பயத்துக்கு இடம் தரும் த்வைதம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதற்குமுன் அவர் அவனிடம், “ஒவ்வொருத்தனும், அவன் ஞானவானாயிருந்தாலுங்கூட, தன் இயற்கைப்படிதான் நடப்பான். ப்ரக்ருதி என்கிற இயற்கையிலேதான் ஜீவன் தோன்றியிருக்க, ப்ரக்ருதி வேகத்தை ஒருத்தன் நிக்ரஹம் பண்ணுவதென்பது (அடக்குவது) எப்படி முடியும்? அதனால் அவரவர் இயற்கையை அநுஸரித்துப்போயே நாசூக்காக, க்ராஜுவலாக (ஒவ்வொரு படியாக) அதை சீர்திருத்தி உயர்த்துவதற்காக அவரவர் இயற்கைக்கு ஏற்றபடி பல தொழில்களையும், அதற்குரிய வாழ்முறைகளையும் வர்ண விபாகம் செய்து ‘ஸ்வதர்மம்’ என்று கொடுத்திருக்கிறது. இதிலே ஒருத்தனின் ஸ்வதர்மம் இன்னொருத்தனுடையதை விட ச்ரேஷ்டமாகத் தோன்றலாம். ஆனாலும் அது நன்றாயிருக்கிறதே என்று இவன் தன்னுடைய ஸ்வதர்மத்தைவிட்டு அதற்குப் போனால் இவனுடைய ப்ரக்ருதி அதிலே இவன் ஒழுங்காகச் செயலாற்ற விடாது. விளைவாக அந்தத் தொழிலும் அந்த வாழ்முறையும் கெட்டு, இவன் தன் ஸ்வதர்மப்படி செய்திருக்க வேண்டிய தொழிலின் பலனும் ஸமூஹத்துக்கு நஷ்டமாகி ஒரே குழறுபடியாகிவிடும். ஆனதினாலே, தனக்காக ஏற்பட்ட தர்மம் அவ்வளவு சிறந்ததாகத் தோன்றாவிட்டாலுங்கூட, சிறந்ததான இன்னொன்றுக்குப் போவதைவிட இதையே அநுஷ்டானம் பண்ணுவதுதான் ச்ரேயஸ்” என்றெல்லாம் சொல்லி, முடிவாக ஒன்று ரொம்ப அழுத்தமாகச் சொன்னார். க்ஷத்ரிய தர்மத்தை விட்டுவிட்டு, ‘யுத்தம் வேண்டாம்; இந்த ஜீவஹிம்ஸையை விடப் பிச்சை வாங்கிச் சாப்பிடுவதே மேல்’ என்று ப்ராம்மண ஸந்நியாஸியின் தர்மத்துக்குப் போக நினைத்த அர்ஜுனனுக்கு நன்றாக உறைக்கிற மாதிரி, ‘ஸ்வதர்மத்தைப் பண்ணிச் செத்தாலும் அதுவே ச்ரேயஸ். பிறனுடைய தர்மத்தில் போவது பெரிய பயத்தில் கொண்டுவிடும்’ என்று முடித்தார்.

பயம் என்றால் என்ன? ‘நமக்கு என்ன ஆயிடுமோ? ஏதாயிடுமோ?’ என்று நிம்மதியில்லாமல் தவிப்பதுதான் பயம். ‘நம்மை எதுவும் என்னவும் பண்ணமுடியாது, அசைக்க முடியாது’, என்று ஸ்திரமாக ஒரு ஸ்தானத்தில் நம்மை அமர்த்திக் கொள்கிறவரையில் பயம் இருந்து கொண்டே இருக்கும். அப்படி ஜீவனை ஆட்டமில்லாத நிம்மதியான ஒரு ஸ்தானத்தில் சாச்வதமாக இருக்கச் செய்வதுதான் மோக்ஷநிலை என்பது. நமக்கு அந்நியமாக எதுவோ ஒன்று இருக்கிறவரைக்கும், ‘அது நம்மை என்ன பண்ணிவிடுமோ? நாம் நிம்மதியின் ஸெளக்யத்திலேயே ஸ்திரமாக இருக்கமுடியாதபடி அதனிடமிருந்து என்ன கெடுதல் வருமோ?’ என்ற எண்ணம், அதாவது பயம், இருந்துகொண்டேதான் இருக்கும்.

‘நாம் ஒன்று, நமக்கு இரண்டாவதாக இன்னொரு அந்நிய வஸ்து, அநேக அந்நிய வஸ்துக்கள், உள்ளன’ என்ற வேறுபாட்டுக்குத்தான் “த்வைதம்” என்று பெயர். ‘த்வி’ (dvi) என்றால் இரண்டு. “Two” என்பது அதிலிருந்து வந்ததுதான். உச்சரிப்பு ‘டூ’ என்று இருப்பதால், இந்த ஸம்பந்தம் பளிச்சென்று புரியாமலிருக்கலாம்; ஸ்பெல்லிங்கைப் பார்த்தால் புரிந்துவிடும். ‘T-W-O என்பது D-V-I ஸம்பந்தமுடையதாகத் தெரிகிறதல்லவா?

த்வைதமிருந்தால் அப்போது ஒன்றுக்குத் தன்னைவிட வேறாக உள்ள இன்னொன்றால் பயம் ஏற்பட இடமுண்டு. எப்போது த்வைதம் போய், தனக்கு வேறாக எதுவுமே இல்லை என்று தெரிந்து கொள்கிறோமோ, வேறில்லாத தானாகிய ஆத்மாவில் ஆணி அடித்தாற்போல் நம்மை ஸ்திரமாக அமர்த்திக் கொள்கிறோமோ, அப்போதுதான் பயம் போகும். இப்படி த்வைதமில்லாமல் ஆவதுதான் அத்வைதம்.

வேதம் சொல்கிற மோக்ஷம் அந்த அத்வைத அநுபவந்தான் என்று நம்முடைய ஆசார்யாள் ப்ரஹ்ம ஸூத்ரம், உபநிஷத்துக்கள், கீதை ஆகியவற்றுக்குப் பாஷ்யம் செய்து நிலைநாட்டியிருக்கிறார். அத்வைதம்தான் மோக்ஷம். அது பயமில்லாத அபயநிலை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அஸுரப்போக்கு தோன்றுவது ஏன்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அத்வைதமே அபயம்
Next