ஸந்தோஷத்தினாலேயே கஷ்டம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஸெளக்யம் என்று போய்க் கஷ்டத்தில் விழுகிறோம். ஸந்தோஷம் தருவது என்று நினைத்து ஆசையை வளர்த்துக் கொண்டு அதனாலேயே துக்கத்தை அடைகிறோம். இங்கேயும் ஆசை நிறைவேறாவிட்டால்தான் துக்கம் என்றில்லை. ஆசையின் நிறைவேற்றத்தாலேயும் துக்கம்தான். எப்படியென்றால் ஆசை நிறைவேற்றத்தால் எதைப் பெற்றோமோ அது கையை விட்டுப் போய்விடப் போகிறேதே என்று துக்கம். அதோடு பயம். இந்த பயம் நிஜமாயும் ஆகிவிடுகிறது. நமக்குக் கிட்டிய ஆசை வஸ்து நம்மை விட்டுப் போய்விடுகிறது. ப்ரியமானவர் செத்துப்போகிறார், பணத்தைத் திருடன் கொண்டுபோகிறான், அல்லது பாங்கு முழுகிப் போகிறது, அல்லது நமக்குத் திருட்டு போனதாக நேரே தெரியாவிட்டாலும் பண வீக்கத்தில் அதன் மதிப்புக் குறைந்து, ‘ஐயோ! வீடு வாங்கலாம், கல்யாணம் பண்ணலாமென்று வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி மீத்தினோம், இப்போது பார்த்தால் இந்த ஸேவிங்ஸ் க்ரவுண்ட் வாங்கக்கூடப்போதவில்லையே, வரதக்ஷிணைக்குக்கூடப் போதவில்லையே’ என்று துக்கிக்கும்படி ஏற்படுகிறது.

ஸந்தோஷம் தரும் என்றுதான் ஒன்றுக்கு ஆசைப்படுகிறோமென்றாலும் அதை அடைவதற்கே வேறு எத்தனையோ கஷ்டப்பட வேண்டியதாகிறது. ஸினிமா பார்த்து ஸந்தோஷப்பட வேண்டுமானாலும் எத்தனையோ நாழி ‘க்யூ’ வில் கால் வலிக்க நிற்கவேண்டியிருக்கிறது. அப்புறம் ஒரே புழுக்கத்தில் கண்ணை எரியவைக்கிற வெளிச்சத்தோடு, காதைத் துளைக்கிற சப்தத்தோடு ஓடுகிற ஸினிமாவைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதனால் தலைவலியும் கண் எரிச்சலும் உண்டாகின்றன. கிரிக்கெட் பார்த்து ஸந்தோஷப்பட வேண்டுமானால் முதல் நாள் ராத்ரியே அங்கே போய்ப் பனியில் படுத்துக்கொண்டு, பட்டினி கிட்டினி பார்க்காமல் அவதிப்பட்டுக் கொண்டுதான் இடம் பிடிக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள். இப்படித்தான் எதற்கு ஆசைப்பட்டாலும் அது கிடைப்பதற்குக் கூலியாகக் கஷ்டம் ஏதாவது படும்படியே இருக்கிறது. நல்லதற்கு ஆசைப்பட்டாலுங்கூடத்தான். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி, சிதம்பரத்தில் ஆர்த்ரா தரிசனம் பார்க்கணும் என்று நல்லதாக ஆசைப்பட்டாலும் எத்தனையோ இடி மொத்துப்பட்டுக் கொண்டு, பனியிலே குளிரிலே ராவெல்லாம் விறைத்து க்யூவில் கால் கடுத்துக் கஷ்டப்படத்தான் வேண்டியிருக்கிறது. பூஜை பார்க்க வேண்டும், தீர்த்தம் வாங்கிக் கொள்ளவேண்டும் என்கிற ஆசையில் (நல்ல ஆசைதான், அதில்) நீங்கள் (இந்த மடத்துக்கு) வந்தால் நான் மத்யானம் இரண்டு மணி, மூன்று மணிவரை உங்களைப் பட்டினி போட்டுக் கஷ்டப்படுத்துகிறேன்! நல்ல லக்ஷ்யத்துக்கு ஆசைப்பட்டு யோகம், ஸாதனை என்ற எது செய்வதானாலும் அதிலே எத்தனையோ கஷ்டம். பத்மாஸனம் போட்டுக் கொள்வதென்றால் காலை முறித்து விடுகிற மாதிரி வலிக்கிறது! பூஜை என்றால் இந்த புஷ்பம் பத்ரம் இந்த ஸ்வாமிக்கு, இன்னொரு புஷ்பம் பத்ரம் இன்னொரு ஸ்வாமிக்கு, இதற்கு இந்த நைவேத்யம், அதற்கு அந்த நைவேத்யம் என்றெல்லாம் வைத்து கஷ்டப்படுத்தியிருக்கிறது. இன்னம் பஹு கஷ்டமாக உபவாஸம் இருப்பது. அங்க ப்ரதக்ஷிணம் பண்ணுவது, செடில் குத்திக்கொள்வது என்றெல்லாம் வேறு! ‘அப்படியானால் ஸாதனை வேண்டாமா, உத்ஸவங்கள் பார்ப்பதும் க்ஷேத்ராடனம் பண்ணுவதும் கூடாதா, பூஜை பண்ண வேண்டியதில்லையா?’ என்றால், இந்த விஷயத்துக்கு – அதாவது நல்லதாக ஆசைப்பட்டு அதற்காகக் கஷ்டப்படுவது என்ற ஸமாசரத்துக்கு அப்புறம் வருகிறேன். இங்கே சொல்ல வந்தது எப்படிப் பட்ட ஆசையாயிருந்தாலும், ‘ஆசை வர வர ஆய்வரும் துன்பம்’ என்பதுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தீயவை அனைத்தும் ஆசையிலிருந்தே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆனந்தமும் த்ருப்தியும்
Next