ஒளிவு மறைவுக்கு இடமில்லை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

குழந்தை தற்செயலாக – அதாவது தற்செயல் என்று நமக்குத் தோன்றுகிற தெய்வச்செயலாக – குடத்திலிருந்து எடுக்கிற ஓலையை மத்யஸ்தரிடம் கொடுக்கும். அதை அவர் விரிக்கப்பட்ட விரல்களுடன் கூடின கையால் வாங்கி அதிலுள்ள பேரை வாசிப்பார். ‘அக் குடுத்த வோலை மத்தியஸ்தன் வாங்கும்போது அஞ்சுவிரலும் அகல வைத்த உள்ளங்கையிலே ஏற்றுக்கொள்வானாகவும், அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும்’ என்று நிஸ்ஸந்தேஹமான ந்யாய வழியை சாஸனம் உறுதிப்படுத்தித் தருகிறது. அவர் ஏற்கெனவே ஒரு ஓலையை ஒளித்துக்கொண்டு, ‘ட்ரிக்’காக அதை இப்போத கையில் ‘ஸ்லிப்’ பண்ணிக் கொள்ளாமலிருக்கவே இப்படியெல்லாம் ஜாக்ரதை செய்திருக்கிறது.

இம்மாதிரி மத்யஸ்தர் ‘எலெக்ட்’ ஆகிறவரின் பேரைப்படித்தவுடன், ‘அவர் ஓலையில் உள்ள பேரைத்தான் படிக்கிறார், தாமாக ஏதோ ஒருத்தர் பேரை அதிலிருப்பது போலப் படித்துவிடவில்லை’ என்பதை ஸந்தேஹமற உறுதி செய்யும் பொருட்டு அங்கே இருக்கும் நம்பிமார்கள் எல்லோரும் அந்த ஓலையை ஒவ்வொருவராக வாங்கிப் பார்த்து அந்தப் பேரை ப்ரகடனம் செய்வார்கள். அப்புறம் அது அஃபீஷியலாக எழுத்தில் பதிப்பிக்கப்பட்டு, அன்னார் ஸபையின் அங்கத்தினராகிவிடுவார். இதுதான் சோழர் கால க்ராம ஸபை அங்கத்தினரின் தேர்வு முறை.

எந்தத் தனிமனிதர்கள், அல்லது கட்சியின் ஆதரவும் சாய்காலும் இல்லாமல் ஊருக்குப் பொதுவாக, ஈசனுக்குப் பொதுவாக நல்லவர்கள், யோக்யர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தேர்தல் நடந்த விதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தனிமனித கவர்ச்சி அம்சமே இல்லை
Next