மீண்டும் வெற்றி, மீண்டும் பழி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

க்ருஷ்ணர் த்வாரகைக்கு வந்தவுடனே ப்ரியபத்னி பாமா புலம்பினாள். மாமனாரைக் கொன்றவனைப் பழி தீர்த்துக்கொள்ள பகவானும் ஸங்கல்பித்துவிட்டார்.

க்ருஷ்ணருக்குக் கோபம் உண்டாகிவிட்டதென்று தெரிந்தவுடனேயே சததன்வா நடுங்க ஆரம்பித்துவிட்டான். ஸமீபத்தில்தானே அதி பலிஷ்டரான ஜாம்பவானையே அவர் தோற்கடித்திருந்தார்? அப்படிப்பட்ட மஹா பராக்ரமசாலி தன்னிடம் கோபத்தைத் திருப்பியிருக்கிறாரென்று தெரிந்தும் சததன்வாவின் சூரத்தனமெல்லாம் ஓட்டம் பிடித்துவிட்டது. அவன் த்வாரகையை விட்டு ஓட்டம் பிடித்தான்.

ஓட்டம் பிடிப்பதற்கு முந்தி என்ன பண்ணினானென்றால் ஸ்யமந்தகத்தை அக்ரூரரிடம் போட்டு விட்டான். அதற்குப் பதில் பகவானிடமே போட்டுவிட்டு அவர் காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பிழைத்துப் போயிருக்கலாமேயென்றால் இதுதான் துர்புத்தியின் சேஷ்டை! தான் ஓடிப்போவதால் க்ருஷ்ணருக்கு ஏற்படும் வெற்றிப்பெருமை போததென்று, ஸ்யமந்தகமும் அவரை அடைகிறதா என்ற கெட்ட எண்ணம்தான்! சததன்வாவே அதை வைத்துக் கொண்டிருக்கலாமேயென்றால், ‘அது முன்னே அதை வைத்துக் கொண்டிருந்தவர்களுக்குப் பண்ணினதுபோல என்ன அனர்த்தத்தைத் தனக்கும் பண்ணிவிடுமோ? அந்த அனர்த்தம் அக்ரூரைத்தான் அடையட்டுமே’ என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம், ‘க்ருஷ்ணன் ஒரு வேளை தன்னைத் துரத்திக்கொண்டு வந்து பிடித்துவிட்டால் அப்போது அதை எடுத்துக்கொண்டு விடுவானே! இந்த வெற்றியை மட்டும் அவனுக்குத் தரவே கூடாது, தன் உயிரை எடுத்தாலும் எடுக்கட்டும், ஆனால் ஸ்யமந்தகத்தை அவன் எடுத்துக்கொள்ள விடப்படாது’ என்ற துர் எண்ணம். துஷ்டர்களுக்கு வீம்பும் விரோதமும் கடைசிவரை போகாது. அதனால், அனர்த்தம் தரக்கூடிய மணியை விரோதியான க்ருஷ்ணருக்குச் சேரவிடாமல், தன்னிடம் ஸ்நேஹிதமாக வந்த அக்ரூரரிடமே சேர்ப்பித்தான். அக்ரூரர் நல்ல பக்தர், விவேகி என்று பெயரெடுத்திருந்ததால் அவரிடம் மணி இருந்தால்தான் க்ருஷ்ணர் அதற்காக சண்டைக்குப் போகாமலிருப்பாரென்றும் நினைத்து இப்படிச் செய்தான் போலிருக்கிறது.

சததன்வா ஊரைவிட்டு ஓடுகிறானென்று ஸ்வாமிக்குத் தெரிந்தது. வாஸ்தவத்தில் அவருக்குக் கோபமுமில்லை, ஒன்றுமில்லை. கோர க்ருத்யம் பண்ணிய சததனவாவைத் தண்டிக்க வேண்டியது தர்ம ஸம்ஸ்தாபனத்துக்காக வந்துள்ள தம்முடைய கடமை என்பதால் கோபம் வந்த மாதிரி காட்டிக்கொண்டார். இப்போது அவன் அதிவேகமாக ஓடுகிற குதிரையிலேறித் தப்பியோடப் பார்க்கிறானென்றதும், பகவான் பலராமரையும் அழைத்துக்கொண்டு ரதாரூடராக அவனைப் பிடிக்கப் புறப்பட்டார்.

தேர்க்குதிரைகள் காற்றாகப் பறந்தன. கண்ணுக்கெட்டிய தூரத்தில் அதிவேகமாக ஓடும் சததன்வாவின் குதிரையும் தெரிந்தது. பாவம், அந்தக் குதிரையால் அதற்கு மேல் ஓடிமுடியவில்லை. களைத்துப்போய் மேலே ஓட முடியாமல் அப்படியே விழுந்து நுரை தள்ளிவிட்டுச் செத்துப் போயிற்று.

சததன்வா கால்நடையாக ஓட ஆரம்பித்தான். அவன் காலால் ஓடும்போது தாம் ரதத்தில் போய் அவனைப் பிடிப்பது தர்மயுத்தமில்லை என்று ஸ்வாமியும் ரதத்திலிருந்து குதித்துத் தாமும் காலால் ஓடியே அவனை துரத்தினார்.

பலராமர் தேரிலேயே உட்கார்ந்திருந்தார் – களைத்துப் போய்விட்ட ஒரு ஒற்றை எதிராளியை இரண்டு பேர் தாக்குவது தர்மமில்லை என்ற எண்ணத்தில்.

பகவான் சததன்வாவைப் பிடித்து விட்டார். அப்புறம் இரண்டு பேருக்கும் யுத்தம் நடந்தது. பகவானை யார் எதிர்த்து நிற்க முடியும்? சததன்வா அவர் கையால் ஸம்ஹரிக்கப்பட்டான். அதனால் மஹாபாபியான அவனுக்கும் புண்யலோகம் கிட்டச் செய்யணுமென்றுதான் அவர் இப்படித் தேராலேயும் காலாலேயும் ஓடி ஓடி வந்தது.

ஜாம்பவானிடம்போலவே சததன்வாவிடமும் பகவானக்கு ஜயசாலி என்ற பெருமை ஸ்யமந்தகத்தினால் ஏற்பட்டது. ஆனால் அது எடுபடாமல் மறுபடி பழியும் வந்தது!

செத்துப் போனவனிடம் ஸ்யமந்தகம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. அவன்தான் அக்ரூரரிடம் அதைப் போட்டுவிட்டானே!

கீதையில் பகவான் தம்மைப் பற்றி

வேதாஹம் ஸம தீதாநி வர்த்தமாநாநி சார்ஜுன |

பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கச்சன ||

என்று சொல்லிக்கொள்கிறார். அதாவது, “அர்ஜுனா! இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாவற்றிலும் நடக்கும் ஸமாசாரங்கள் எனக்குத் தெரியும், ஆனால் என்னைத்தான் எவராலும் தெரிந்துகொள்ள முடியாது” என்று சொல்லிக் கொள்கிறார். அப்படிப்பட்ட ஸர்வஜ்ஞர் தான் சததன்வாவிடம் மணி இருப்பதாக நினைத்துத் துரத்திய மாதிரியே ஆட்டம் போட்டிருக்கிறார். அண்ணாவையும் இந்த அபிப்ராயத்தைச் சொல்லித்தான் அழைத்து வந்தார். இன்னொரு அவதாரமான அவரும் தம்பிக்கு ஏற்கவே தமக்கும் ஞானத்ருஷ்டியில்லாத மாதிரி காட்டிக் கொண்டு அத்தனை தூரம் கூடவந்தார்.

ஊராரிடம் மித்யாபவாதப்பட்டது போதாது, ஸொந்தத் தமையனாரிடமும் அபவாதப்பட்டு, மநுஷ்ய வாழ்க்கையின் அடி உதைகளை நன்றாக வாங்கிக்கொள்ள வேண்டுமென்றே ஸ்வாமி மாய விளையாட்டுப் பண்ணினாற் போல இருக்கிறது!

சததன்வாவை வதம் செய்தவிட்டு ரதத்துக்குத் திரும்பியவர். “அண்ணா அவனைக் கொன்றுவிட்டேன். ஆனால் மணியை அவனிடம் காணவில்லை” என்றார்.

இவருடைய மாயா நாடகத்துக்குத் தாமும் அநுஸரணையாகப் போக வேண்டுமென்பதாலேயே பலராமர் இவரிடம் விரோதமாக நடக்க வேண்டியிருந்தது. அதனால், க்ருஷ்ணர் இப்படிச் சொன்னாரோ இல்லையோ, பலராமருக்கு ரௌத்ரகோபம் உண்டாக்கிவிட்டது.

“டேய் க்ருஷ்ணா! நீ எப்போதுமே கபடியாகத்தான் இருந்திருக்கிறாய். இப்போதும் மணியை நான் எங்கே கேட்டு விடுவேனோ என்றுதான் கபடம் பண்ணுகிறாய். அதை எங்கேயோ ஒளித்து வைத்துக்கொண்டே நீ கதை அளக்கிறாய் என்பதில் எனக்குக் கொஞ்சங்வட ஸம்சயமில்லை. உன்னை பந்து என்று சொல்லிக் கொண்டு ஸஹவாஸம் பண்ணுவதே யோக்யர்களுக்கு முடியாத கார்யம்” என்றெல்லாம் வாயில் வந்தபடித் திட்ட ஆரம்பித்துவிட்டார்.

பூர்ணவதாரமாக வந்த பரமபுருஷன் ஸொந்த ப்ராதாவிடம் இப்படிப்பட்ட நிந்தனையை வாங்கிக் கொண்டும் பொறுமை இழக்காமல், பணிவு குறையாமல், “அண்ணா! நீங்கள் என்னை இப்படி ஸந்தேஹிக்கக் கூடாது. நான் சொல்வது ஸத்யம். வேண்டுமானால் நீங்களே என்னை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று தழைந்து கேட்டுக்கொண்டார்.

பலராமருக்கோ கோபம் வந்துவிட்டால் லேசில் தணியாது. எதிர்வாதமே அவருடைய மனஸில் அப்போது ஏறாது. ஆனபடியால் க்ருஷ்ணர் எத்தனை சொல்லியும் அவர் ‘கன்வின்ஸ்’ ஆகவில்லை. “உன்னை சோதனை போட்டு என்ன ப்ரயோஜனம்? நீ எந்த இந்த்ரஜாலமும் செய்யக்கூடியவன். திரஸ்கரிணி (கண்கட்டு) வித்தையால் மணியை மறைத்து விடுவாய். போடா போ! இனிமேல் உன் மூஞ்சியில் நான் முழிக்கமாட்டேன்” என்று சத்தம் போட்டுவிட்டு, க்ருஷ்ணரோடு த்வாரகைக்கு திரும்பாமல் அங்கிருந்தே விதேஹ ராஜ்யத்ததுக்குப் போய்விட்டார்.

க்ருஷ்ணர் ஒரே விசாரமாக த்வாரகைக்குத் திரும்பனார். பட்டதெல்லாம் போதாது என்று மறுபடி ஊர் ஜனங்களின் மொத்துப் பேச்சுக்கு ஆளானார். “மணியிடம் பேராசையால் தமையனையும் பகைத்துக்கொண்டு ஊரை விட்டே விரட்டி விட்டானே!” என்று ஜனங்கள் பழி சொல்வதைக் கேட்டு மனஸ் நொந்து கஷ்டப்பட்டார்.

ஸாதாரணமாகவே ஜனங்களின் குணம், ஒருத்தரிடமுள்ள நல்லதற்காகக் கொண்டாவடுவதைவிட, அவர் என்ன தப்பு பண்ணியிருக்கிறார், பண்ணியிருக்கக்கூடும் என்று பார்த்து அதற்காகக் கண்டனம் பண்ணுவதுதான். நம்மிலே பேப்பர் படிக்கிறவர்கள், பொது விஷயம் பேசுபவர்கள்கூட அவரவருடைய அபிமானத் தலைவர்களைப் புகழ்வதைவிட, பிடிக்காத மற்ற கட்சிக்காரர்களைக் காரஸாரமாக விமர்சிப்பதில்தானே அதிக ருசி காட்டுகிறோம்? திட்டிப் பேசுவதில் இன்றைய ஜனங்களுக்குள்ள ஈடுபாடு என்றைக்குமே இருந்திருக்கிறது என்று இந்தப் புராணக் கதையிலிருந்து தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பெண்ணால் விளைந்த பகைமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அக்ரூரம் மணியும்
Next