“ஆனால் இப்படி, ‘நமக்கென்று ஒரு இஷ்டமும் வேண்டாம். எந்தக் குலத்தில் பிறந்தோமோ அதற்கான வர்ண தர்மத்தை, எந்தெந்த வயஸுக் கட்டத்தில் என்னென்ன செய்யவேண்டுமோ அந்த ஆச்ரம தர்மத்தை நாம் பாட்டுக்குக் கேள்வி கேட்காமல் பண்ணிக்கொண்டு போவோம்’ என்று இருக்கவொட்டாமல் எதுவோ ஒன்று மென்னியைப் பிடித்துத் தள்ளுகிறாற்போல இருக்கிறதே! இப்படி ஸரியான வழியாகப் போகவிடாமல் வேறு வழியில் போக வைத்து மநுஷ்யனை பாபத்தில் பிடித்துத் தள்ளுகிறதே! இவனுடைய அறிவுக்குப் புரிந்து, அறிவு அங்கீகாரம் கொடுத்து இப்படிப் பண்ணுவதாயில்லாமல், வேறு ஏதோ ஒரு சக்தி பலாத்காரம் செய்தல்லவா இவனை இப்படித் தள்ளுவதாக தெரிகிறது? அது என்ன?” என்று அவனுக்கு யோசனை வருகிறது. இது வேண்டாம், இன்னொன்று வேண்டும் என்று இவன் நினைக்கும்படியாக இவனை பலவந்தப்படுத்தி வேண்டாததை வேண்டப்பண்ணிப் பாபத்துக்கு ஆளாக்கும் force எதுவோ இருப்பது அவனுக்குத் தெரிகிறது; அது என்னவென்று மட்டும் தெரியவில்லை. ‘எதுவோ’ என்று விவரம் புரியாததாகத் தெரிகிறதே தவிர, ‘இன்னது’ என்று அந்த ஃபோர்ஸைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அது என்னவென்று தெரிவிக்கும்படியாக பகவானிடம் கேட்கிறான்:
அத கேந ப்ரயுக்தோயம் பாபம் சரதி பூருஷ:|
அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித: ||
“வார்ஷ்ணேய” என்று வ்ருஷ்ணி குலத்தோன்றலான பகவானைக் கூப்பிட்டான் என்று சொன்னேன். மேலே (இந்த ச்லோகத்துக்கு) அர்த்தம் சொல்லத்தான் நினைத்தேன். ஆனால், இதற்கு முன்னாடி கீதையில் என்ன இருக்கிறது, எந்த context -ல் அர்ஜுனன் இப்படி கேட்டான் என்று சுருக்கமாகச் சொல்ல நினைத்து ஆரம்பித்தது வளர்ந்துகொண்டே போய்விட்டது! அப்புறம் டெவலப் பண்ணலாம் என்று நான் நினைத்திருந்த சரக்கில் அநேகம் இப்போதே வந்துவிட்டது. ஆகக்கூடி, ஸம்பந்தமில்லாத விஷயமில்லை.
“அத” – ஆனாலும். அதாவது நீ சொல்கிறபடி, மனஸின் இஷ்டம் என்று ஒன்று இல்லாமல் பட்ட கட்டை மாதிரி ஆக்கிக்கொண்டு சாஸ்த்ரப்படி வாய்த்த ஸ்வதர்மாவை பண்ணலாமென்று ஒரு ஜீவன் நினைத்தானானாலும்,
“அயம் பூருஷ:” – இந்த ஜீவனானவன். ‘புருஷன்’ என்பதே பூருஷன்’ என்றும் நீளும். ‘விழி’, ‘நிழல்’ முதலான வார்த்தைகள் ‘வீழி’, ‘நீழல்’ என்று நீள்கிற மாதிரி.
ஆனாலும் இந்த ஜீவனானவன் –
“அநிச்சந்நபி” – புத்தி பூர்வமாக அப்படி ஆசைப்படாவிட்டாலும்: நன்றாக ஆலோசித்துப் பார்த்து, வேண்டும் வேண்டாம் என்று ஒன்றை விட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், ‘இன்வாலன்டரி’யாகவே;
“கேந” – யாரால்,
“ப்ரயுக்த:” – நன்றாக ஏவப்பட்டு,
பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறாற்போல யாரோ இவனை வேண்டும் வேண்டாம் என்கிறவற்றில் தள்ளுவது தெரிகிறது. அது யார் என்று தெரியவில்லை.
[‘கேந’ – யாரால்
“ப்ரயுக்த:” – வன்மையாக ஏவப்பட்டு.]
“பலாத்” – பலாத்காரமாக,
“நியோஜித இவ” – உந்தித் தள்ளினாற்போல, ‘யுஜ்’ – ‘யோஜ்’ என்பது வேர்ச்சொல். இன்னொன்றோடு சேர்ப்பது, பிணைத்துப் பூட்டுவதுதான் ‘யுஜ்’. ‘யுஜ்’ என்பதன் அடியாக ‘யுக்தம்’ என்று சொல்கிறோம். ‘யோஜ்’ என்பதன் அடியாகவே ‘யோகம்’ என்கிறோம். சித்தம் சிதறவிடாமல் சேர்த்துப் பூட்டிப் பிணைப்பதால் அது யோகம். மாட்டைப் பூட்டிப் பிணைக்கிற ஏர்க்காலை ‘yoke’ என்று சொல்வது இந்த தாதுவிலிருந்துதான். ‘யோஜ்’ என்பதிலிருந்து ‘யோஜித’. பூட்டிப் பிணைப்பது ஏதோ ஒன்றிலே செலுத்துவதற்காகத்தான். மாட்டை ஏர்க்காலில் பிணைப்பது அதை வயலில் செலுத்தத்தான். சித்தத்தைச் சேர்த்துப் பிடிப்பது அதைப் பரமாத்ம தத்வத்தில் செலுத்தத்தான். அதனால் ‘சேர்ப்பதான’ யோகத்திலேயே ‘செலுத்துவதான’ சக்தியும், propelling force -ம் தொக்கி நிற்கிறது. “யோஜித”. என்பது செலுத்தப்படுகிற நிலையைத் தெரிவிக்கிறது. ஒரு வார்த்தைக்கு முன்னால் ‘நி’ என்று போட்டால் அது இரண்டுமூன்று தினுஸான புது அர்த்தத்தைக் கொடுக்கும். அவற்றில் ஒன்று, அர்த்தத்துக்கு ஜாஸ்தீ அழுத்தம் கொடுப்பதாகும். பாதம் (paatam) – விழுவது, நிபாதம் (nipaatam) – நன்றாக விழுவது. தர்சனம் தெரிவது, நிதர்சனம்- நன்றாகத் தெரிவது. ‘யோஜித’வுக்கு ‘நி’ சேர்த்து ‘நியோஜித’ என்றால் ‘நன்றாகச் செலுத்தப்பட்டு’, ‘உந்தித் தள்ளுவது மாதிரிசெலுத்தப்பட்டு’ – என்று அர்த்தம்.
ஒரு ஜீவனானவன் யாரால் பலாத்காரமாகச் செலுத்தப்பட்டு –
‘பாபம் சரதி?’ – பாபத்தில் போகிறான்? பாபத்தில் புகுகிறான்? அதாவது, பாபம் பண்ணுகிறான்?
‘தானே மனஸாரத் தெரிந்து இஷ்டப்பட்டுச் செய்யாமல், வேறு யாரோ பலவந்தமாகப் பிடித்துத் தள்ளின மாதிரி மநுஷ்யர்கள் பாபத்தில் போய் விழுகிறார்களே இப்படிப் பிடித்துத் தள்ளும் அந்த ஆசாமி யார்?’ பகவானை அர்ஜுனன் கேட்கிறான்.
ஸம்ஸாரம் என்பது த்வைதம், அதனால் பயம் என்று சொன்னோம். பயத்தைத் தருவது எதுவோ அது பாபம். ஆகையால் பரதர்மத்தில் போவது பகவான் சொன்னபடி ‘பயாவஹ:’ என்றால் அது பாபத்தை உண்டாக்குவதாகவே இருக்கும். இதனால்தான் அர்ஜுனன் பாபத்தைக் குறிப்பிடுகிறான்.
ஸ்வதர்மத்தைவிட்டுப் பரதர்மம் மேற்கொள்வது பாபம். இது மட்டுமில்லை. இன்னம் அநேக பாபங்கள். நரக லோகங்களின் வர்ணனையைப் பார்த்தால் தெரியும், ‘எத்தனை ஆயிரம் பாபங்கள் இருக்கின்றன? அது ஒவ்வொன்றுக்கும் என்ன தண்டனை?’ என்று, இந்தப் பாபங்கள் எல்லாவற்றையும் குறித்துத்தான் அர்ஜுனன் கேட்கிறான். மநுஷ்யர்கள் அநேக பாபங்களைப் பண்ணிவிடுகிறார்கள். எல்லாமே யோசித்து, திட்டம் போட்டு, அவர்கள் பண்ணினார்கள் என்று இல்லை. தங்களையும் மீறிப் பண்ணிவிடுகிற மாதிரிதான் இருக்கிறது. “அநிச்சன்” என்று இதைத்தான் அர்ஜுனன் சொன்னது. இப்படி இவனைப் பண்ணவைப்பது யார் என்று கேட்கிறான்.
இங்கே அர்ஜுனன் ஜீவர்கள் பாபம் பண்ணுவதற்கு எந்த சக்தி காரணம் என்றுதான் கேட்கிறான். பாபத்திலிருந்து ஜீவன் விடுபட வழி என்ன என்று கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால், ‘எத்தனை சறுக்கி விழுந்தாலும் அத்தனை பாபத்துக்கு இடையிலேயும் விடாமல் ஸ்வதர்மத்தையே பின்பற்றிக் கொண்டு போனால் அதுவே பாபத்தில் இழுத்துவிடும் அஸுர வ்ருத்திகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக ஜீவனை விடுவிக்கும்’ என்று சொல்லியிருப்பார். ஏற்கெனவே இதை அவர் அவனுக்குச் சொல்லி ஆயிற்று. ஸ்வதர்மப்படி நிஷ்காம்ய கர்மயோகம் செய்வதைக் குறித்து, “இந்த தர்மத்தை ஸ்வல்பம் அநுஷ்டிக்க ஆரம்பித்து விட்டாயானாலும் மஹா பயமான ஸம்ஸாரத்திலிருந்து ரக்ஷித்துவிடும்” என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார்.
பயம், பாபம், பந்தம், ஸம்ஸாரம் என்ற எல்லாம் ஒரே விஷயத்தைச் சொல்கிறவைதான். ஆகையால் பயத்திலிருந்து ரக்ஷிப்பது என்றால் பாபத்திலிருந்து மீட்பது என்றே அர்த்தம்.
இப்போது அர்ஜுனன் பாப விமோசனத்துக்கு வழி கேட்கவில்லை. ஏற்கெனவே அவர் சொல்லிவிட்டார் என்பதால் இருக்கலாம். பின்னே என்ன கேட்கிறானென்றால், ‘தேவ – அஸுர குணங்களின் சண்டையில் அஸுரர்களான பாப வ்ருத்திகளை உண்டாக்கி, அவற்றில் ஜீவனைத் தூண்டிவிடுகிற சக்தி என்ன? ஒரு மநுஷ்யனை பாபத்திலே கட்டாயப்படுத்தி புகுத்துகிற ஆஸாமி யார்?’ என்றே கேட்கிறான்.