தீயவை அனைத்தும் ஆசையிலிருந்தே : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஷட்ரிபுக்கள் என்று ஆறு உட் பகைவர்களைச் சொல்வதில் காமம், க்ரோதம், லோபம் முதல் மூன்று. மோஹம், மதம், மாத்ஸர்யம் என்பவை பாக்கி மூன்று. யோசித்துப் பார்த்தால் இதுகளும் காமத்திலே, ஆசையிலே பிறந்தவைதான். மோஹம் என்பது என்ன? ஒன்றிடம் ஆசையினாலே அப்படியே அறிவிழந்து மயங்கிக் கிடப்பதுதான். மதம் என்பதும் தம் ஆசைப்படியெல்லாம் இருக்கலாமென்ற திமிர்தான்; அல்லது நம் ஆசைப்படி நடந்துவிட்டது என்ற திருப்தியில் உண்டாகும் கொழுப்புத்தான். மாத்யஸர்யம் என்பதாக இன்னொருத்தனிடம் பொறமைப்படுவது எதனால்? நம்மிடம் இல்லாத எதுவோ ஒன்று அவனிடம் இருக்கிறது; பணமோ, புத்தியோ, செல்வாக்கோ எதுவோ ஒன்று அது நம்மிடம் இல்லையே என்பதால்தான் மாத்ஸர்யம்- அதாவது அது நமக்கு வேண்டும் என்ற ஆசைதான் மாத்ஸர்யத்தை உண்டாக்குகிறது. இவ்வாறாக, உட்பகைவர் என்கிற ஆறு அஸுரர்களுக்கும் காமம்தான் மூலம் என்றாயிற்று.

ஆகையால் ஸதா ஸர்வ காலமும் நம்மைப்பிய்த்துப் பிடுங்கிக்கொண்டிருக்கிற தேவாஸுர யுத்தம் நிற்கவேண்டுமானால் மூல விரோதியாக இருக்கப்பட்ட காமம் என்கிற அஸுரனை இல்லாமல் பண்ணிவிடவேண்டும். ஜீவன் சாந்த நிலை அடைய ஒரே வழி ஆசா நாசம்தான்.

‘காமம் என்ற பெருந்தீனிக்காரனான பாபியை உன்னுடைய பரம விரோதி என்று புரிந்துகொண்டு சண்டை போடு: மஹாசநோ மஹா பாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்.’

காமத்தை அது இது என்று அஃறினையாகச் சொல்லாமல் அவன், பெருந்தீனிக்காரன் என்று personify செய்து சொல்கிறார். பரமாத்ம தத்வமே அவராக வந்திருக்கிறது. ஜீவனைத் தூக்கி விடுவதற்காகத் தத்வப்பொருள் க்ருஷ்ண பரமாத்மாவாக கண், காது, மூக்கோடு ஆகி வந்திருக்கிறது. அப்படிப்பட்ட தாம், ஜீவனைக் குழியிலே தள்ளும் தீய சக்தியையும் ஒரு ஆளாகத்தான் சொல்ல வேண்டுமென்று, இப்படிச் சொல்கிறார். இவர் தேவ சக்தி; அது அஸுர சக்தி.

‘மஹாசனன், மஹாபாப்மா’ என்று காமத்தை, அல்லது காமனை (அவனிலேயே க்ரோதனும் அடக்கம். அப்படிப் பட்ட காமனை)ச் சொல்கிறார்.

‘மஹாசந:’ – பெருந்தீனிக்காரன். ‘அசநம்’ என்றால் சாப்பாடு. ‘அசனன்’ என்றால் சாப்பிடுகிறவன். அக்னிக்கு “ஹுதாசனன்” என்று பெயர். ஆஹுதியைச் சாப்பிடுபவனாதலால் இப்படிப் பேர். ‘மஹா அசனன்’ – நிறையச் சாப்பிடுகிறவன். “கொண்டா,கொண்டா!” என்று வாங்கிச்சாப்பிடும் குண்டோதரன். விஷயாநுபோகங்களை இப்படித்தான் இந்த்ரியங்கள் மூலம் வாங்கி வாங்கித் தின்று கொண்டே இருக்கிறான் காமன்.

இவன் “மஹா பாப்மா”. “பாப்மா” என்றால் பாபம்தான். உபநிஷத்தில் ஆத்மா பாபமற்றது என்று சொல்லுமிடத்தில் “அபஹத பாப்மா” என்று இருக்கிறது*. காமத்தைக் காமன் என்கிற மாதிரி அவனையே பாபி, பாபாத்மா என்ற அர்த்தத்தில் ‘பாப்மா’ என்கிறார். ஸாதாரண பாபி இல்லை, “மஹா பாப்மா”, அதாவது, பெரும்பாவி. ஜீவர்களைப் பாபத்தில் புகுத்துவது யார் என்று அர்ஜுனன் கேட்டானே, அது இவன்தான். அதனால் இவன் மஹாபாபத்தின் வடிவமாகவே இருக்கவேண்டும்.

“இவனையே ஸம்ஸாரத்தில் பெரிய சத்ருவாக நீ அறிய வேண்டும்” என்கிறார் பகவான். ‘வித்த்யேநம் இஹ வைரணிம்.’

‘இஹ’ – ‘இஹ பர’ என்பதில் ‘இஹ’ மான ஸம்ஸாரத்தில்,

‘ஏநம்’ – இவனையே, காமத்தையே,

‘வைரிணம்’ – சத்ருவாக; அதாவது தேவாஸுரப் போரில் அஸுர ராஜாவான முதல் விரோதியாக,

‘வித்தி’ – அறிவாயாக!

‘இப்போது கௌரவ ஸேனையோடு நீ போட வேண்டிய யுத்தம் லோகத்துக்காக. உனக்காக நீ போட்டுக்கொள்ள வேண்டியது துரியோதனன் ஸ்தானத்தில் ஆசையஸுரன் தலைமை வஹிக்கிற துர்வ்ருத்தி ஸேனையோடுதான்’ என்கிறார் பகவான்.

ஸரி, ஆசையால்தான் அத்தனை கஷ்டமும் என்று தெரிந்துவிட்டது. ஆசை என்பது மனஸுக்கு ரொம்பவும் சௌக்யத்தைத் தருகிற மாதிரித் தோன்றினாலும், சௌக்யத்தை அடையவே நாம் நமக்கு ஏற்படுகிற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறோமாயினும், கஷ்ட பரம்பரை அத்தனைக்கும் அதுதான் காரணம் என்று தெரிகிறது. ஆசார்யாள் தம்முடைய பாஷ்யத்தில், இதன் நிமித்தமாகத்தான் ப்ராணிகளுக்கு ஸர்வ அனர்த்த ப்ராப்தியும் என்கிறார். நிறைவேறாவிட்டால் கோபம், அநுதாபம் தயை முதலான குணங்களை அழித்துக்கொண்டு ஒரு தானமா, தர்மமா, உபகாரமா பண்ணாமல் நம்மிடம் உள்ளதைப் பேராசையோடு பிடித்துக்கொண்டிருக்கிற லோபம்; இப்படி பிடித்துக் கொண்ருக்கிற வஸ்துவிலேயே புத்தியை இழப்பதான மோஹம்; ஆசை நிறைவேறிவிட்டாலோ அந்தத் திமிரிலே மதம்; இன்னொருத்தனிடம் இருப்பதில் நமக்குள்ளே ஆசையால் அவனிடம் உண்டாகும் மாத்ஸர்யம் என்றிப்படி பாபத்துக்கு மேல் பாபமாக நம்மை அஸுரர்கள் நரகத்துக்கு இழுப்பதெல்லாம் ஆசையை மூலமாக வைத்தத்தானே?

ஆசை என்பது எப்படிப் பார்த்தாலும் பொல்லாததாக இருக்கிறது – நிறைவேறினாலும் மதத்தை உண்டாக்குகிறது, ஆசை தன்னுடைய நிறைவேற்றத்தால் கிட்டிய பொருளிடம் மோஹத்தையும், அதைக் கொஞ்சங்கூட மற்றவர்களுக்கு ப்ரயோஜனப்படுத்தக்கூடாது என்ற லோப குணத்தையும் ஏற்படுத்துகிறது. நிறைவேறாவிட்டாலோ க்ரோதம், மாத்ஸர்யம் இவற்றை ஏற்படுத்துகிறது.

இது தெரிந்துவிட்டது. அதாவது அத்தனை கஷ்டமும் காமம் ஒன்றால்தான். எல்லாக் கஷ்டத்துக்கும் மூலமான அஸுரன் இதுதான் என்று தெரிந்துவிட்டது. சௌக்யத்துக்காக ஆசைப்பட்டுப் பரம அசௌக்யத்தில், கஷ்டத்தில் போய் மாட்டிக் கொள்கிறோம்.


* சாந்தோக்யம் 8, 1.5, 8.41

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is காம - க்ரோதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸந்தோஷத்தினாலேயே கஷ்டம்
Next