ஆதிக்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளாதிருக்க : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

உத்தரமேரூர் சாஸனப்படி மேல் வரம்பு வைத்ததில் இன்னொரு ஸாரமான அம்சமும் இருக்கிறது. ஒருத்தர் ஆரம்பகாலத்தில் ஏதோ த்யாகம் கீதம் செய்தோ, அல்லது மிக உயர்ந்ததான ஒரு திட்டத்தைப் போட்டோ, இயக்கத்தை நடத்தியோ ஜனங்களிடம் ப்ராபல்யம் பெற்றுவிட்டால் அப்புறம் ஸாமான்ய மக்களுக்கு அவர்களிடம் ஏற்பட்டு விடுகிற பற்றினால்- இதை பக்தி அல்லது மோஹம் என்றே சொல்லிவிடலாம்; இப்படிப்பட்ட மோஹத்தினால்- பிற்பாடு அவர்கள் என்ன செய்தாலும் அது ஸரி என்றே ‘ஆமாம் பூசாரி’ போட ஆரம்பித்து விடுகிறார்கள். தலைவர்கள் தப்பாகப் போனாலும் அதைப் பார்க்காமலே இருக்கிறார்கள். விஷயம் தெரிந்தவர்கள் தப்பை எடுத்துக் காட்டிக் கண்டித்தாலும் பொதுஜனங்கள் ஆதரிக்காமல் தங்கள் தலைவர் வைத்ததே சட்டம் என்று கூத்தாடுகிறார்கள். அந்தத் தலைவர்களும் தங்களை வலுவாக ஸ்தாபித்துக் கொள்வதற்காகச் செல்வாக்குப் பெற்ற பலபேரை வளைத்துப் போட்டுக்கொண்டு ‘க்ரூப்’கள் உண்டாக்கிக் கொள்கிறார்கள். இந்தத் தலைவர்கள் உச்சியில் இருக்கும்வரை தங்கள் அநேக ஸௌகர்யங்களையும் சலுகைகளையும் பெறலாமென்பதால் ‘க்ரூப்’ பிலுள்ள உபதலைவர்களும் அந்தத் தலைமை தளராமலிருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய முற்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு தலைவர் அதிகார ஸ்தானத்தைப் பிடித்து விட்டாரென்றால் அப்புறம் அவரை இறக்குவது என்பது முடியாமலே போகும். அவர்களாக விட்டால்தான் உண்டு, இல்லாவிட்டால் உயிரை விட்டால்தான் உண்டு என்னும்படியாக எண்பது, தொண்ணூறு வயஸுவரைக்கூடத் தங்களது ஆதிக்ய சக்தியால் அதிகார ஸ்தானங்களைப் பிடித்து வைத்துக்கொண்டு தங்கள் மனம் போனபடி செய்த தலைவர்கள் எல்லா தேசங்களிலும் உண்டு. இப்படி நேராமல் தடுக்க உத்தரமேரூர் சாஸனம் இரண்டு விதத்தில் வழி வகுத்திருக்கிறது.

ஒன்று, வருஷா வருஷம் இம்மாதிரி ஸபை மெம்பர்களைத் தேர்ந்தெடுப்பதென்று வைத்து, ஒரு வருஷம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடுத்த மூன்று வருஷங்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது என்று விதி செய்திருப்பது.

ஸபையின் அநேக கார்யங்களைக் கவனிக்கும் அநேக கமிட்டிகளில் ஒன்றில் ஒவ்வொரு ஸபை மெம்பருக்கும் பொறுப்பு கொடுத்திருக்கும். ஸபையில் பேசி விவாதிப்பது தவிர மெம்பருக்கு பதவி அல்லது உத்யோகம் மாதிரி இருப்பது இந்த கமிட்டிப் பொறுப்பு.(இதைப் பற்றி வேறு சில விஷயங்கள் அப்புறம் சொல்கிறேன். இங்கே எவரொருவரும் தன்னைத் தலைவரென்று அசைக்க முடியாமல் நிலை நாட்டிக் கொள்கிற பொதுநல விரோதமான போக்கைப் பற்றி மட்டுமே சொல்ல வந்தேன்.) ‘இந்தப் பதவி அல்லது அதிகார ஸ்தானத்தில் ஒருவரும் ஒரு வருஷத்துக்கு மேலே ஒட்டிக்கொண்டு வேர் விட முடியாது; ஒரு வருஷம் பதவி வஹித்தால் அப்புறம் மூன்று மடங்கு காலம் அதிலிருந்து விலகி இருக்கவேண்டும்’ என்று வைக்கிறபோது ஒருவருக்கு ப்ராபல்யத்தால் ஜனங்களிடையே ஏற்படுகிற ஆகர்ஷண மோஹமும், ஆதிக்ய சக்தியால் தன்னை மேலும் மேலும் ஆழமாக நிலைநாட்டிக் கொள்கிற வாய்ப்பும் வெகுவாகக் குறைபட்டுவிடுகின்றன.

தனிமனிதரின் தலைமை சாச்வதமாகி விடாமல் தடுப்பதற்குச் செய்த இரண்டாவது ஏற்பாடுதான், எத்தனைபெரியவரானாலும் எழுபது வயஸுக்குமேல் எவரும் ஸபை மெம்பராக இருப்பதற்கில்லை என்று வைத்தது.

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்றபடி ஒரு கட்டத்தில் முன்தலைமுறையினர் பின் தலைமுறையினருக்கு இடந்தர வழி செய்வது வயஸுக்கு மேல் லிமிட் வைத்திருப்பதுதான். கீழ் லிமிட் எதற்கென்றால் அநுபவமே இல்லாத ரொம்பவும் இளந்தலைமுறை பொது நிர்வாஹத்தில் புகுந்து அவஸரக் கோலமாய் எதையும் செய்துவிடக்கூடதே என்பதற்காக.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மூதறிஞர்களின் ஆலோசனைக் குழு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கல்வித் தகுதி
Next