பெண்ணால் விளைந்த பகைமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பாமா பரிணயமாகிக் கொஞ்ச நாளுக்கு அப்புறம் க்ருஷ்ண பரமாத்மாவின் அத்தையான குந்தியும், பஞ்ச பாண்டவர்களும் அரக்கு மாளிகையில் எரிந்துபோய் விட்டதாக ஸமாசாரம் வந்தது. அவர்கள் எரிந்து போகாமல் மறைவாக வஸித்து வருகிறார்களென்பது பகவானுக்குத் தெரிந்தாலும் தெரியாததுபோல அந்தக் குடும்பத்து மூத்தவரான த்ருதராஷ்ட்டரனை துக்கம் விசாரித்துவிட்டு வருவதற்காக ஹஸ்தினாபுரத்துக்குப் போனார். அவதாரபருஷர் இப்படி எல்லாம் மநுஷரீதியில் பண்ணிக்காட்டினார். அப்படி அவர் துக்கம் கேட்கப் போனதனாலேயே த்வாரகையில் அவருடைய புதிய பத்னி பாமாவுக்குப் பெரிய துக்கம் ஸம்பவித்தது.

சததன்வா என்று யாதவர்களில் ஒரு முரட்டுப் பேர்வழி. க்ருதவர்மா, அக்ரூரர் என்றும் அவர்களில் இரண்டு முக்யபுருஷர்கள் உண்டு. இந்த இருவர் கிருஷ்ணருக்கு ரொம்பவும் பக்ஷமாக இருக்கப்பட்டவர்கள். அதிலும் அக்ரூரர் பரம பாகவதர். க்ருஷ்ணரையும் பலராமரையும் ப்ருந்தாவனத்திலிருந்து மதுராவுக்கு அழைத்துக்கொண்டு போனவர் அவர்தான். இந்த மூன்று பேருமே (சததன்வா, க்ருதவர்மா, அக்ரூரர் ஆகிய மூவருமே) ஸத்யபாமாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டு ஸத்ராஜித்திடம் பெண் கேட்டிருந்தவர்கள். இவர்களில் யாருக்குக் கொடுப்பது என்று தெரியாத ஸத்ராஜித் ஒவ்வொருவரிடமும், ‘உங்களுக்கே கொடுக்கிறேன், கொஞ்ச நாள் போகட்டும்’ என்று தள்ளிப்போட்டுக் கொண்டே போனான். அதற்குள் ஸ்யமந்தக மணி ஒரு புதுக் கதையை உண்டாக்க, முடிவில் பெண்ணை பகவானுக்குக் கொடுத்துவிட்டான்.

இதனால் விசித்திரமான விளைவுகள் ஏற்பட்டன. இங்கே மநுஷ்ய மனஸின் க்ருத்ரிமங்களைப் புராணம் நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. என்ன ஆச்சு பார்க்கலாம்.

பெண்ணைக் கொடுக்காமல் என்னவோ ஸால்ஜாப்பு சொல்லிக்கொண்டே போகிறானே என்று அந்த மூன்று பேருக்கும் ஸத்ராஜித்தின்மேல் வெறுப்புத்தட்ட ஆரம்பித்தது. இந்த ஸமயத்தில்தான் க்ருஷ்ணர்மீது அவன் ஸந்தேஹப்பட்டு அபவாதம் சொல்ல ஆரம்பித்தது. அவரிடம் ப்ரியம் கொண்ட அக்ரூரரும் க்ருதவர்மாவும் அப்போது ஸத்ராஜித்திடம் வெளிப்படையாகவே த்வேஷம் காட்டி, க்ருஷ்ணன் பக்ஷத்தில் பேசினார்கள். கடைசியில், க்ருஷ்ணரே இவர்கள் ஆசைப்பட்ட பெண்ணைத் தட்டிக் கொண்டுபோய்விட்டார். ஸத்ராஜித் அவருக்கு மாமனாராகிவிட்டான். அவனக்கே அவர் ஸ்யமந்தகத்தையும் கொடுத்துவிட்டார், என்று ஆனதும் நல்ல அக்ரூரக்கும், க்ருதவர்மாவுக்குமே புத்தி மாறிவிட்டது. க்ருஷ்ணரிடம் பக்தி போய்விட்டது. பெண்ணாசை, த்வேஷம், (இதெல்லாவற்றுக்கும் மூலமாகத்) தான் நினைத்த மாதிரி நடக்காமல் போவதா என்ற அஹங்காரம் முதலானதுகள் வந்து விட்டால் எத்தனை பக்தியையும் அடித்துக்கொண்டு போய்விடும் என்று நமக்கு எச்சரிக்கிறது கதை.

இப்போது க்ருஷ்ணர் ஹஸ்தினாபுரம் போனது அவர்களுக்கு சதி செய்ய வாய்ப்புக் கொடுத்துவிட்டது. பெண்தான் கிடைக்கவில்லை, மணியையாவது அபஹரித்தாலென்ன, அந்த மணியின் சொந்தக்காரனை ஒழித்துவிட்டாலென்ன என்று தோன்றியது. ஆனாலும் இவர்களுக்குத் தாங்களே அப்படிச் செய்ய தைர்யமில்லாததால் போக்கிரியான சததன்வாவிடம் போனார்கள்.

ஒரே பெண்ணுக்காகப் போட்டி போட்டவர்களென்ற முறையில் இந்த மூன்று பேரும் பரஸ்பரம் விரோதம் பாராட்டிக் கொள்ளவேண்டியவர்கள். ஆனாலும் ‘எனிமி’யின் ‘எனிமி’ ஒருத்தனுக்கு ‘ஃப்ரெண்டா’கி விடுவானென்று வேடிக்கையாகச் சொல்வதுபோல, ஸத்ராஜித்திடம் மூன்று பேருமே த்வேஷம் கொண்டிருந்ததால் இப்போது தங்களுக்குள் ஒத்துப்போய் ஒன்று சேர்ந்தார்கள்.

“க்ருஷ்ணனின் பக்கபலம் இப்போது ஸத்ராஜித்துக்கு இல்லை. ஆகையால் இப்போதே போய் அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு ஸ்யமந்தக மணியை எடுத்துக்கொண்டு வந்துவிடு” என்று க்ருதவர்மாவும் அக்ரூரரும் சததன்வாவுக்கு யோசனை சொல்லிக்கொடுத்தார்கள்.

அந்த துஷ்டனும் அப்படியே போய் ஸத்ராஜித்தை அக்ரமமாகக் கொலைசெய்துவிட்டு, மணியை அபஹரித்துக் கொண்டு வந்தான். ஸத்ராஜித்தோடு அவன் நேராக யுத்தம் பண்ணி ஜயித்து அதைக் கவரவில்லை. நீசத்தனமாகக் கொலை பண்ணிவிட்டு அபஹரித்துக்கொண்டான்.

ஸத்யபாமா ஒரேடியாக ப்ரலாபித்துக்கொண்டு, ‘எப்போது பதி ஹஸ்தினாபுரத்திலிருந்து திரும்புவார்? அவரிடம் சொல்லிப் பாபி சததன்வாவை தண்டிக்கலாம்?’ என்று காத்துக் கொண்டிருந்தாள்.

ஸ்யமந்தகம் இருக்குமிடத்தில் வியாதி வராது, வேதனை இருக்காது. தினமும் பவுனாக குவியுமென்று சொல்லப்பட்டாலும் நாம் பார்க்கிறதோ அதனால் அனர்த்தத்துக்கு மேல் அனர்த்தமாக வந்திருக்கிறது என்பதைத்தான். எதற்கும் உரிய கூலி கொடுக்கவேண்டும். பலவிதப்பட்ட நன்மைகள் செய்யக்கூடிய திவ்யமணியிடமிருந்து பயன்பெற வேண்டுமானால், அதற்குக் கூலியாக அகச் சுத்தியையும் புறச் சுத்தியையும் ரக்ஷித்துக்கொள்ள வேண்டுமென்று முதலிலேயே ஸூர்ய பகவான் சொன்னது இதனால்தான். ஆனால் ஸத்ராஜித்துக்கோ ஸாக்ஷாத் பரமாத்மா உள்பட யாரை பார்த்தாலும் அந்த மணியின் நிமித்தமாகவே தப்பெண்ணம்தான உண்டாயிற்று. ஹ்ருதயத்துக்குள்ளே இப்படித் தப்பெண்ணணமும் ஸந்தேஹமும் இருப்பதே ஒரு மநுஷ்யனக்குப் பெரிய அசுசிதானே? சரீர அசுத்தத்துக்காக ப்ரஸேனன் உடனே உயிரைவிட வேண்டியிருந்ததென்றால் நீண்டகாலம் மன அசுத்தத்தை வளர்த்துக்கொண்டுவிட்ட ஸத்ராஜித்தும் கடைசியில் அதற்காக ப்ராணணையே கொடுத்துப் பதில் சொல்லும்படியாயிற்று.

துஷ்ட மிருகத்தைக் கொன்று மணியை எடுத்துக் கொண்ட சிரஞ்ஜீவியான ஜாம்பவானிடங்கூட அது சிரஞ்சீவியாக நிலைத்து இருக்கவில்லைதான்.

இப்படியெல்லாமிருக்க க்ரூர ஸ்வபாவமுள்ளவனம், ஜீவஹத்தி மூலம் அதை அபஹரித்தவனுமான சததன்யாவிடம் மட்டும் அது நீடித்து நிற்குமா? அவன் உயிரைத்தான் அது நீடித்து விட்டு வைக்குமா?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மணியில் விளைந்த திருமணங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மீண்டும் வெற்றி, மீண்டும் பழி
Next