அபவாதத்துக்குக் காரணம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இங்கே த்வாரகையில் பகவான் பல தினஸாக எண்ணி துக்கப்பட்டுக் கொண்டிருந்தார். “இந்த ஸ்யமந்தகத்தால் எத்தனை கஷ்டம் வந்துவிட்டது? ப்ரஸேனன், ஸத்ராஜித், சததன்வா என்று மூன்று பேரை அது பலி வாங்கிவிட்டது. முதலில் அது ஸத்ராஜித்திடமிருந்து நமக்கு அபவாதம் வாங்கி வைத்தது; இப்போது அண்ணாவே நம்மை விகல்பமாக எடுத்துக்கொண்டு தேசாந்தரம் போகும்படிச் செய்திருக்கிறது. அக்ரூரர் ஊரிலில்லையென்பதால் அவர்தான் அதோடு போய்விட்டாரென்று ஊஹிக்கவேண்டியிருக்கிறது. அதாவது ஸத்தான அந்த ஆத்மாவை இங்கேயில்லாதபடி பண்ணியிருப்பதும் ஸ்யமந்தகம்தான். ஸத்யபாமாவுக்கோ பிதாவின் மரணத்தினால் அது பெரிய சோகத்தை இழைத்திருக்கிறது. ஊரே நம்மை ஸந்தேஹப்படுகிறது. எதனால் இப்படிப் பல கஷ்டங்கள்? எதனால் இப்படி மறுபடி மறுபடி மித்யாபவவாதத்துக்கு ஆளாகிறோம்?” என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நாரத மஹர்ஷி வந்தார். எப்போது வரணும், எப்போது வந்தால் கதையில் ஸ்வாரஸ்யமான திருப்பம் உண்டாக்கமுடியும் என்று அவருக்குத் தெரியும்.

“ஸ்வாமீ! தாங்கள் ஏதோ விசாரத்தில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிகிறதே, என்ன காரணம்?” என்று பகவானைக் கேட்டார்.

பகவான் ஸ்யமந்தகத்தினால் உண்டான அனர்த்த பரம்பரையை அவருக்குச் சொன்னார். “எனக்கு ஏன் இப்படி மித்யாபவாதம் திரும்பத் திரும்ப ஏற்படுகிறது? தேவர்ஷியான தங்களுக்குத் தெரியாததில்லை, தாங்கள் தான் காரணம் சொல்லவேண்டும்” என்று ஸாக்ஷாத் பரமாத்மா தம்மைக் குறைத்துக்கொண்டு விநயத்தோடு கேட்டார்.

“ஓ அதுவா? இதோ சொல்கிறேன். நீங்கள் ஒரு பாத்ரபத சுக்ல சதுர்த்தியின் போது சந்த்ரனைப் பார்த்து விட்டீர்கள். அதனால்தான் விக்நேச்வர சாபத்தினால் வீண் அபவாதத்துக்குப் பாத்ரமாகிவிட்டீர்கள்” என்று நாரதர் சொன்னார். “பிள்ளையாரென்று ஆரம்பித்துவிட்டு என்னவோ க்ருஷ்ணர் கதையே சொல்லிக்கொண்டு போகிறாரே” என்று நினைத்தவர்களுக்கு இப்போதுதான் விஷயம் வர ஆரம்பித்திருக்கிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அக்ரூரம் மணியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பாத்ரபதம் பஞ்சாங்க வித்யாஸம்
Next