தனிமனிதக் கவர்ச்சி அம்சமே இல்லை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

முடியரசு போய்க் குடியரசு வரும்போதே மனிதரைப் பார்க்காமல் கொள்கைகளைப் பார்ப்பதாகப் பெரிசாகப் பறை சாற்றப்படுகிறது. ஜாதி, ஸ்தானம் முதலிய எதையும் பார்க்காமல் ஐடியாலஜியின் பேரிலேயே ஸமூஹ கார்யங்கள் நடப்பது இப்போதுதான் என்று பெருமை பேசிக்கொள்கிறார்கள். ஆனால், வாஸ்தவத்திலோ இப்போதுதான் தர்மம், நீதி, நேர்மையான நிர்வாஹம், திறமையான ஸமூஹ அமைப்பு என்பதான உண்மைகளைப் பார்க்காமல், தனி மநுஷ்யர்களையும் கட்சிகளையுமே பார்த்து, ‘காந்தி சொன்னாரா, அதுதான் வேதம். அதற்குக் கொஞ்சம் வேறேயாக அவருக்கு நேற்றுவரை நெருக்கமாக இருந்த ராஜகோபாலாச்சாரி அபிப்ராயப்பட்டால்கூட இவர் தேச விரோதமானவர் என்று அர்த்தம்;’ இல்லாவிட்டால் வேறு ஒரு அம்பேத்காரோ, டாங்கேயோ ஏதோ சொல்லிவிட்டால் அதுதான் ஸத்யம் என்கிற ரீதியில் ஜனங்கள் கொள்கைகளை விட்டு (தனி) மநுஷ்யர்களையே பிடித்துக்கொண்டு நிற்பது ஜாஸ்தியாகி வருகிறது. முதுலில் தனி மநுஷ்யரிடம் மோஹம் மாதிரியான பிடிமானம். அதற்கு அப்புறம் ஏதோ ஒரு பார்ட்டி – வ்யூ (கட்சிக் கண்ணோட்ம்) – இது இரண்டுக்கும் மிஞ்சி உண்மைகளை மனஸ் திறந்து உள்ளபடி பார்ப்பது என்பதே அபூர்வமாகி வருகிறது.

எப்படிப்பட்ட தனி மநுஷ்யர்களின் பின்னே ஜனங்கள் போகிறார்களென்று பார்த்தால் யாருக்குக் கவர்ச்சிச் சக்தி இருக்கிறதோ, அவருக்குப் பின்னேதான். ஒருவருக்கு நல்ல அரசியல் ஞானம் இருக்கலாம், தேச நலுனுக்கான கொள்கைகளை வகுத்து அவற்றைத் திறம்பட நடத்திவைக்கிற சக்தி இருக்கலாம், நேர்மையான நடத்தை இருக்கலாம், இதெல்லாம் அவரிடம் இருந்தாலும் இவற்றில் எதுவுமே இல்லாத இன்னொருவருக்கு நன்றாக ஜோடித்து மேடையிலே பேச முடிகிறது, வசீகரமான பெர்ஸானலிடியிருக்கிறது என்றால் இவற்றின் கவர்ச்சியிலேயே இவர் விஷயம் தெரிந்த அந்த இன்னொருவரைவிட ஜனங்களின் பெரிய ஆதரவைப் பெற்று விடுகிறார். இந்த துர்தசையில்தான் இப்போது தேசமிருப்பதாகத் தெரிகிறது. ஸமூஹத்தின் எல்லா நிலைகளில் உள்ளவர்களுமே இப்படிப்பட்ட கவர்ச்சியில் மயங்கத்தான் செய்கிறார்களென்றாலும், இதிலேயும் விஷயம் தெரியாத பாமர ஜனங்களைத்தான் விசேஷமாக வளைத்துவிட முடிகிறது. இதை நினைக்கும்போது, கவர்ச்சியம்சத்தை உத்தேசித்தேதான் வோட்டர்களுக்கு வேறு தகுதியே வைக்காமல் வயஸு வந்தோருக்கெல்லாம் வாக்குரிமை என்று செய்வதோ என்று கூடத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது.

சோழர் காலத்தில் உச்சியில் முடியரசு இருந்தபோதா, கீழே தேர்தலில் பெர்ஸனாலிடி என்பதே இல்லை, கட்சி என்பதும் இல்லவே இல்லை. தர்மம், தகுதி என்பனவற்றின் மேலான அடிப்படையிலேயே முழுக்க முழுக்கத் தேர்தல் நடந்திருக்கிறது. கான்டிடேட் என்பவன் பெர்ஸனலாக யார், அவன் என்ன பார்ட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவன் தர்மிஷ்டன், தகுதி வாய்ந்தவன் என்பதுதான் கவனத்துக்கு வந்திருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தான் தங்களுடைய ஸொந்தக் கவர்ச்சியினால் இல்லாமல், யோக்யதாம்சங்களுக்காக மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அப்புறம் ஒரு வருஷம் அவருக்குப் பதவிக் காலம். மறு வருஷம் மறுபடியும் இதே மாதிரித் தேர்தல். ஆனால் இதே நபர் அந்தத் தேர்தலிலோ அதற்கப்புறம் இரண்டு வருஷங்களில் நடக்கும் தேர்தலிலோ எலெக்ட் ஆகமுடியாது. முன்னேயே சொன்ன விஷயம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஒளிவு மறைவுக்கு இடமில்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பெருன்பான்மை அடிப்படை இல்லை
Next