‘விவேக சூடாமணி’ என்று ஒரு உத்தமமான ஞான நூல். நம்முடைய ஆசார்யாள் பண்ணினது. அதிலே ஒரு ச்லோகத்தில் இந்தப் பஞ்சேந்த்ரிய ஸமாசாரம் வருகிறது. ஒவ்வொரு ப்ராணி, இந்த ஐந்து இந்த்ரியங்களில் ஒவ்வொன்றினால் மட்டும் ஆசை வாய்ப்பட்டு நாசத்தை அடைவதைச் சொல்லி, மனுஷ்ய ப்ராணி மட்டும் ஐந்து இந்த்ரியங்களில் ஒவ்வொன்றாலுமே, அதாவது ஐந்தாலுமே மோஹிக்கப்பட்டு அழிவதைச் சொல்லி எச்சரிக்கிறார், துக்கப்படுகிறார்.
மான் சப்தத்தினால் நாசமடைவது. வேடன் கொம்பு ஊதுவான். அதைக் கேட்கிற ஆசையால் மான் மயங்கி நிற்கும்போதே பாணம் போட்டு அடித்துவிடுவான்.
யானை ஸ்பர்சத்தால் நாசத்தைத் தேடிக் கொள்கிறது. ‘கெட்டா’ (Khedda) என்று மைஸுர்க் காடுகளில் பண்ணுகிறார்கள் – யானையே கொள்ளும்படியான பெரிய பள்ளம் தோண்டி, மேலே அது பள்ளம் என்று தெரியாதபடி செத்தை செடி கொடிகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். பிடிக்க வேண்டிய ஆண் யானை பள்ளத்துக்கு ஒரு திக்கில் இருக்கிறது என்றால், அதற்கு எதிர் திக்கில் பள்ளத்துக்கு அந்தண்டை ஏற்கெனவே பிடித்துப் பழக்கப் படுத்திய ஒரு பெண் யானையைக் கட்டி வைத்திருப்பார்கள். அதை ஸ்பர்சித்து ரமிக்கவேண்டும் என்று ஆண் யானைக்கு ஆசை உண்டாகும். அந்த மோஹத்தில் அது குறுக்கே இருக்கிற பள்ளத்தைப் பள்ளமென்றே தெரிந்துகொள்ளாமல், செத்தை செடிசொடியின் மேலாக ஓடும். அவற்றால் இதன் ‘வெய்ட்’டைத்தாங்கமுடியுமா? அப்படியே ஒடிந்து அதுகள் விழ, யானையும் பள்ளத்தில் தொபுகடீர் என்று விழுந்துவிடும். பிடித்து விடுவார்கள்.
ரூபத்தால் நாசமடையும் ஜந்து விட்டில் பூச்சி – தீபத்தின் பளீர் ரூபத்தில் ஆசைப்பட்டுத் தானே வந்த அதில் விழுந்து மடிகிறது? ‘ரஸம்’ என்பதாக வாய்க்கு ஆசை காட்டும் ஆஹாரத்தால் மீன் உயிரை விடுகிறது – தூண்டிலில் உள்ள புழுவைத் தின்ன ஆசைப்பட்டுச் சாகிறது. வண்டு கந்தத்தினால் மரணத்தைத் தேடிக் கொள்கிறது. பெரிசு பெரிசாகச் சம்பகப் பூக்கள் உண்டு. அதன் வாஸனையில் நமக்கே மூக்கில் ரத்தம் கொட்ட அரம்பித்துவிடும் – அத்தனை தீக்ஷ்ணமான ஸுகந்தம்! இப்படிப் பட்ட புஷ்பங்களுக்குள்ளே போய் வண்டு உட்கார்ந்து கொண்டு அப்படியே தன் மதி இழந்து சொக்கிப்போய்விடும். அப்போது புஷ்பத்தின் இதழ் ஒவ்வொன்றாக மூடிக் கொண்டு, மலந்திருந்த புஷ்பம் நன்றாகக் கூம்பிவிடும். அதற்குள் மாட்டிக்கொண்ட வண்டுக்கு அதோடு ஆயுஸ் தீர்ந்துபோகும். இப்படி “பஞ்ச” இந்த்ரியங்களில் ஒவ்வொன்றால் ஒவ்வொரு ப்ராணி “பஞ்சத்வம்” (மரணம்) அடைகிறது என்று ஆசார்யாள் சிலேடை செய்கிறார். மநுஷ்யன் ஐந்தாலுமே அழிகிறோனே என்று பரிதாபப்படுகிறார்:
சப்தாதி: பஞ்சபிரேவ பஞ்ச பஞ்சத்வம் – ஆபு: ஸ்வகுணேந பத்தா: |
குரங்க – மாதங்க – பதங்க – மீந – ப்ருங்கா நர: பஞ்சபிரஞ்சித: கிம் ||
‘குரங்க’ என்றால் மான் குரங்கில்லை. ‘மாதங்கம்’ என்றால் யானை. ‘பதங்கம்’ விட்டில். மீனம்தான் மீன். ப்ருங்கம் என்றால் வண்டு.
‘நர:’ – மநுஷ்யனானவன்; ‘பஞ்சபி:’ – ஐந்தாலும் (ஐம்புலனாலும்); ‘அஞ்சித:’ – கவரப்பட்டிருக்கிறான். ‘பஞ்சபி:அஞ்சித:’ என்பது ஸந்தியில் ‘பஞ்சபிரஞ்சித:’ என்றாயிருக்கிறது. ‘கிம்’ என்று முடித்திருக்கிறார். ‘கிம்’ என்றால் ‘என்ன’. ஐயோ, இப்படி மநுஷ்ய ஜீவனானது பஞ்சேந்த்ரியத்தாலும் கவர்ந்திழுக்கப்படுகிறதே, என்ன பண்ணலாம்?’ என்று பரம கருணையோடு, ‘கிம்’ போட்டிருக்கிறார்.
ஆசை, ஆனந்தம் என்று போய் அடியோடு ஏமாந்து நாசமடைவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன்.