ஜாம்பவான் விழித்துக் கொண்டார். க்ருஷ்ணரின் உத்தேசத்தைத் தெரிந்து கொண்டவுடன், “அப்படியா ஸமாசாரம்? என்னை என்னவோ, ‘கிழட்டுக் கரடி, ஸுலபமாய் ஜயித்து விடலாம்’ என்று நினைத்துச் சண்டைக்கா அழைக்கிறாய்? பார் இந்தக் கிழட்டுக் கரடியின் பராக்ரமத்தை” என்று தோளைத் தட்டிக்கொண்டு பாய்ந்தார்.
வாஸ்தவமாகவே ரொம்பவும் வலுவாகத்தான் அவர் பகவானைத் தாக்கினார். பகவான் அதை அநாயஸமாகப் பொறுத்துக் கொண்டு பதிலடி கொடுத்தார். ஜாம்பவானின் வீரமும் பலமும் லோகத்துக்கெல்லாம் தெரியவேண்டுமென்ற கருணையில் பகவான் தம்முடைய பூர்ணசக்தியை வெளிப்படுத்தாமலே அவரைத் தாக்கி, அவர் எதிர்தாக்குதல் பண்ணவைத்தார்.
தம்முடைய ஆராதனா மூர்த்தியான ராமசந்த்ர மூர்த்தியேதான் எதிரே நிற்பவரென்று தெரியாமல் ஜாம்பவான் ஸாஹஸ யுத்தம் செய்கிறார். விஷயம் நன்றாகத் தெரிந்தும் அவரை மிஞ்சாமல் அவருக்கு ஸமபலத்திலேயே தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு பகவானம் யுத்த விளையாட்டு விளையாடுகிறார்! இவர் யுவராகவும் அவர் கிழவராகவுமிருந்தாலும், ‘நம் குழந்தையின் சூரத்தனம் எப்படிப்பட்டது என்று நாமே அடி வாங்கிக் கொண்டு அநுபவ ஞானத்தோடு ரஸிக்கலாமே’ என்று நினைக்கிற தகப்பனாராக விளையாடுகிறார்.
கைகலந்தும், கட்டிப் புரண்டும் சண்டை போட்டார்கள். இப்படித் தம்முடைய திவ்ய சரீர ஸ்பர்சம் அந்தப் பரம பக்தருக்குக் கிடைக்கும்படியாகப் பண்ண வேண்டுமென்பதுதான் பகவானின் உத்தேசமே! ராமாவதார காலத்தில் ஜாம்பவானக்கு ரொம்ப ஆசை, பகவானை ஆலிங்கனம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று. ஆனால் அதை வெளியே சொல்லிக் கொள்ளக் கூச்சம். ராமருடைய சரீரம் எப்படியிருக்கும்? ஸில்க்குக்கு மேலே ம்ருதுவாயிருக்கும். பரம ம்ருதுவான அவருடைய கருணை உள்ளமேதான் அப்படி பச்சை வெல்வெட் மாதிரியான சரீரமாக ஆகியிருந்தது. ‘அப்படிப்பட்ட உடம்பை இந்தக் கரடி உடம்பை வைத்துக் கொண்டு ஆலிங்கனம் பண்ண நினைப்பதா?’ என்றே ஜாம்பவான் தம்முடைய ஆசையை அடக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்படியே இவர் ஆசைப்பட்டிருந்தால்கூட ராமர், எத்தனைதான் கருணாமூர்த்தி என்றாலும் அதற்கு ஒப்புக் கொண்டிருக்கமாட்டார். ஏனென்றால் தம் சரீரத்தை மாத்திரம் அவர் ஸீதை ஒருத்திக்கே ஸொத்து என்று கொடுத்து விட்டவர். அவரைப் போல ஏகபத்னி வ்ரதாநுஷ்டானத்தில் தீவிரமாயிருந்தவர் யாருமில்லை. ஜாம்பவான் மட்டுந்தானென்றில்லை, எல்லா ஆசைகளையும் விட்ட தண்டகாரண்ய ரிஷிகளுக்கே ராமருடைய திவ்ய மங்கள மூர்த்தியைப் பார்த்தவுடன் அப்படியே சேர்த்துப்பிடித்து – ‘சிக்கெனப் பிடித்தேன்’ என்கிறதுபோல – கட்டிக் கொள்ளணும் போலத்தான் இருந்ததாம். அவர்கள் நல்ல யோக்யதையுள்ளவர்களாதலால், ஜாம்பவான் மாதிரி தயங்காமல், ராமரிடமே போய்த் தங்களுடைய ஆசையை விஞ்ஞாபித்துக் கொண்டார்களாம். அப்போது ராமர், “இந்த அவதாரத்திலே இந்த சரீரத்தில் ஸீதை ஒருத்திக்குத்தான் பாத்யதை. அதனால் அடுத்த அவதாரத்திலே உங்கள் ஆசையைத் தீர்த்து வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டாராம். அந்த ரிஷிகள்தான் க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகா ஸ்த்ரீகளாகப் பிறந்தார்கள் என்று சொல்வதுண்டு.
ரிஷிகள் ஸமாசாரம் இது. கரடி ஸமாசாரம் என்ன ஆவது? கரடியைத்தான் ராமர் சிரஞ்ஜீவியாக்கிவிட்டாரே! அது எப்படி ரிஷிகள் மாதிரி இன்னொரு ஜன்மா எடுத்து க்ருஷ்ணாவதாரத்தில் தன் ஆசையைப் பூர்த்தி பண்ணிக் கொள்ள முடியும்? இப்போதும் அது, ராமர்தான் க்ருஷ்ணராக வந்திருப்பது என்று தெரிந்து கொண்டால்கூட, ‘இந்தக் கம்பளி உடம்பை வைத்துக்கொண்டு அந்தப் புஷ்ப சரீரத்தை ஆலிங்கனம் செய்துகொள்வதாவது?’ என்று ஆசையை அமுக்கித்தானே வைத்துக்கொள்ளும்? அதனால் அதன் இஷ்ட பூர்த்திக்கு ஒரே வழி சண்டையில் கட்டிக்கொண்டு புரளும்படிப் பண்ணுவதுதான் என்று பகவான் ‘ப்ளான்’ பண்ணி வைத்திருந்தார். மநுஷ்ய லீலைக்குள்ளேயே இப்படி ரஹஸ்யமாக அநேக திவ்ய உத்தேசங்கள்!
இப்படியேதான் அர்ஜுனன் உபாஸித்து வந்த பரமேச்வரனும் கிராத (வேட) வேஷத்தில் அவனோடு கட்டிப்புரண்டு சண்டை பிடிக்கும் வியாஜத்தில் அங்கஸங்க பாக்யத்தைக் கொடுத்தார்.
நாள் பாட்டுக்கு ஒன்று, இரண்டு என்று ஓடிக்கொண்டிருந்தது. வெற்றி தோல்வி இல்லாமல் க்ருஷ்ணரும் ஜாம்பவானும் யுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். கொஞ்சநாள் வரையில் வெளியில் காத்துக்கொண்டிருந்த யாதவ ஜனங்கள், ‘இன்னம் எத்தனை நாள் வீடு வாசலை விட்டுவிட்டுக் காட்டிலே காத்துக்கொண்டு கிடப்பது? உள்ளே போன க்ருஷ்ணன் கதை முடிந்து போயிருக்கும். நாம் ஆபத்தில் சிக்கிக் கொள்ளவேண்டாம்’ என்று த்வாரகைக்குத் திரும்பிவிட்டார்கள். மநுஷ்ய ஜாதியின் நன்றி விச்வாஸம் அவ்வளவுதான்.
குகைக்குள்ளே இருபத்தோரு நாள் த்வந்த்வ யுத்தம் நடந்தது. அத்தனை நாளுக்குள்ளேயே ஜாம்பவானக்கு அசக்தம் வந்துதான் விட்டதென்றாலும், அந்த நீலமேக ச்யாமள காத்ரம் தம்மேல் படுவதில் தமக்கே காரணம் தெரியாத ஒரு பெரிய ஸெளக்யத்தை அவர் அநுபவித்ததால்தான் ஒருமாதிரி ஈடுகொடுத்து வந்தார். இப்போது, முழுசாக மூன்று வாரம் ஆன பிறகு ஜாம்பவானால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ராமசந்த்ர மூர்த்தியின் அநுக்ரஹ பலமே தம் பலம் என்று நன்றாகத் தெரிந்து கொண்டவர் அவர். ‘ராமா, ராமா’ என்று சொல்லிக் கொண்டேதான் அவனுடைய அடுத்த அவதாரத்தை அடித்துக் கொண்டிருந்தார்!
‘அந்த அநுக்ரஹ பலத்தையும், நாமாவின் சக்தியையும் மிஞ்சித் தம்முடைய வலுவை எதிரேயிருக்கிற ஆஸாமி குன்ற வைக்கிறானென்றால், அவன் யார்? யாராயிருக்க முடியும்? அவனுடைய ஸ்பர்சம் ஏன் இத்தனை இன்பமாயிருக்கிறது?’ என்று கொஞ்சம் யோசித்தார்.
பளிச்சென்று புரிந்துவிட்டது.
‘இந்த விளையாட்டையே இன்னம் இத்தனை நாள் விளையாடுவது? இன்னம் எத்தனையோ விளையாட்டெல்லாம் விளையாடியாகணுமே!’ என்று பகவானேதான் ஜாம்பவானுக்கு உண்மையைப் புரியவைத்தாரென்று சொல்லலாம்.
‘அடாடா! என்ன அபசாரம் பண்ணிவிட்டோம்? தேடிக்கொண்டு இந்தக் காட்டுக்குஹைக்கு வந்திருக்கிற நம்முடைய உபாஸனா மூர்த்தியையே இப்படி அநியாயமாக அடித்துப் புடைத்துவிட்டோமே’ என்று ரொம்பவும் பச்சாதாபத்தில் மனஸ் உருகினார் ஜாம்பவான். பகவானின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அடிப்பதை ‘பூசை கொடுப்பது’ என்கிற வழக்கமிருக்கிறது. யாரைப் பூஜிக்கவேண்டுமென்று ஜாம்பவான் நினைத்துக்கொண்டிருந்தாரோ அவரையே சாத்து சாத்து என்று சாத்தியதில்தான் இந்த வசனம் பிறந்ததோ என்னவோ?
காலில் விழுந்த பக்தரை பகவான் தட்டிக்கொடுத்து அன்போடு க்ஷமித்து ஆச்வாஸம் பண்ணினார்.