ப்ராமணரை மட்டும் குறிப்பதாகாது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அபேக்ஷகர் நல்ல வைதிகக் கல்வி பெற்றவராயிருக்க வேண்டும்; சாஸன வாசகப்படி ‘ வேதத்திலும் சாஸ்திரத்திலும் நிபுணரென்னப்பட்டிருப்பார்’ – ஆக இருக்கவேண்டுமென்பதைப் பார்த்தால், ப்ராமணருக்கு மாத்திரம்தான் அபேக்ஷா உரிமையா என்று தோன்றலாம். ‘அப்படியானால் ஊர்ஸபை நிர்வாஹமே ப்ராமணர்களிடம்தான் போகுமென்றல்லவா ஆகிறது? எல்லா வர்க்கங்களுக்கும் ப்ரதிநிதித்வம் தரும் ஜனநாயகத்துக்கு இது எதிரானதல்லவா?’ என்று கேட்கலாம்.

க்ராம மஹா ஸபை எல்லா ஜாதியாருக்கும் இடம் கொடுத்தது என்பதைப் பற்றிக் கொஞ்சங்கூட ஸந்தேஹப்படவேண்டாம். க்ராமத்தின் முப்பது வார்டுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு ப்ரதிநிதி வீதம் முப்பது பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம்தான் ஸபை ஒப்புவிக்கப்பட்டது என்பது சாஸனத்திலிருந்து ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. அந்தக் காலத்தில் எல்லா ஜாதியாரும் கலந்து வஸித்தென்பது கிடையாது. க்ராமத்தின் ஒவ்வொரு பகுதியில் மட்டும், ஒரு தெரு அல்லது சில தெருக்களில்தான் ஒவ்வொரு ஜாதியாரும் தனித்தனியாக இருந்துகொண்டிருப்பார்கள். அக்ராஹாரத்தில் மட்டும்தான் ப்ராமணர்கள் இருப்பார்கள். சேணியர் தெரு, கருமார் தெரு, சாணார் தெரு என்று இப்படியே ஒவ்வொரு ஜாதியார் மாத்திரம் ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்ததைக் காட்டும் பெயர்கள் இன்றைக்கும் அநேக ஊர்களில் இருப்பதைப் பார்க்கிறோம். முப்பது குடும்பில் (குடும்புதான் வார்டு) முப்பது அக்ரஹாரம் இருந்தே இருக்காது. ஒரு க்ராமத்தில் ஒரு அக்ரஹாரம்தான் இருந்திருக்கும். ரொம்ப ப்ராமண ஸங்கியையில் உயர்ந்த பெரிய அக்ரஹாரமென்றாலும்கூட அது நாலைந்து குடும்புகளுக்கு மேல் பரப்புக்கொண்டதாக இருந்திருக்காது. ஆகையால் ஒரு குடும்புக்கு ஒரு ப்ரதிநிதி என்ற முறைப்படி நாலைந்து ப்ராமணர்களுக்கு மேல் ஸபையில் மெம்பெர்ஷிப் பெற்றிருப்பதற்கில்லை. மற்ற பெருவாரியான மெம்பர்கள், மற்ற ஜாதியினரைக் கொண்ட ஏனைய குடும்புகளிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள் – அவர்கள் அந்த வெவ்வேறு ஜாதியினராகத்தான் இருந்திருக்க முடியும்.

ஸொத்து குறித்த ஷரத்தில் ‘ஒரு வேதம் வல்லானாய், நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவா’னாயுள்ள ப்ராமணனை மட்டும் தனியாகப் பிரித்து, ‘ரிலாக்ஸேக்ஷன்’ கொடுத்திருப்பதாலேயே மற்ற ஜாதியினருக்கும் எலெக்ட் ஆக உரிமை உண்டு என்று நிச்சயப்பட்டு விடுகிறதே! ‘வேத சாஸ்திர நிபுணர்’ என்பது ப்ராமணனைக் குறிப்பதானால், ஒரு வேதமும் ஒரு பாஷ்யமும் படிக்காத எந்த ப்ராமணனையுமே ‘நிபுணர்’ என்று சொல்ல முடியாதாகையால், இப்படிபட்டவனைப் பிரித்துச் சொல்ல இடமே உண்டாகாது.

ஆகையால், இங்கே வேத சாஸ்திரத்தில் நைபுண்யம் (நிபுணத்தன்மை) என்று சொல்வது வேதத்தை நேரே படித்தறிந்து அத்யயனம் செய்வதைக் குறிப்பதல்ல; வேத சாஸ்திரக் கருத்துக்களை நன்கு அறிந்திருப்பதே இங்கு குறிப்பிடப்படுவது என்று ஊஹித்துக் கொள்ளலாம். எல்லா ஜாதியிலும் இப்படிப்பட்டவர்கள் நிறைய இருந்தார்கள். அப்பர், சேக்கிழார், நம்மாழ்வரைவிடப் பெரிய உதாரணம் வேண்டாம்.

படிப்பாளிகளாக இல்லாமலும் மஹா புத்திமான்களாக யாராவது இருக்கலாமாயினும், இது எக்ஸெம்ப்ஷனே தவிர (அபூர்வமான விலக்கே தவிர) ஜெனரல் ரூல் இல்லை (பொதுவிதி இல்லை) என்பதால்தான் கல்வித் தகுதி வைத்தார்கள். எதையும் சான்ஸுக்கு விட்டுவிடக்கூடாது. உறுதியாக நிர்தாரணம் பண்ணித்தர வேண்டுமென்பதுதான் அபிப்ராயம்.

நம்முடைய கான்ஸ்டிட்யுவென்ட் அஸெம்ப்ளிக்கே (அரசியல் நிர்ண ஸபைக்கே) அக்ராஸனராக இருக்கும் ராஜேந்த்ர ப்ரஸாதும் அபேக்ஷர்களுக்கு இப்படிப்பட்ட (கல்வித்) தகுதி இருக்கவேண்டுமென்று நினைத்து, அதை வெளியிட்டுச் சொன்னவர்தான்.

பேரே சட்ட ஸபை. அதாவது அதன் முக்ய வேலை அநேக சட்டங்களைப் போடுவது. இந்தச் சட்டங்களைக் குறித்த பாயிண்ட்களை விசாரித்துத் தீர்ப்புச் செய்கிற ஜட்ஜ்கள், அவற்றை விவாதிக்கிற வக்கீல்கள் ஆகியோருக்கெல்லாம் கல்வியறிவு இருந்தே தீர வேண்டுமென்று விதித்திருக்கிறது. அப்படியிருக்க, சட்டத்தையே செய்கிறவர்களுக்கு அதன் இம்ப்ளிகேஷன்கள் (உட்கிடைகள்), அதனால் ஏற்படக்கூடிய ஸாதக பாதகங்கள் ஆகியவற்றை அறிவதற்கான பொதுக் கல்வி அறிவு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது ந்யாயந்தானே?

அதோடு, ஏதோ ஓரளவுக்கு மட்டுமே, சில துறைகளில் மட்டுமே பொது ஸமூஹ வாழ்க்கையில் ராஜாங்கம் ப்ரவேசிப்பது என்றில்லாமல், அதாவது உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் சண்டை சச்சரவு வராமல் ரக்ஷிப்பது, ரயில்வே – தபால் முதலான பொது ஸௌக்யங்களைச் செய்வது தருவது முதலான விஷயங்களில் மட்டுமில்லாமல் ராஜாங்கமானது Welfare State என்ற பெயரில் பொது ஸமூஹ வாழ்க்கை, தனிமனித வாழ்க்கை ஆகியவற்றின் ஸகல துறைகளிலும் ப்ரவேசித்துச் சட்டங்களைச் செய்கிறபோது, இவற்றிலெல்லாம் basic knowledge (அடிப்படையான அறிவு) பெறக்கூடிய அளவுக்குப் படிப்பறிவு இருந்தால்தானே தேவலை? இந்த மாதிரி ராஜேந்த்ர ப்ரஸாத் ஏதாவது சொன்னால் — ‘ஹிண்டு கோட் பில்’ விஷயமாகக்கூட விவாஹரத்து முதலான சிலவற்றை அவர் ஆக்ஷேபித்துச் சொன்னார் — உடனே நேரு, இந்தச் சீர்திருத்தமெல்லாம் பண்ணாவிட்டால் தன்னுடைய அரசாங்கத்திடமே கான்ஸ்டிட்யுவென்ட் அஸெம்ப்ளிக்கு ‘கான்ஃபிடென்ஸ்’ (நம்பிக்கை) இல்லை என்று சொல்கிறதாகத்தான் அர்த்தமாகும் என்று சொல்லி, ராஜிநாமா பண்ணுவது போல பயமுறுத்தியே பில்கள் பாஸ் ஆகும்படிப் பண்ணுவது வழக்கமாயிருப்பதைப் பார்க்கிறோம்.

இந்தப் புதுக்கதை இருக்கட்டும்; பழைய கதையைப் பார்க்கலாம். அடுத்த யோக்யதாம்சத்துக்குப் போகலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கல்வித் தகுதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  உயிர்நிலை
Next