கல்வித் தகுதி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வயஸு நிர்ணயம் சாஸனத்தின் ஸபை அங்கத்தினருக்கு விதித்த மூன்றாவது யோக்யதாம்சம். நாலாவது யோக்யதாம்சம் கல்வி பற்றியது. ஸபை அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் நல்ல படிப்பாளியாக இருக்கவேண்டும் என்று விதி செய்திருக்கிறது. அந்தக் காலத்தில் படிப்பு என்றால் முக்யமாக சாஸ்த்ரப் படிப்புதான்.

எல்லாம் சாஸ்திரந்தான்– டான்சை பரத சாஸ்திரம் என்கிறோம், ஸயன்சை விஞ்ஞான சாஸ்திரம் என்கிறார்கள். ஆனாலும் பழையநாள் கல்வித் திட்டத்தில் சாஸ்திரம் என்றால் முதலில் ஆத்மாவைப் பற்றிய, பரமாத்மாவைப் பற்றிய வைதிகமான சாஸ்திரங்கள்தான்; அப்புறம் அதற்குள்ளேயே ஸூசனையாக வருகிற நன்னெறி, நல்வழிக்கோட்பாடுகளை விவரித்து விஸ்தாரமாக விதிகள் வகுத்து எழுதிய தர்ம சாஸ்திரம் , நீதி சாஸ்திரம் முதலியன; அதற்கப்புறம் காவ்யம், ஜாகரஃபி, ஹிஸ்டரி, கணிதம், ரஸாயன சாஸ்திரம் (என்கிற கெமிஸ்ட்ரி) பௌதிக சாஸ்திரம் (என்கிற ஃபிஸிக்ஸ்) இத்யாதிகள் – அறுபத்துநாலு கலைகள் என்பதில் எல்லா ஸயன்ஸ், ஆர்ட்ஸ் விஷயங்களும் வந்துவிடும். அத்தனையிலும் முக்யம் வைதிக வாழ்க்கை முறையையும் ஆசார அநுஷ்டானத்தையும் சொல்லும் சாஸ்திரம். எத்தனை சாஸ்திரங்களிருந்தாலும் ‘சாஸ்திரிகள்’ என்று அந்த ஒரு சாஸ்திரம் அறிந்தவரைதான் சொல்கிறோம் ? இப்போது கல்வி முறைக்கு அடியோடு ஸம்பந்தமில்லாததாக, பொது ஜனங்களை ‘முன்னேற்றும்’ கல்விக்கு முட்டுக்கட்டையாக இருப்பதென்றே விரோத பாவத்துடன் கருதப்படுவதாக இருக்கின்ற வேத தர்ம ஸமயாச்சாரந்தான் அன்றைய கல்வி முறைக்கு அச்சாக, ஆணிவேராக இருந்தது. இப்படிப்பட்ட கல்வியில் தேர்ச்சி பெற்றவரே ஊர் ஸபைத் தேர்தலுக்கு அபேக்ஷகராக இருக்கமுடியும் என்று விதி செய்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆதிக்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்ளாதிருக்க
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ப்ராம்மணரை மட்டும் குறிப்பதாகாது
Next