பாட்டனார் பெருமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஒரு குழந்தையிடம் நாம் மரியாதை காட்டும்படி இருக்குமானால், “அது யாரகத்துக் குழந்தை தெரியுமா? இன்னார் அதற்கு அப்பா, இன்னார் தாத்தா “என்று’ப்ரவரம்’ சொல்வார்கள். இப்படிப் பிள்ளையாருக்கு ப்ரவரம் சொல்லி ஒரு ச்லோகம் உண்டு.

மாதமஹ மஹாசைலம்

மஹஸ்தத் அபிதாமஹம் |

காரணம் ஜகதாம் வந்தே

கண்டாதுபரி வாரணம் ||

ப்ரவரத்தில் கொள்ளுத்தாத்தா பேரும் சொல்லணும். இங்கே அப்படி இல்லை. தாத்தாவோடு நின்றுவிடுகிறது.

”விஷ்ணு ஸஹஸ்ர நாமம்” பூர்வ பாகத்தில் வ்யாஸரைப் பற்றி வரும் ஒரு ச்லோகத்தில் தான் அவருடைய கொள்ளுத் தாத்தாவான வஸிஷ்டரில் ஆரம்பித்து, பிள்ளை சுகாசார்யாள் வரையில் வரிசையாய் எல்லார் பேரும் சொல்லியிருக்கிறது. சுகர் ப்ரம்மசாரி. இல்லாவிட்டால் அவருடைய பிள்ளை, பேரன் என்றெல்லாமும் சொல்லிக்கொண்டே போயிருக்குமோ என்னவோ?*1 சுகரிலிருந்து புத்ர பரம்பரையாயில்லாமல், சிஷ்ய பரம்பரையாக, சுகருடைய சிஷ்யர் கௌடபாதர், கௌடபாதரின் சிஷ்யர் கோவிந்த பகவத் பாதர் என்று போய், அந்த கோவிந்தரின் சிஷ்யராகத்தான் நம்முடைய ஆசார்யாளான சங்கர பகவத் பாதாள் வந்தார்.

எல்லாவற்றிற்கும் முதல், குரு வந்தனம் முதலில் பூஜை பண்ண வேண்டிய விக்னேச்வரர் ஸமாசாரத்தில் குரு பரம்பரையின் ஸ்மரணை சேர்ந்தது பாக்யம். அதுவும் தவிர விக்னேச்வரருக்கு வ்யாஸ ஸம்பந்தமுண்டு. ‘வ்யாஸ கணபதி’ என்றே அவருக்கு ஒரு ரூப பேதமுண்டு. வ்யாஸருக்காக மஹா பாரதம் எழுதினவர் அவர்தானே?*2 இதனாலும் வ்யாஸர் பேச்சு வந்ததில் ஸந்தோஷந்தான்.

பிள்ளையாரைப் பற்றிய உறவுமுறை ச்லோகத்தில் அவருடைய அம்மா வழிப் பாட்டனாரில் ஆரம்பித்திருக்கிறது. ‘பிரவர’த்தில் அப்பா வழிமாத்திரம் சொல்வார்கள். தர்ப்பணத்தில் மட்டுந்தான் அம்மா வழியிலும் முன் மூன்று தலைமுறைகளைச் சொல்வார்கள். நம் பிள்ளையாருடைய பிதாவுக்கோ பிதாவே கிடையாது. சிவனுக்கு யார் அப்பா?அவர் ஸ்வயம்பு. அம்மாவான பராசக்தியும் அநாதியானவள்தான். ஆனாலும் தன் குழந்தைகளோடு குழந்தையாகத்தானும் லோக ஜனங்கள் மாதிரிஇருக்கவேண்டுமென்று அவதாரங்களும் பண்ணியிருக்கிறாள் – அவற்றிலே ஒன்றின் தகப்பனாரைப் பிள்ளையாரின் தாத்தாவாகச் சொல்லி ச்லோகத்தை ஆரம்பித்திருக்கிறது.

மாதாமஹ மஹாசைலம்: மஹா பெரிய பர்வதமான ஹிமோத்கிரியைத் தாயார் வழிப் பாட்டனாராகப் பெற்றவர்.

‘மாதாமஹர்’ என்றால் அம்மாவின் அப்பா. ‘பிதாமஹர்’ என்றால் அப்பாவின் அப்பா.

அம்பாளுக்கு வாஸ்தவத்தில் பிறப்பு கிடையாது. அப்பா அம்மா கிடையாது. அவள்தான் ஆதிகாரணி, அகிலாண்ட ஜனனி. ஆனாலும் லீலா நிமித்தமாக தக்ஷன் குமாரி தாக்ஷாயணி, ஹிமவான் குமாரி பார்வதி, மலயத்வஜ குமாரி மீநாக்ஷி, காத்யாயனரின் குமாரி காத்யாயனி என்பது போல் பலருக்குப் பெண்ணாகவும் தோன்றியிருக்கிறாள்.

பரமசிவன் என்ற மாத்திரத்தில் பார்வதி என்றுதான் அவரோடு சேர்த்துச் சொல்கிறோம். பார்வதி என்றால் பர்வதத்தின் புத்ரி என்று அர்த்தம். ஹிமயபர்வதத்துக்கு பெண்ணாக அவள் அவதரித்து, அப்புறம் தபஸிருந்து, காமாரியான பரமேச்சுவரன் மனசை இளக்கி அவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு க்ருஹஸ்தராகும்படிப் பண்ணியது பார்வதியாக வந்தபோதுதான். அந்தப் பார்வதியை வைத்துத்துதான் “மாதாமஹ மஹாசைலம்” என்று சொல்லப்படுகிறது.

‘என்ன அம்மா வழியில் ஆரம்பிக்கிறீர்களே, இது க்ரமமில்லையே, பிதா வழியை சொல்லுங்கள் ‘என்றால் அதற்கு பதில் உடனே வருகிறது: மஹஸ் தத் அபிதாமஹம்.

இதிலே ‘மஹஸ் தத்’ என்பது பிள்ளையாரைக் குறிப்பது. ‘ஜ்யோதிஸ்வருபமாக இருக்கப்பட்ட அவர்’ என்று அர்த்தம். ‘அபிதாமஹம்’ என்றால் பிதா வழியில் தாத்தாவே இல்லாதவரென்று அர்த்தம்.

“இது எத்தனை பெரிய இடத்துப் பிள்ளை தெரியுமா? இதன் அம்மா, அப்பா பெருமை தெரிய வேண்டுமானால் நேரே அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்பதில்லை. பிதா யார் யாரென்று பார்த்தாலே போதும். அம்மாவின் தகப்பனார்தான் இந்த லோகத்திலேயே பெரிசாக இருக்கப்பட்ட மஹா பர்வதமான ஹிமோத்கிரி. அப்பேர்ப்பட்ட ஹிமவானே தபஸ் இருந்து பெண்ணாகப் பெற்றவள் இவருடைய தாயார். பிதாவின் பிதா யாரென்றால், அப்படியொருத்தரே கிடையாது. தனக்கு தகப்பனாரென்று எவரும் இல்லாமல் தானே தோன்றிய பெருமை இவருடைய தகப்பனாருடையது என்று இதிலிருந்து தெரிகிறதல்லவா?” என்று ச்லோகம் சொல்லாமல் சொல்கிறது.

மாதாமஹ மஹாசைலம் மஹாஸ்ததபிதாமஹம்

இப்படி ச்லோகத்தின் முதல் பாதியில் சொல்லிவிட்டு இரண்டாம் பாதியில், ‘இவர் மாத்திரம் நிஜமாகவே தாயார் தகப்பனார் மூலம் பிறந்த பிள்ளைதானாக்கும் என்று நினைக்க வேண்டாம். இவரும் பிறப்பில்லாத பரப்ரஹ்ம ஸ்வருபந்தான். லோகத்துக்கெல்லாம் காரணப்பொருள் இவர்தான்: காரணம் ஜகதாம். ஜகத்காரணமான மூலவஸ்துதான் சிவ-சக்தி குமாரராக வந்தது. அவரை நமஸ்காரம் பண்ணுகிறேன்: வந்தே, ‘காரணம் ஜகதாம் வந்தே’ சொல்லியிருக்கிறது.

ஜகத்காரணப் பொருள் நாமெல்லாம் பார்த்துப் பார்த்து ஸந்தோஷப்பட வேண்டுமென்பதற்காக, நராகாரமாக மட்டுமின்றி, மநுஷ்ய சரீரத்திலேயே கழுத்துக்கு மேலே யானையாக ரூபம் கொண்டிருக்கிறது; திரும்பத் திரும்ப ஆராத ஆசையோடு பார்க்கச் செய்கிற யானை முகத்தை வைத்துக் கொண்டு தோன்றியிருக்கிறது: கண்டாதுபரி வாரணம். ‘கண்டாத் உபரி’ என்றால் ‘கழுத்துக்கு மேலே’; வாரணம் என்பது யானை என்று தெரிந்திருக்கும்.


*1 வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் சக்தே: பௌத்ரம் அகல்மஷம் |

பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம் ||

வஸிஷ்ட நப்தாரம் – வஸிஷ்டருக்குக் கொள்ளுபேரரும்; சக்தே: பௌத்ரம் – சக்தி மஹர்ஷிக்குப் பேரரும்; பராசர ஆத்மஜம் – பராசரருக்குப் புத்திரரும்; சுகதாதம் – சுகருக்குத் தந்தையும்; தபோநிதிம் – தவச் செல்வரும்; அகல்மஷம் – தோஷமற்றவருமான; வ்யாஸம் – வ்யாஸரை; வந்தே – வணங்குகிறேன்.

*2 “தெய்வத்தின் குரல்” — மூன்றாம் பகுதியில் “பிள்ளையார் சுழி” என்ற உரையில் “எழுத்துப் பணியில் விநாயகர் தொடர்பு” என்னும் பிரிவு பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is எளிதில் கிடைப்பவர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மாமா மஹிமை
Next