காம – க்ரோதம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘அதுவா, இரண்டு சக்திகள் காரணம்’ என்று பகவான் பதில் சொல்கிறார். அவை என்னென்ன என்று பேரைச் சொல்லுகிறார்.

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ: |
மஹாசநோ மஹா பாப்மா வித்த்யேந – மிஹ வைரிணம் ||

‘ஏஷ’ – இது : எது காரணம் என்று கேட்டாயே, அது என்னவென்றால்,

‘காம:’ – காமம். அதாவது ஆசைதான் மனிதனைப் பாபத்தில் தள்ளுவதான எல்லா கெட்ட வ்ருத்திகளையும் தூண்டிவிடும் மூல காரணம்.

அது மட்டும்தானா? இன்னொன்றும் இருக்கிறது.

‘ஏஷ: க்ரோத:’ – அந்த இன்னொன்று என்னவென்றால் ‘க்ரோதம்’; அதாவது கோபம்.

இந்த இரண்டும்,

‘ரஜோகுண ஸமுத்பவ’மானவை – அதாவது மநுஷ மனஸு சாந்தமாகி ஸாத்விகமாகவுமில்லாமல், ஓய்ந்து மந்தித்துப் போய்த் தாமஸமாகவுமில்லாமல், வேகப்பட்டுக்கொண்டு கொந்தளிப்பிலே இருக்கிற ஒரு நிலை உண்டே, அந்த நிலைக்கு ஆதாரமாயுள்ள குணமான ராஜஸத்தில் உண்டானவை; “ரஜோகுண ஸமுத்பவ:”

‘உண்டானவை’ என்று நான் சொன்னாலும் பகவான் ஒருமையில் “உண்டானது” என்றுதான் சொல்கிறார் – ‘ஸமுத்பவ:’ என்பது ஒருமைதான். காமம் ஒரு காரணம், இன்னொன்று க்ரோதம் என்பதாக இரண்டை சொல்லிவிட்டு, ‘அவை ரஜோகுணத்தில் உண்டானவை’ என்காமல், ‘அது ரஜோகுணத்தில் உண்டானது’ என்று சொன்னால் இது சொற்குற்றம்தானே என்றால், குற்றம் பகவான் மேலில்லை. என் குற்றம்தான். காமம் தவிர இன்னொன்று க்ரோதம் என்று நான்தான் சொன்னேன். பகவான் அப்படி சொல்லவில்லை.

“எது ஜீவனைப் பாபத்திலே பிடித்துத் தள்ளுகிறது” என்று அர்ஜுனன் கேட்டதற்கு, ‘எதுவா? அதுதான் காமம், அதுதான் க்ரோதம், அது ரஜோகுணத்தில் உண்டானது: காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ:” என்றே சொல்கிறார். அதாவது, காமமாக இருக்கிற அதுவேதான் க்ரோதமாகவும் இருக்கிறது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளும்படிச் சொல்லியிருக்கிறார். காமத்துக்கு இன்னொன்று க்ரோதம் என்று காட்ட இங்கே வார்த்தை இல்லை. ‘காமமும் க்ரோதமுமாகிய ஒரு கெட்ட சக்தி’ என்று வைத்தக்கொள்ளலாம். ஆனாலும் காம – க்ரோதம், அதாவது விருப்பு – வெறுப்பு என்று இரட்டையாக நாம் எப்போதும் சொல்வதாலேயே அந்த பழக்கத்தில் நான் தான் ஒன்று, இன்னொன்று என்று சொல்லிவிட்டேன்.

அப்படியானால் காமமும் க்ரோதமும் ஒன்றா என்ன? காமம் ஆசைப்படுகிற உண்ர்ச்சி, விருப்புணர்ச்சி. க்ரோதம் என்பதோ த்வேஷ உணர்ச்சியில் உண்டாவது. நேர்மாறான விருப்பும் வெறுப்பும் எப்படி ஒன்று? ஸ்வதர்மம் வேண்டாம் என்று விடுவது வெறுப்பிலே. பரதர்மம் வேண்டும் என்று எடுத்துக்கொள்வது விருப்பத்திலே. இந்த இரண்டும் எப்படி ஒன்று?

ஒன்றுதான். யோசித்துப் பார்த்தால் புரியும். காமமே நிறைவேறாதபோது க்ரோதம் என்ற ரூபத்தை எடுத்துக் கொள்கிறது என்று புரியும். நமக்கு ஒன்றிலே ஆசை இருந்து அது கிடைக்காவிட்டால்தான் கோபம் உண்டாகிறது. நமக்கு ஒருத்தரிடம் வெறுப்பு ஏற்படுகிறதென்றால் அது நமக்கு எது விருப்பமோ அதற்கு மாறாக அவர் நடக்கிறார் என்பதால்தான். நம் விருப்புப் பூர்த்திக்குத் தடை ஏற்பட்டால் அதுவே வெறுப்பாகிறது. நம் ஆசையின் நிறைவேற்றத்துக்கு எதுவோ குறுக்கே வந்தால் அதனிடம் கோபம் உண்டாகிறது. பரதர்மத்திலே ஏற்படுகிற ஆசை அல்லது விருப்பத்துக்கு தடையாக இருக்கிறது என்பதால்தான் ஸ்வதர்மம் வேண்டாம் என்று அதை வெறுத்து விட்டுவிடத் தோன்றுகிறது. ஒவ்வோர் ஆசைக்கும் இப்படியே. ஆசையாலேயே த்வேஷம் ஏற்படுகிறது. பந்தை எறிகிறோம் – இதுவே நம் ஆசையின் ஓட்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது குறுக்கே தடையாக சுவர்மாதிரி எதுவோ வருகிறது. உடனே பந்து நம்மிடமே திரும்புகிறதல்லவா? அப்படித் திரும்பும் வேகம்தான் க்ரோதம்.

ஆசார்ய பாஷ்யம் இப்படித்தான் காமம் க்ரோதம் என்ற இரண்டையும் ஒன்றாகவே சொல்கிறது. “காமமே தான் ப்ரதிஹதமாகிறபோது க்ரோதமாகப் பரிணமிக்கிறது” என்று ஆசார்யாள் சொல்கிறார். “ப்ரதிஹதம்” என்றால் ஒன்றிலே போய் மோதிக்கொண்டு திரும்புவது என்று அர்த்தம்.

ஆனால், நடைமுறையில் விருப்பு, வெறுப்பு என்கிறவை எதிரெதிர் உணர்ச்சிகளாகத் தெரிவதால் இரண்டாகச் சொல்றோம்.

பகவானே இன்னோரிடத்தில் (2-62) சொல்லியிருக்கிறார்.

காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே |

(ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது)

மேலே அர்ஜுனன் கேள்விக்கு பதில் சொன்னபோது காம – க்ரோதம் என்ற இரண்டு மாதிரி சொல்லி, இரண்டு இல்லை என்றும் தெரிவிக்கிற விதத்தில் அப்புறம் ஒருமையில் சொன்னாரென்று பார்த்தோம்.

இன்னோரிடத்தில் (16-21) ஒன்றில்லை, இரண்டில்லை, மூன்று விஷயங்களைச் சொல்கிறார். பாபத்தில் தூண்டுவது காம – க்ரோதம் என்று மேலே சொன்னாரோல்லியோ? அந்தப் பாபத்தினால் நமக்கு ஸம்பவிப்பது என்ன? ஸம்ஸாரம். ஸம்ஸாரத்திலும் ரொம்ப கோரமான அநுபவம் நரகவாஸம். நரகத்தைப் பற்றித்தான் மூன்று விஷயங்களைச் சொல்கிற இடத்தில் குறிப்பிடுகிறார்:

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசந – மாத்மந: |

“ஆத்ம நாசம் என்ற நரகத்துக்கு வழி திறந்துவிடுகிற வாசல்கள் மூன்று விதமானவை.”

என்னென்ன?

காம: க்ரோதஸ் – ததா லோப:

“காமம், க்ரோதம், லோபம் என்கிறவை.”

‘லோபம்’ என்றால் என்ன? காமத்திலேயே ஒரு அம்சம்தான் அது. புருஷனுக்கு ஸ்த்ரீயிடம், ஸ்த்ரீக்குப் புருஷனிடம் உண்டாகும் ஆசையிலிருந்து, பீச்சுக்குப் போக வேண்டும், அங்கே சுண்டல் வாங்கிச் சாப்பிடவேண்டும் என்றிருக்கிற ஆசை வரை லோகத்தில் எத்தனை ஆயிரம் தினுஸு ஆசையிருக்குமோ அத்தனையும் காமம்தான். மஹா பெரியவர்களுக்குத் தன்னைத்தானே தெரிந்துகொண்டு தானாக இருக்கவேண்டும் என்ற உசந்த நாட்டமிருக்கிறதே, இதைக்கூட உபநிஷதத்தில் ‘ஆத்ம காமம்’ என்றுதான் சொல்லியிருக்கிறது என்றேனே! இத்தனை விதமான ஆசைகளுக்குள்ளே பொருளில், ஸொத்தில் இருக்கிற ஆசைக்கு மாத்திரம் லோபம் என்று பெயர். தன் பொருளை விடவே மனஸில்லாமல் இறுகப் பிடித்துக் கொண்டிருப்பவனை லோபி என்கிறோம்.

ஆக, லோபமும் காமத்தின் ஒரு ‘பார்ட்’டாகவே இருந்தும் பகவானே இங்கே, ‘த்ரிவிதம் – மூன்று தினுஸு, ஒன்று – காமம், இரண்டு – க்ரோதம், மூன்று – லோபம்’ என்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பாபத்தில் தள்ளும் சக்தி எது?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தீயவை அனைத்தும் ஆசையிலிருந்தே
Next