பரதர்மம் ஏன் கூடாது? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதிலே, ‘பாரம்பர்யமாக இன்னின்ன பண்ணிக்கொண்டு போ’ என்று இருப்பதை மாற்றி, இந்த (பரம்பரை)த் தொழிலைவிட இன்னொன்று உத்தமமாயிருக்கிறதென்று நினைத்து அதற்குப் போகாதே என்று பகவான் சொல்கிறார். ஸ்வதர்மமே பண்ணு, பிறன் தர்மத்துக்குப் போகாதே என்று அவர் இதைத்தான் சொல்கிறார். ஸ்வதர்மத்திலே இருந்தால்தான், இறந்தாலுங்கூடத்தான் அதுவே ச்ரேயஸ்; பரதர்மம் பயத்தை – அதாவது ஸம்ஸாரத்தை – உண்டுபண்ணும் என்கிறார்.

ஏன் இதைவிட நல்லது என்று இன்னொன்றுக்குப் போகப்படாது என்றால், பிறப்புப்படி தனக்கு வாய்த்த கர்மத்தை விட்டு இன்னொன்றை இவன் தேர்ந்தெடுக்கிறான் என்னும் போதே இவனுக்கு என்று ஸொந்த அபிப்ராயம், ஸ்வயேச்சைப்படி செய்வது என்பவை ஏற்படுகின்றன என்று அர்த்தம். இப்படிச் சொன்னால் தனி மனஸின் ஆசை வந்துவிட்டதாகத் தானே ஆகிறது? வாய்த்ததைச் செய்வது என்று தன்னிச்சை இல்லாமல் செய்வது போய், இவனாக ஒன்றை விரும்பித் தேர்ந்தெடுக்கிறானென்றால், choice வந்துவிட்டது, option வந்துவிட்டது என்றால், கூடவே கூடாது என்று ஒழித்துக் கட்டவேண்டியதான ஆசைக்கு இடம் கொடுக்கிறானென்றுதான் அர்த்தம். கர்மாவைத் தேர்ந்தெடுப்பதிலேயே இஷ்டம், ஆசை என்பது வந்துவிட்டபோது அது காம்ய கர்மமாகிவிடுகிறது. அப்புறம் அதன் பலனை த்யாகம் செய்வதால் மட்டும் அதை நிஷ்காம்ய கர்மமாக்கிக் கொண்டுவிட முடியாது. எப்போது நம்முடையதைவிட நல்லது என்று ஒன்றை விரும்பித் தேர்ந்தெடுத்தானோ அப்போது அதன் பலனில் ஒரு ஸந்துஷ்டியை மனஸ் தேடிப் பெறத்தான் செய்யும். கர்மாவால் மனஸானது தன்னையறியாமலே சுத்தியாவது என்பது தவிர வேறு எந்த ஸந்துஷ்டியைத் தேடி அறிந்து பெறுவதும் அதை அசுத்தி செய்வதுதான்.

பிறன் தர்மத்துக்குப் போகப்படாது என்பதற்கு ஸாதகனை வைத்துக் காட்டுகிற காரணம் இது. லோகத்தை, ஜன ஸமூஹத்தை வைத்தும் ஒரு காரணம் உண்டு. நல்ல அழுத்தமான காரணம். லோக க்ஷேமத்துக்காகப் பலவிதமான கார்யங்கள் செய்யவேண்டியிருக்கிறது. புத்தியால் பாடம் புகட்டுவதிலிருந்து உடம்பால் உழைத்துக்கொட்டுவது வரை அநேகம் செய்யவேண்டியிருக்கிறது. சுத்தமான நெய்யை மங்களமான மந்த்ரங்களைச் சொல்லிக் கொண்டு ரொம்பவும் பவித்ரமாக ஜ்வலித்துக் கொண்டிருக்கும் அக்னியில் ஆஹுதி செய்வதிலிருந்து, ‘பிடி!விடாதே! வெட்டு!குத்து!’ என்று கத்தியை வைத்துக்கொண்டு சத்ருவோடு யுத்தம் செய்வது, அல்லது திருடனைப் பிடித்து ரத்தக் காயப்படுத்துவதுவரை பலவிதமான தொழில்கள் செய்யவேண்டியிருக்கிறது. இப்படியிருக்கும்போது, இந்த எல்லா தொழில்களும் சீராக நடப்பதற்காகத்தான் பாரம்பர்யமாக கர்மாக்களைக் கொடுத்து வெவ்வேறு ஸ்வதர்மங்களை வைத்திருக்கிறது. இந்தக் கார்யங்களைப் பார்க்கும்போது ஒன்று உசத்தி, ஒன்று தாழ்த்தி என்று தோன்றினாலும், ஸமூஹ நலனை விளைவிப்பது என்ற பலனைப் பார்த்தோமானால் எல்லாமே ஸமம்தான். உசத்தியுமில்லை தாழ்த்தியுமில்லை என்று தெரியும். எந்த ஜாதிக்காரனின் தொழில் நின்று போனாலும் ஜன ஸமூஹத்தின் நல்வாழ்வு பாதிக்கப்படத்தான் செய்யும். அது ஸரிவர நடப்பதற்கு, தாழ்த்தியாகத் தோன்றுகிற கார்யங்களும் நடந்தே தீரவேண்டும். ஒட்டன் ஸ்ட்ரைக் செய்தால் ஊரே நாறிப் போகிறது, காலராவும் வைசூரியும் பரவுகின்றன. இதுகளிலிருந்து ஸமூஹத்தைக் காத்து ரக்ஷிக்கும் கார்யத்தை அவன் செய்கிறானென்னும்போது அவனுடைய அந்த ஸ்வதர்மம் எப்படித் தாழ்ந்ததாக இருக்கமுடியும்? அதனால் வாய்த்ததைச் செய்வது என்றில்லாமல் உசத்தி தாழ்த்தி கல்பிப்பதே பிசகு.

இப்படி ஸொந்த choice -ன்படி (தாமாகத் தேர்ந்தெடுத்து) தொழில்களைச் செய்வது என்றால், எல்லாத் தொழிலிலும் இப்போது பாரம்பர்ய முறையினால் அததற்குத் தேவைப்படும் விகிதாசாரப்படி ஜனங்கள் ‘டிஸ்ட்ரிப்யூட்’ (பங்கீடு) ஆகியுள்ளது போல இருக்காது. ஏதோ ஒரு தொழிலுக்கு ஜாஸ்திப்பேர் போவார்கள். இன்னொன்றை யாரும் சீந்தாமல் விடுவார்கள். அல்லது எதற்கும் உபயோகமற்றவர்களை அதில் போடுவோம். அந்தக் கார்யங்கள் நன்றாய் நடக்காமல் ஸமூஹம் பாதிக்கப்படும். பாரம்பர்யமாக வரும் குணம், குடும்பச் சூழ்நிலை முதலியவை ஸ்வதர்ம அநுஷ்டானத்தக்குப் ‘பெர்ஃபெக்ஷன்’ தருவதுபோல அப்போது இருக்காது. புதிதாக ஜனங்கள் இஷ்டப்படி எடுத்துக்கொண்ட தொழில்கள் பெர்ஃபெக்டாக நடக்காமல் போகலாம். அதோடு தொழில்களில் ஜனங்கள் பங்கீடாகும் ப்ரபோர்ஷன் ஏறுமாறாக ஆகி, போட்டி, பொறாமை, ஏமாற்றம் எல்லாம் ஏற்படும். மொத்தத்தில் ஸமூஹ நலனுக்காகக் கார்யங்கள் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்காமல் லோக க்ஷேமமே பாதிக்கப்படும்.

இப்படியாகத் தன் ஸொந்த இஷ்டம் என்று ஒன்றின் மேல் ஸ்வதர்மத்தை விடுகிற தோஷம், அப்படி விட்டதால் லோக க்ஷேமம் பாதிக்கப்படுவதற்கு இடமேற்படுத்துகிற தோஷம் என்ற இரண்டு பெரிய தப்புக்கள் பரதர்மத்துக்குப் போகிறவனைச் சேர்கின்றன. இப்படி தோஷத்தைச் சேர்த்துக் கொண்டபின் இவன் எப்படி சுத்தியாகி ஸம்ஸார நிவ்ருத்தி பெறுவது? அதிலேயே (ஸம்ஸாரத்திலேயே) மேலும் ஆழமாகப் புதைய வேண்டியதாகத்தான் ஆகும். அதனால்தான் (க்ருஷ்ண பரமாத்மா) `பரதர்மம் பயத்தைத் தருவது’ என்றார்.

இதற்கப்புறம்தான் தேவாஸுர யுத்தம் என்று ஆரம்பித்தேனே, அந்த ஸமாசாரம் வருகிறது.

பகவான் இப்படி, ‘செத்தாலும் ஸ்வதர்மத்தைப் பண்ணு; அதுதான் ச்ரேயஸ், அதாவது ஸம்ஸார நிவ்ருத்திக்கு ஸஹாயம் செய்வது, பரதர்மம் ஸம்ஸார பயத்தை ஜாஸ்தியாக்குவதே’ என்று சொன்னவுடன் அர்ஜுனன் யோசித்துப் பார்த்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is உலக வாழ்வின் உயர் நலன்களுக்காக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பாபத்தில் தள்ளும் சக்தி எது?
Next