முப்பது குடும்புகளில் ஒவ்வொன்றிலும் ஜனங்களின் பொதுவான மதிப்பீட்டின்படி தகுதிபெற்ற அபேக்ஷகர்களை தர்ம க்ருத்ய ஸபையார் மத்யஸ்தர்களைக் கொண்டு பொறுக்கி எடுத்தபின் அவர்களில் ஒவ்வொருத்தர் பேரையும் ஒரு தனி ஓலையில் எழுதிக்கொள்வார்கள். ஒவ்வொரு குடும்பிலும் பொறுக்கி எடுக்கப்பட்ட அத்தனை அபேக்ஷகர்களின் பேர்களைக் கொண்ட தனித்தனி ஓலைகளும் ஒரு கட்டாகக் கட்டப்படும். அதாவது ஒரு குடும்பின் அபேக்ஷகர்கள் எல்லாருக்குமாகச் சேர்த்து ஒரு கட்டு ஓலை. இப்படி முப்பது கட்டுகள் கட்டி வந்துசேர்ந்த பின் க்ராமத்து மஹா ஸபை கூட்டப்படும். அப்புறம்தான் ‘குடவோலை எழுதிப் புகுவது’ என்பதான தேர்தல் நடக்கும்.
அபேக்ஷகர்கள் என்று பல கட்சிகளின் பேரிலும், ஸ்வயேச்சையாகவும் பலபேர் நின்று, ஒருத்தருக்கொருத்தர் பலத்த போட்டி போட்டுக்கொண்டு, ப்ரசாரம் பண்ணிக் கொண்டு (ப்ரசாரம் என்று வரும்போது அதிலே நிஜமே தான் இருக்கமுடியும் என்று எதிர்பார்க்க முடியாது; எத்தனையோ இல்லாதது பொல்லாததுகளை ஜோடிக்கும்படியாகவும் இருக்கும் – இப்படி ப்ரசாரம் பண்ணி ஊரை இரண்டு படுத்திக்கொண்டு) வாய்ச்சண்டை, அது வலுத்து கைச்சண்டை, இவற்றைவிட ஹானிகரமான லஞ்ச ஊழல் என்றெல்லாம் ஏற்படாமல், பொதுவாகப் பொதுஜன மதிப்பைப் பெற்ற எவரும் எலெக்ட் ஆக வசதியாக அமைந்தது இந்தக் ‘குடவோலை’ முறை.
‘ஓலை’ என்ன என்று பார்த்தோம் – அதுதான் அபேக்ஷகரின் பேர் எழுதிய அந்தக்கால சீட்டு, அபேக்ஷா பத்திரம் மாதிரி என்று தெரிகிறது. அதுவேதான் வோட்டுச் சீட்டு மாதிரியும் என்பது இனிமேல் அந்தக் ‘குடம்’ என்னவென்று நாம் பார்க்கிறபோது தெரியவரும்.
குடம் என்னவென்று பார்ப்போம்.
தேர்தலுக்காக ஊர் ஸபை கூட்டப்படுமென்று சொன்னேனல்லவா? எங்கே கூடுமென்றால் ஈச்வர ஸாக்ஷியாக, பகவானுக்கு பயந்து, தேவாலயங்களின் வெளிமண்டபத்தில்தான் கூடும். அங்கே எல்லோரும் பார்க்க பப்ளிக்காகத் தேர்தல் நடக்கும். குழந்தையிலிருந்து கிழவர்வரை எல்லோரும் அதற்கு வருவார்கள். “ஸபால விருத்தம்” என்று இதை சாஸனத்தில் சொல்லியிருக்கிறது. இதுவும் நிச்சயமாக ஒரு ஜனநாயக அம்சம்தானே? ஊர் நிர்வாஹத்தில் ஊரார் எல்லாருக்கும் ‘நம்முடையது’ என்ற ஸொந்த உணர்ச்சி, ஈடுபாடு உண்டாகவும், இது வழி செய்தது.
ஸபை கூட்டப்படும் இடத்துக்குக் குடும்புக்கு ஒரு கட்டுவீதமான அந்த முப்பது ஓலைக்கட்டுக்களும் கொண்டுவரப்படும். அங்கே மேடை மத்தியிலே குடும்புக்கு ஒரு குடம் வீதம் முப்பது குடம் வைத்திருக்கும். இங்கேதான் ‘குடவோலை’யின் ‘குடம்’ வருகிறது. இதுதான் வோட்டுப் பெட்டி மாதிரி.
அக்காலத்தில் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் ஸகல விதத்திலும் ரொம்ப யோக்யதை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களை ‘நம்பிமார்’ என்று சொல்லியிருக்கிறது. ஊர் ஜனங்கள், ஊர்ப்பெரியவர்கள் எல்லாரும் கூடிய மண்டபத்தில் இந்த நம்பிமார்களுக்கு முக்யமான இடம் கொடுத்து மேடையில் உட்கார்த்தி வைத்திருக்கும். ஜன ப்ரதிநிதிகளை எலெக்ட் செய்யுமிடத்துக்கு ஈசன் ப்ரதிநிதிகளான நம்பிமார் எல்லோரும் தவறாமல் வந்து மேற்பார்வையிடவேண்டும். அதாவது அரசியல், ஸமூஹம் முதலான எல்லாவற்றின் கார்யங்களையும் ஈச்வரனுக்குப் பொதுவாக நடத்தினர்.
ரொம்பவும் நேர்மையும் கண்டிப்பும் உள்ளவர்களாக க்ராமத்தில் பெயர் எடுத்தவர்களை மத்யஸ்தர்களாக வைத்துத் தேர்தல் நடக்கும்.
ஒன்றிலிருந்து முப்பதுவரை வரிசையாக ஒவ்வொரு குடும்புக்குமான அங்கத்தினருக்குத் தேர்தல் நடக்கும். முதலில் முதல் குடும்பின் அபேக்ஷகர்களின் பேர்களைக் கொண்ட ஓலைக்கட்டை அப்படியே கட்டுப்பிரிக்காமல் நம்பிமார்களுக்குள் வயஸிலே பெரியவர் அந்தக் குடும்புக்கான குடத்துக்குள் போடுவார். இதுதான் அன்று நடந்த ‘வோட்டிங்’. அதாவது ஜனங்கள் ஒவ்வொருவரும் யாரோ ஒரு நபருக்கு வோட் போடவில்லை. ஆனால் ஜனஸம்மதமான பலருடைய பேரும் கொண்ட கட்டை ரொம்பவும் ஸீனியரான அர்ச்சகர் நன்றாகத் தூக்கிக்காட்டிக் குடத்திலே போடுவார். ஸகல ஜனங்களும் பார்க்கப் போடுவார். ‘மேல் நோக்கி எல்லா ஜனங்களும் காணுமாற்றால்’ என்று சொல்லியிருக்கிறது. இதனால் நிஸ்ஸந்தேஹமான நீதி, ஜனநாயகக் கொள்கை இரண்டும் காப்பாற்றப்படுகிறது.
அப்புறம் அங்கே ‘ஸபால விருத்தம்’ என்றபடி கூடியிருக்கும் கபடமற்ற குழந்தைகளில் ஒரு சின்னக் குழந்தையைக் கூப்பிட்டு, மேடைக்கு வரச்செய்து, குடத்துக்குள்ளே கையைவிட்டு ஓலைக்கட்டிலிருந்து ஏதாவதொரு ஓலையை எடுத்து மத்யஸ்தரிடம் கொடுக்கும்படிச் சொல்வார். குழந்தை அப்படியே பண்ணும். இதுதான் ‘தேர்தல்’ என்ற முக்ய கார்யம். குழந்தை எடுத்துக்கொடுத்த ஓலையிலுள்ள பேருக்குடையவன் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவான்.
அரசியல், ஸமூஹம் எதுவும் தெரியாத, அதனாலேயே இவற்றில் என்னென்ன கபடம் பண்ணலாம், தந்த்ரம் பண்ணலாம் என்றும் தெரியாத குழந்தைதான் மஹாஸபை ப்ரதிநிதியைத் தேர்ந்தெடுத்தது! எந்தத் தரப்பிலும் சேராத அந்தக் குழந்தையின்மூலம் ஆண்டவனின் சித்தமே வெளியாகி, அவனாலேயே ஒருவன் ஸபை மெம்பராக நியமனம் பெறுகிறான் என்ற உசந்த எண்ணத்தில் இப்படிச் செய்தார்கள்.