பெரும்பான்மை அடிப்படை இல்லை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்தத் தேர்தலில் காணும் அநேக முக்யமான அம்சங்களில் இன்னொன்று: ஒரு குடும்பிலே ஒருவருக்கு எத்தனை வோட்டுக்கள் என்று எண்ணி மெஜாரிட்டி பேஸிஸில் (பெரும்பான்மை அடிப்படையில்) ஒருத்தர் ஜயித்ததாக நிர்ணயம் பண்ணாததாகும். ஒருத்தன் மெஜாரிட்டி அடிப்படையில் ஜயிக்கிறான் என்றால், உடனே அவனுக்கும் அவனை ஆதரிப்பவர்களுக்கும் தங்களுடைய எதிராளிகளான மைனாரிட்டி யார் யார் என்பதிலேயே புத்தி போக இடமேற்படுகிறது. தொடர்ந்து, அவர்களை எப்படியெல்லாம் ஹிம்ஸிக்கலாம், ‘விக்டிமைஸ்’ பண்ணலாம் என்பதில் கவனம் போகலாம். மைனாரிட்டியின் பரம் ந்யாயமான கோரிக்கைகளைக்கூட மெஜாரிட்டி பலத்தினால் திரஸ்காரம் பண்ணி விடுவது என்று இக்காலத்தில் ஏற்பட்டிருக்கிற மாதிரி கூடாது என்று நம் சோழகாலப் பூர்விகர்கள் எண்ணியிருக்கிறார்கள்.

முதலில் ஒரு அபேக்ஷகர் எலெக்ட் ஆவதில் வோட்டர்களை வைத்து மெஜாரிட்டி – மைனாரிட்டி, அப்புறம் இதில் ஜயித்த அபேக்ஷர்கள் எல்லாரையும் சேர்த்து ஸபைகளை அமைத்து அரசாங்க அதிகாரத்தைக் கொடுப்பதிலும் கட்சிகளை வைத்து மெஜாரிட்டி – மைனாரிடி என்ற அடிப்படைகளில் முடிவு செய்யும்போது ஜன ஸமூஹத்தையே இந்த அடிப்படையில் இரண்டாகப் பிளந்துவிட்டது போலக்கூட ஆகிறது, அதாவது இரண்டு பிரிவுக்காரர்களும் ஏதோ ஒவ்வொரு விதமான கோட்பாடுகளுக்கும், திட்டத்துக்குமே தங்கள் புத்தியைக் குறுக்கிக்கொண்டு, அந்த closed mind – டோடு இன்னொரு தரப்பை, அது எதிர்த்தரப்பு, எதிரித்தரப்பு என்றே வைத்துப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள், இவர்களும் அவர்களுடைய ஆட்சியில் என்ன நல்லது நடந்திருந்தாலும் அதை ஒப்புக்கொள்ள மறுத்து. எப்போது பார்த்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதும் குறை சொல்வதாகவுமே இருக்கிறார்கள், அதனால்தான் அந்தச் சோழர்காலத்தில் யோக்யதாம்சங்களைத் திட்டவட்டமாக, தீர்மானமாக வைத்துவிட்டபின், அப்படிப்பட்டவன் மெஜாரிட்டி பெற்றானா, மைனாரிட்டி பெற்றானா என்ற வீண் சண்டைகள் கிளம்ப இடமில்லாமல் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப் பண்ணினார்கள்.

அப்புறம் எலெக்ட் ஆகிற எவனாவது தப்பாக நடந்தாலும் அவனுடைய அதிக்ரமம் ஆழ ஊன்ற முடியாதபடி பதவிக் காலம் ஒரே வருஷம்தான் என்று வைத்தார்கள். இந்த ஒரு வருஷத்துக்குள்ளேயுங்கூட, ஒரு மெம்பர் குற்றம் பண்ணியதாகத் தெரிந்தால் உடனே அவனுக்குப் பதவி நீக்கந்தான், “வாரியஞ் செய்யா நின்றாரை அபராதங் கண்டபோது அவனை யொழித்துவதாகவும்” என்று கல்வெட்டு சொல்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தனிமனித கவர்ச்சி அம்சமே இல்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'சந்திர ஸ¨ரியர் உள்ளவரை'
Next