கர்மத்தளை தளர்த்தும் தர்மம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஒரு விறகுக் கட்டு இருந்து, அதைச் சுற்றிப் போட்ட கயிற்றுக்கட்டு முடிச்சு அவிழ்க்க முடியாமல் ஆனால் என்ன செய்வார்கள் தெரியுமா? கட்டு தளர்வதற்கு முதலில் கட்டிய கயிற்றைவிட இறுக்கமாக அதை இன்னொரு கட்டுப் போட்ட மாதிரி சுற்றி நெருக்கிப் பிடித்துக் கொள்வார்கள். ‘கட்டுப் போட்ட மாதிரி’ தானே ஒழிய முடிச்சுப் போட்டுக் கட்டியே விடமாட்டார்கள். இந்த இறுக்கத்தில் முதலில் முடிச்சு போட்டுக் கட்டின கட்டு லூஸாகிவிடும். அதை எடுத்துப் போட்டுவிடலாம். அப்புறம், கட்டினமாதிரி, ஆனால் கட்டியே விடாமல் சுற்றியிருக்கிற இன்னொரு கயிற்றையும் எடுத்துவிட்டால் விறகுகள் கட்டற்று விடுபட்டுவிடும். இதே மாதிரி மனஸின் க்ருத்ரிமத்தில் பல தினுஸான கார்யங்களால் மணிமுடிச்சாகக் கட்டுப்போட்டுக்கொண்டு ஸம்ஸார பந்தத்தில் கிடக்கிற நாமும் அதிலிருந்து விடுபட, `சாஸ்த்ர கர்மா’ என்று கட்டு மாதிரி உள்ளதைப் போட்டுக்கொள்ள வேண்டும். கன்னாபின்னா கட்டாக இல்லாமல் சாஸ்த்ர மூலமாக ரிஷிகள் ஒவ்வொருவருக்கும் ஸ்வதர்ம ரூபமாக அநேக கார்யங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ரிஷிகளின் மூலமாக ஈச்வரனே போட்ட ரூல்கள் இவை. நம் ஸ்வந்த ஆசையின்மேலே கன்னாபின்னா என்று காரியங்கள் பண்ணிப் பண்ணி முடிச்சாகப் போட்டுக் கொண்டிருக்கிற கட்டு தளர்வதற்கு இந்த ஸ்வதர்ம கர்மக் கட்டுதான் உதவி புரிவது. இது அசல் கட்டு அல்ல. கட்டு மாதிரி நெரிக்கும். ஆனாலும் இதிலே நெரிபடுவது நம்முடைய தப்பான ஆசைகள்தான். நம்மை நல்லதில் விடுவிப்பதற்கே இந்த நெரிப்பு. இதைப் புரிந்துகொண்டால் சாஸ்த்ர கர்மாக்களை ரூல்கள் கொஞ்சங்கூடத் தப்பாமல் ஸந்தோஷமாகச் செய்து கொண்டே போகலாம்.

இஷ்டமாயிருக்கிறது என்று கண்டதைத் தின்னுகிறோம். வ்யாதி வருகிறதென்றால் அப்போது ஒட்ட ஒட்டக் கிடந்து கசப்பு மருந்து சாப்பிடத்தானே வேண்டும்? இது கஷ்டமாயிருந்தாலுங்கூட, உடம்பு ஸரியாகணும் என்பதால் நாமே டாக்டரிடம் போய் இந்தக் கஷ்டத்தை கேட்டு வாங்கிக் கொள்ளத்தானே செய்கிறோம்?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆத்மாநுபவமே அபய மோக்ஷம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ப்ரேயஸ், ச்ரேயஸ்
Next