ஸெலக்ஷன், எலெக்ஷன் பொறுப்பாளர்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘வைத்தார்கள்’, ‘செய்தார்கள்’, என்றால், அப்படிப் பண்ணியது யார்? ‘க்ராம மஹாஸபை எப்போதும் நடந்து கொண்டுதானே இருக்கும்? அதுதான் இப்படி யோக்யதை பெற்ற அபேக்ஷகர்களையெல்லாம் பொறுக்கியெடுத்துத் தேர்தல் நடத்தியிருக்கும். அதாவது நடப்பு ஸபை அடுத்த ஸபைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்களை செலக்ட் செய்திருக்கும்’ என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில் இப்படி நடக்கவில்லை. நடப்பு ஸபை அடுத்த ஸபைக்கான தேர்தலை நடத்துவது என்பதிலேயே பல ஊழல்கள் நடக்க இடமுண்டு. அக்காலத் தேர்தல் விதிப்படி நடப்பு மெம்பர்கள் அடுத்த ஸபைக்கு மெம்பராக முடியாது, அவர்களுடைய பந்துக்களும் மெம்பராக முடியாது என்பது வாஸ்தவந்தானானாலும் தங்களுக்கு வேண்டப்பட்ட ஸ்நேஹிதர்கள், பவ்யப்பட்டவர்கள் ஆகியோரை அடுத்த ஸபையில் அங்கத்தினராகக் கொண்டுவந்து ஸ்வய லாபம் பெறக்கூடுமல்லவா? இதையும் தடுக்கவேண்டுமென்பதில் நம் முன்னோர் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கிறார்கள். அதனால் அடுத்த தேர்தலில் இப்போதுள்ள ஸபையினரின் ஸம்பந்தம் இல்லாதபடி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

தற்போது நம் குடியரசில் நடத்தவிருக்கும் முறையில் ஒரு ஸந்தேஹம் வரலாம் – அதாவது ஒரு தேர்தல் நடக்கும் போது அதிகாரத்திலுள்ள ராஜாங்கத்தினர் அந்தத் தேர்தலை நடத்துவதிலேயே, மற்ற கட்சிகளுக்கு இல்லாமல் தங்களுக்கு மட்டும் இருக்கிற அதிகார பலம் முதலான ‘அட்வான்டேஜ்’களைக் கொண்டு தங்களுக்கு  ஸாதகமாக ஏதேனும் பண்ணிக்கொண்டுவிட முடியுமோ என்று தோன்ற இடமிருக்கிறது. கட்சி ஆட்சி என்று ஏற்பட்டு, ஏதோ ஒரு கட்சியின் நிர்வாஹத்தில் அடுத்த தேர்தல் நடக்கிறதென்றால், கொஞ்சம் ஸந்தேஹாஸ்பதமாக ஏதாவது தோன்ற இடமுண்டுதானே?*

இதற்கு இடமே இல்லாதபடி, நடப்பு ஸபை மெம்பராயிருந்து, ‘வாரியம்’ என்ற பல கமிட்டிகளில் ஏதாவதொன்றில் பதவி வஹிப்பவர்களான இந்த முப்பது பேருமே பதவி விலகிவிட வேண்டும். அதற்கப்புறம் ‘தர்ம க்ருத்ய ஸபைகள்’ எனப்படுவனவற்றின் பொறுப்பின் கீழேயே, மத்யஸ்தர்களைக் கொண்டு தேர்தல் நடத்தவேண்டும் என்று சாஸனம் விதிக்கிறது.

இந்த தர்ம க்ருதய ஸபைகள் என்பவை என்னவென்றால் – க்ராம மஹாஸபை தவிர, அதன் முப்பது குடும்புப் பிரிவினை தவிர, அவரவரை ஸ்வதர்மப்படி கர்மா செய்விக்கிற பன்னிரண்டு நாட்டாண்மைகளின் கீழ் க்ராமத்தை பன்னிரண்டு சேரிகளாகப் பிரித்திருந்தது. சேரி என்றால் என்னவோ, ஏதோ என்று நினைக்கவேண்டாம். அக்ரஹாரமும் ஒரு சேரிதான். இவற்றுக்கான பன்னிரண்டு நாட்டாண்மைக்காரர்கள்தான் தர்ம் க்ருத்ய ஸபைகள் என்று ஊஹம் செய்து சொல்கிறார்கள். இவை ஒன்றுசேர்ந்தே தேர்தல் நடத்தியது. “பன்னிரண்டு சேரியிலும் தர்மம் கிருத்தியங் கடைகாணும் வாரியரே மத்தியஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பாராகவும்” என்று சாஸனத்தில் இருக்கிறது.

க்ராம மஹாஸபையினர் எல்லாரும் ஒரு வருஷ டெர்ம் முடிந்ததும் வெளியேறிவிடுவார்கள். அப்புறம் மத்யஸ்தர்கள் உதவியோடு அவசியமான காரியங்களுக்காக ‘இன்டரிம் அட்மினிஸ்ட்ரேஷன்’ (இடைக்கால நிர்வாஹம்) தர்ம க்ருத்ய ஸபைக்காரர்களாலேயே நடத்தப்படும். அடுத்த ஸபைக்கான அபேக்ஷகர்களின் ஸெலக்ஷன், அப்புறம் அதற்கான எலெக்ஷன் ஆகியன இவர்கள் பொறுப்பிலேயே நடக்கும்.

ஒரே ஒரு ஊர் வ்யாவஹாரம்தானாதலால் இந்த ‘இன்டரிம் பீரியட்’ ஒரு சில நாட்களாகத்தான் இருக்கும். அதற்குள் ஸெலக்ஷன், எலெக்ஷன் எல்லாம் நடந்துவிடும்.

ஊர் ஸபை என்ற ஒரே body-ன் (அமைப்பின்) கீழ் ஒன்றாகக்கூடிப் பணி செய்த முப்பது பேர் அடுத்த வருஷ ஸபைக்கான அபேக்ஷகர்களை ஸெலக்ட் செய்தால், இவர்கள் தங்களுக்குள் கலந்துகொண்டு தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமாறும், இப்போது தாங்கள் செய்த தப்பு தண்டாக்கள் அடுத்த ஸபையிலே வெளிவராதவாறும் ஸெலக்ஷனைப் பண்ணிவிடலாம். தனித்தனியாய் வெவ்வேறு ஜாதிகளுக்கென்று அமைந்து, ஒவ்வொன்றும் ஸ்வேயச்சையாய் கார்யம் செய்துகொண்டிருக்கும் பன்னிரண்டு தர்ம க்ருத்ய ஸபைகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு ஸெலக்ஷன் செய்யும்போது அவர்கள் தங்களுக்குள் தகிடுதத்தம் எதுவும் பண்ணுவதற்கில்லை. ஒவ்வொரு ஜாதிக்கும் தன்னைப் பற்றியிருந்த தன்மான உணர்ச்சியினால், ‘நாம் ஏதாவது முறை பிசகிப் பண்ணினால் மற்ற ஜாதிகளின் நாட்டாண்மைகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?’ என்ற எண்ணம் இந்த நாட்டாண்மை ஒவ்வொன்றுக்கும் இருக்கும். ஆதலால் அவை ஸந்தேஹாஸ்பதமான எந்த யோசனையும் தெரிவிக்கவே முன் வராது.

இதிலே இருக்கும் இன்னொரு ஜனநாயக அம்சம், ஏதோ ஒரு ஜாதியாரின் ஸெலக்ஷனாயில்லாமல் ஸகல ஜாதிகளுக்கும் ‘தர்ம க்ருத்யம்’ காணும் பன்னிரண்டு சேரிகளையும் கொண்டு ஸெலக்ட் பண்ண வைத்ததாகும்.

அந்த நாட்டாண்மைகளும்கூடத் தாங்களாகவே எல்லாம் செய்வது என்றில்லாமல் மத்யஸ்தர்களைக் கொண்டு பண்ணியது கவனிக்கவேண்டிய அம்சம். இதற்கெல்லாம் மேல் ராஜாங்க அதிகாரிகள் கண்காணிப்புச் செய்திருக்கிறார்களென்பது வேளாளனையும் பட்டனையும் பற்றி முதலில் சொன்னதிலிருந்து தெரியும். இத்தனை தினுஸுகளில் தேர்தல் தூய்மையை உறுதிப்படுத்தித் தந்திருக்கிறார்கள்!

இப்போது பெரும்பாலும் எவரோ ஒருத்தர் அபேக்ஷகராக நிற்க ஆசைப்பட்டுவிட்டு, அப்புறம் பேருக்கு யாரையோ விட்டு ‘நாமினேட்’ பண்ணச் சொல்வது, ‘ஸெகண்ட்’ பண்ணச் சொல்வது என்கிறது போலில்லாமல், எவரொருத்தரும் தானாக அபேக்ஷிக்காமலே க்ராமத்தின் தர்மஸபைகளுடைய நிர்வாஹிகள் ஜனங்களின் அபிப்ராயத்தை அநுஸரித்து அபேக்ஷகர்களை ஸெலக்ட் செய்தார்கள்.

இப்போதுங்கூட மற்ற வேலைகளுக்கு அபேக்ஷகரே மனுப் போடுவது போலில்லாமல் எலெக்ஷனில் மட்டும் அபேக்ஷகர் பேரை வேறே ஒருத்தர் பிரேரணை பண்ண வேண்டும், அதை இன்னொருத்தர் ஆமோதிக்க வேண்டுமென்று இருப்பது, பொதுப்பணிக்கு வருபவன் தானே முந்திரிக்கொட்டை மாதிரி தன்னை ப்ரகடனம் பண்ணிக்கொள்வது அத்தனை அழகல்ல, மற்றவர்கள் அவனை நிற்க வைப்பதுதான் கௌரவம் என்ற எண்ணத்தில்தான். பூர்வத்தில் நிஜமாகவே இப்படி நடந்த ஏற்பாடுதான் இப்போது ஒப்புக்காகவாவது இப்படியொரு நடைமுறை ஏற்பட்டிருப்பதற்குக் காரணமாக இருக்கவேண்டும்.


* தேர்தலுக்குச் சில மாதம் முன்பே ஆளும் கட்சி பதவியிலிருந்து விலகி, ஆலோசனைக் குழுவைக் கொண்டு ராஷ்டரபதியே ஆட்சி நடத்தி, அதன் கீழ் தேர்தல் நடந்தால்தான் தூய்மையாயிருக்கும் என்ற ஒரு கருத்து குடியரசு பிறந்து, பல்லாண்டுகளுக்குப் பின்னர் எழுந்தது. ஆனால் ஸ்ரீ சரணர்களோ குடியரசு பிறப்பதற்கு ஓராண்டு முன்பே இத்திசையில் நம் சிந்தனையைச் செலுத்தும் முறையில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அபேக்ஷகர் யார்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தேர்தல் நடந்த விதம்
Next