மணியில் விளைந்த திருமணங்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஜாம்பவான் அவரிடம், “நானே உங்கள் உடைமைதான். ஆனதால், உங்களுக்கில்லாமல் எனக்கென்று எந்த உடைமையும் கிடையாது. உங்களுடையதேயான ஸ்யமந்தக மணியை உங்களுக்கே திரும்பவும் அர்ப்பணம் பண்ணுகிறேன். அதோடு கன்யாமணியான இந்த ஜாம்பவதியையும் தாங்கள் அங்கீகாரம் செய்துகொள்ளவேணும்” என்று விஞ்ஞாபித்துக் கொண்டார்.

பெண்மணி, நாரீமணி என்பதாக ஸ்திரீகளை ரத்னத்தோடு வைத்து உயர்த்திச் சொல்கிற வழக்கமிருக்கிறதல்லவா?

ஜாம்பவதியின் அபிலாஷையும் பூர்த்தியாயிற்று. பகவான் ஸ்யமந்தகத்தோடு, அவளையும் ப்ரீதியுடன் பத்னியாக ஏற்றார்.

த்வாரகைக்குப் புது பத்னியோடும், தம் மீதான பழி தீரும்படி ஸ்யமந்தகத்தோடும் திரும்பி வந்தார் பகவான்.

முதல் கார்யமாக அந்த மணியை ஸத்ராஜித்திடம் சேர்ப்பித்துவிட்டார்.

ப்ரஸேனன் சிங்கத்திடம் தன் உயிரோடு சேர்த்துப் பறி கொடுத்த மணியை, அப்புறம் அந்த சிங்கத்திடமிருந்து இன்னொருவர் அடைய, அந்த ஒருவரை இவர் யுத்தத்தில் ஜயித்தே மணியைப் பெற்றதால் சட்டப்படி அதை இவரே வைத்துக் கொள்ள நியாயமிருந்தது. ஆனால் பொருள் பற்று பகவானக்கு எள்ளளவும் இல்லாததால், தாம் குற்றவாளி அல்ல என்ற ஸமஸ்த ஜனங்களுக்கும் இப்போது நிரூபித்துக் காட்டியதோடு த்ருப்தியடைந்து விட்டார். உதாரமனஸோடு மணியை ஸத்ராஜித்துக்கே கொடுத்துவிட்டார். அவன்தானே அதை ரொம்பவும் பெரிசாக எண்ணித் தபஸிலிருந்து அடைந்தவன்?

இப்போது பகவான் கையிலிருந்து அதைப் பெற்றுக் கொண்ட பிறகோ அவனுக்கு அது அபூர்வ வஸ்துவாக ஆனந்தம் கொடுக்கவில்லை. அவன் மனஸை அது உறுத்தத்தான் செய்தது. ‘ஒரு பாபமுமறியாத க்ருஷ்ணனைப் பற்றி மித்யாபவாதம் செய்த தோஷத்துக்கு ஆளாகிவிட்டோமே!’ என்று ரொம்பவும் வ்யாகுலப்பட்டான். என்ன ப்ராயசித்தம் பண்ணலாம் என்று யோசித்தான்.

ஜாம்பவான் செய்ததையே தானும் செய்வதுதான் ப்ராயச்சித்தம் என்று முடிவு செய்து, தன்னுடைய குமாரியான ஸத்யபாமாவை பகவானுக்குக் கன்யாதானம் பண்ணிக் கொடுத்தான். ஜாம்பவானுக்குப் பிள்ளைக் குழந்தையும் இருந்தது. ஸத்ராஜித்துக்கோ ஸத்யபாமா ஏகபுத்ரி. அவள் பூதேவியின் அவதாரம். ருக்மிணிதான் ஸ்ரீதேவி.

ஸ்யமந்தகத்தினால் முதலில் பகவானுக்குப் பழி கிடைத்தது. அப்புறம் ஒட்டிக்கு இரட்டியாகப் பத்னிகள் கிடைத்தார்கள்!

ஜாம்பவானைப் போலவே ஸத்ராஜித்தும் கன்யாரத்னத்தோடு ஸ்யமந்தக ரத்னத்தையும் பகவானக்கு – ‘கோபால ரத்னம்’ எனப்படுபவருக்கு – அர்ப்பணம் செய்தான். ஆனால் அவர் பாமாவை மட்டும் அங்கீகாரம் பண்ணிக்கொண்டு, பிடிவாதமாக ஸ்யமந்தகத்தை, ஸத்ராஜித்திடமே திருப்பிவிட்டார். “உங்களிடமிருந்தாலும் என்னிடம் இருக்கிற மாதிரிதானே?” என்று அழகாகச் சொல்லிச் சமாளித்து விட்டார். அவனுக்கு இருந்தது ஒரே பெண்ணானதால் அவன் ஸொத்து பூராவும் அப்புறம் இந்த தம்பதிக்குத்தானே வரவேண்டுமென்பதால் அவனும் அதற்குமேல் ‘ப்ரெஸ்’ பண்ணாமல் ஸ்யமந்தகத்தைத் தானே வைத்துக்கொண்டான்.

கதை முடியவில்லை. இன்னும் பிள்ளையார் ப்ரஸ்தாவமே வரவில்லையே!

ஸத்ராஜித் நினைத்தது தன் ஆயுஸ் முழுக்க மணி தன்னிடமிருந்து விட்டு அப்புறம் பெண் – மாப்பிள்ளையை அடையும் என்று. ஆனால் அந்த மணியோ அவனுடைய ஆயுஸையே குடித்துவிட்டு இன்னம் எத்தனையோ கஷ்டங்களையும் உண்டாக்கவிருந்தது!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சண்டையில் ஸ்பரிச இன்பம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பெண்ணால் விளைந்த பகைமை
Next