ஆனந்தமும் த்ருப்தியும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

எந்த ஆசையும் உண்டாவதற்குக் காரணம் என்ன? நாம் ஸந்தோஷத்தைத் தேடுவதுதான். ஸந்தோஷம் என்பதை விட ஆனந்தம் என்பதுதான் ஸரியான வார்த்தை. ஏனென்றால் நாம், ‘ஸந்தோஷம்’ என்பதுதான் ஆனந்தம், இன்பம், happiness (happiness -கு மேலே bliss, அதற்கு மேலே joy) என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் அப்படியில்லை. ‘ஸந்தோஷம்’ என்பது “த்ருப்தி” என்றே பொருள்படுவது. தோஷம் (tosham) என்றால் த்ருப்தி. நல்ல ஆழ்ந்த த்ருப்தி ஸந்தோஷம். ஆனந்தப்படுவதும், த்ருப்தி கொள்வதும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டவைதான் என்றாலும் இரண்டும் ஒன்று என்று சொல்லமுடியாது. அதற்கப்புறம் அத்ருப்திப்பட எதுவுமே உண்டாக முடியாது என்று நிறைந்த நிறைவாக, முடிந்த முடிவாக த்ருப்திப்படும் ஆத்மானந்தம் ஒன்றில்தான் இரண்டும் ஒன்றே ஆகி விடுகின்றன. மற்ற விஷயங்களில் ஆனந்தத்துக்கும் த்ருப்திக்கும் கொஞ்சம் வித்யாஸமிருப்பதாகத்தான் பார்க்கிறோம். மந்த மாருதம் வீசினால் ஆனந்தமாயிருக்கிறது என்போமே ஒழிய, த்ருப்தியாயிருக்கிறது என்று சொல்லமாட்டோமல்லவா? எதிர்பார்க்கிற ஆசைப் பூர்த்திக்கு மட்டுமே ‘த்ருப்தி’ என்பது பொருந்துகிறது. எதிர்பாராமல் கிடைப்பதை ‘த்ருப்தி’ என்காமல் ‘ஆனந்தம்’ என்று மட்டுமே சொல்கிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸந்தோஷத்தினாலேயே கஷ்டம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஐம்புலனாலும் அழிவடையும் மானுடன்
Next