அக்ரூரம் மணியும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

க்ருஷ்ணர் த்வாரகைக்கு வந்து விட்டாரென்றதும் ஸ்யமந்தகத்தை வைத்துக்கொண்டிருந்த அக்ரூரருக்கு பயம் பிடித்துக் கொண்டது. ‘அபயம் தருகிறவன் இவன்தான்’ என்று இந்த க்ருஷ்ணரின் ஸாமீப்யத்துக்கு (அணுக்கத்துக்கு) இத்தனை நாளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவரிடமே இப்போது பயப்பட்டுக் கொண்டு, அவர் பக்கத்திலேயே இருக்கவேண்டாமென்று அக்ரூரர் நினைத்தார். த்வாரகையை விட்டு வெளியேறி விட்டார். ‘அர்த்தம் அனர்த்தம்’ என்ற ஆசார்யாள் சொன்னாற் போல, பொருள் படுத்தும் பாடு!

க்ருஷ்ணர் விஷயத்தில் அக்ரூரருக்கு ஏதோ இப்படி அசட்டுத்தனமான பயமும் ஸம்சயமும் ஏற்பட்டாலும் மற்றபடி அவருடைய ஸ்வாபாவிகமான ஈச்வர பக்தி, நல்ல எண்ணங்கள் எல்லாம் போய்விடவில்லை. ஆனபடியால் த்வாரகையை விட்டுப் புறப்பட்டவர் எங்கேயோ ஊர் சுற்றாமல் க்ஷேத்ராடனம் பண்ணிக் கொண்டே போய்க் காசியை அடைந்தார்.

அங்கே போனபின் அவர் மனஸ் எந்தக் கெடுதலும் இல்லாமல் தூய்மையாக ஆயிற்று. மணியினால் ஸ்வயலாபம் அடைய வேண்டுமென்ற எண்ணமும் அவருக்கு இல்லை. ஆனதால் ஸ்யமந்தகம் தினமும் எட்டு பாரத் தங்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அக்ரூரர் அதைக் கொண்டு தனக்கோ தன் குடும்பத்துக்கோ எதுவும் பண்ணிக் கொள்ளும் எண்ணமில்லாமல் காசியில் அநேக தேவாலயங்களை நிர்மாணித்துத் திருப்பணிகள் பண்ணி இறை தொண்டு செய்து கொண்டிருந்தார்.

திவ்யமணி அவரை பாஹ்யாந்தர சௌசமுள்ளவராகவே (உள்ளும் புறமும் சுத்தமானவராகவே) கருதி தினமும் ஸ்வர்ண பாரம் கொடுத்ததோடு, அவர் இருக்கிற இடத்தைச் சுற்றி ரோகம், துக்கம், அதிவ்ருஷ்டி (பேய் மழை) அநாவ்ருஷ்டி (வறட்சி) முதலான ஈதிபாதைகள் இல்லாமல் நல்ல ஸுபிக்ஷத்தை உண்டாக்கி வந்தது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மீண்டும் வெற்றி, மீண்டும் பழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அபவாதத்துக்குக் காரணம்
Next