமென்று தோன்றினாலும் அதைத் தெரிவித்துக்கொள்ள இடம் கொடுத்து, அந்த யோசனையைப் பரிசீலனை செய்யலாம்.

இப்படிப்பட்ட நல்ல வ்ருத்தர்களான பெரியவர்கள் பல கட்சிகளிலும் இருப்பார்கள்; ஒரு கட்சியிலும் சேராதவர்களாகவும் இருப்பார்கள். கட்சிகளை வைத்தே ஆட்சி முறையை நிர்ணயிப்பதாக இருக்கும் நம்முடைய குடியரசு வந்தபின்* இம்மாதிரி தேசம் முழுதும் உள்ள நல்ல அநுபவஸ்தர்களான மூதறிஞர்களை – ‘மூதறிஞர்’ என்பதுதான் இப்படிப்பட்டவர்களைக் குறிக்கும் அழகான வார்த்தை- மூதறிஞர்களை கொண்ட கவுன்ஸிலை நடு நிலைமையுடன், ப்ரெஜூடிஸ்கள் இல்லாமல் அமைத்து நடத்துவது எந்த அளவுக்கு ஸாத்யமென்று தெரியவில்லை.

தற்போதைக்கு அரசியல் கட்சிக் கண்ணோட்டமில்லாமல் நிதி விஷயம் நன்றாகத் தெரிந்தவர்கள், சட்ட விஷயம் நன்றாகத் தெரிந்தவர்கள் ஆகியோரை மந்த்ரி ஸபையில் வைத்துக்கொள்ள நேருவுக்கு அபிப்ராயமிருந்தாலும் போகப் போக எப்படியாகுமோ? கட்சிகளின் பெயரில் ஒரு எலெக்ஷன் நடந்துவிட்டால், அதுவும் இப்போது உத்தேசித்துள்ளபடி வயஸு வந்த அத்தனை பேருக்கும் வயஸு வருவதைத் தவிர வேறெந்த தகுதியும் வேண்டியதில்லை என்று வைத்து வோட்டுரிமை கொடுத்து பார்ட்டி அடிப்படையில் ஒரு எலெக்ஷன் நடத்திவிட்டால் அப்புறம் கட்சி வேற்றுமைகளைப் பாராட்டாமலும், எந்தக் கட்சியிலும் சேராமல்உள்ளவர்களை மதித்தும், நல்ல மூதறிஞர்களாக உள்ள எவருக்கும் ராஜாங்கத்தில் இடம் தருவது நடைமுறைக்கு வருமா என்று கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.

வயஸுக்கு மேல் வரம்பு பற்றி ஆரம்பித்து வரம்பில்லாமல் எங்கெங்கேயோ போய்க் கொண்டிருக்கிறாற் போலிருக்கிறது!


* இப்பகுதி 1950 ஜனவரி 26-ல் குடியரசு ப்ரகடனமாகுமுன்பே அருளப்பட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அலுவலக வேலையும் பொதுச்சபைப் பணியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆதிக்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளாதிருக்க
Next