ஆனால், எப்போதும் இந்த மாதிரி அடியோடு கெடுதலாகத்தான் நடக்கிறது என்று ‘பெஸ்ஸிமிஸ்டிக்காக’ச் சொல்லக்கூடாது. இப்படியும் அநேக ஸமயங்களில் நடக்கிறதென்றே காட்டவந்தேன். கொஞ்சமாவது ஆனந்தம், அதோடு துக்கம் கலந்து வருவது என்பதாகத்தான் பெரும்பாலும் பார்க்கிறோம். புத்தியையும் கெடுத்து, உடம்பையும் கெடுத்து, குடும்ப வாழ்க்கையையும் கெடுப்பதான மதுபானத்தில் ஒருத்தன் போனானானால்கூட, குடிக்கிற அந்த ஒரு நிமிஷம் அவனுக்கு ஒரு ஆனந்தம் இருக்கக்கூடும். ஹோட்டலில் போடுவதில் எப்போதுமே சுட்ட எண்ணெயும், ஊசலும்தான் என்றில்லாமல் வாய்க்கு ருசியாகவும், அதாவது நாக்குக்கு நிஜமாகவே ஆனந்தமளிப்பதாகவும் போடலாம்; அப்போதும்கூட அதற்கான bill, இந்த அநாசாரத் தீனியால் ஏற்படும் ஆத்மஹானி ஆகியவற்றைப் பார்த்தால் ஆனந்தப்படுவதைவிட துக்கப்பட வேண்டியதே ஜாஸ்தி என்று தெரியும். வித்வானுக்கு எப்பவும் தொண்டை கட்டுவதில்லை. சாரீரம் வசதியாயிருந்து, mood -ம் நன்றாயிருந்து அவர் பாடினால், “கொடுத்த காசு வீணில்லை” என்று தோன்றுகிறது. இங்கே ஆனந்தமும் துக்கமும் ஸமம். கைக் காசு போட்டு டிக்கட் வாங்கியது துக்கம்தான், இப்போது அப்படித் தெரியாவிட்டாலும் வித்வான் நன்றாகப் பாடியிராவிட்டால் அப்போது தெரிந்திருக்கும்.
‘இன்னும் எத்தனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்’ என்று நினைக்கும்படியாக வித்வான் பாடியிருந்தால் அப்போது துக்கத்தைவிட ஆனந்தம் ஜாஸ்தி. Free pass இலவசச்சீட்டு கிடைத்து ஸபாவுக்குப் போய், வித்வானும் வெளுத்து வாங்கிவிட்டால் அப்போது (செலவு என்பதால் ஏற்படும்) துக்கமில்லாத ஆனந்தம்!
வாஸ்தவம். ஆனால் இந்த ஆனந்தமும் சாச்வதமாய் நின்றதா? dull -ஆக depressed -ஆக, இந்த அழுமூஞ்சி ஸம்ஸாரத்தை நினைத்துக் கொண்டிருக்காமல் ஸபாவுக்குப் போகலாமென்று நினைத்தான். “ஓஸி” டிக்கெட்டும் கிடைத்தது. கச்சேரியும் நன்றாயிருந்தது. ஆனந்தமாகக் கேட்டான். ஆனால் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அந்த ஆனந்தம் அப்படியே இருந்ததா? “கச்சேரி விமரிசையை அகத்திலே கொஞ்சம் ‘அளந்து’ உத்ஸாஹப்படுத்திக் கொள்ளலாம்” என்று இவன் நினைத்துக்கொண்டு வந்தான். ஆனால் ஊர் சுற்றிவிட்டு நாழி கழித்துச் சாப்பிட வந்திருக்கிறானே, போட (பரிமாற) வேண்டுமே என்று அகமுடையாள் உர்ரென்று இருக்கிறாள்! இவனுடைய ஆனந்தம் போய் Dull அடித்து, மறுபடி depressed ஆகிவிடுகிறது. படுக்கப்போய் காற்றில்லை, கொசு பிடுங்குகிறது என்றால் இப்போது அந்தக் கச்சேரி ஆனந்தத்தில் லவலேசமாவது ஆற்றிக் கொடுக்க வருகிறதோ?
இப்படியே ரேஸுக்குப் போகிறவர்களில் ஜயிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் அந்தப் பணம் கொண்டு வந்த ஆனந்தம் சாச்வதமாயிருக்கிறதா? அதனாலேயே எத்தனையோ தொல்லை, ஸங்கடம் வருகிறது. பணமும் ஸொத்தும்தான் மநுஷ்யன் பல விதக் கெடுதல்களில் போய்க் கஷ்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்குக் காரணமாயிருக்கிறது. இந்த லோகத்தில் கஷ்டமே படாமல், ஸுக ஜீவனம் செய்தே செத்துப்போகிற பணக்காரர்களும் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் பணத்துக்காக அல்லது பணத்தினால் செய்த அநேகக் கெடுதல்களுக்காக – தொழிலபிவிருத்திக்காக லஞ்சம் கொடுத்தது, யாசகனை அடித்து விரட்டியது இப்படி ஏதாவது கெடுதலுக்காக – பரலோகத்தில் பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கும்; அதாவது கஷ்டப்பட வேண்டித்தானிருக்கும். கொஞ்சமோ நஞ்சமோ கஷ்டத்தை உண்டாக்காமல் பொருளாசை ஒருத்தனை விடுவதென்பது நடக்காத கார்யம்.
கஷ்டமே தராமல், துக்கமே கொடுக்காமல் ஆனந்தத்தைத் தரும் ஆசாபூர்த்தியும் (ஆசையின் நிறைவேற்றமும்) அப்போதைக்கு மட்டும் தாற்காலிக – மாகத்தான் அந்த ஆனந்தத்தைத் தருமேயன்றி, சாச்வத ஆனந்தம் தருவதில்லை. ‘ஷவர்’ ரொம்பவும் ஹிதமாகவே கொட்டினாலுங் கூட அதிலேயே சாச்வதமாக நிற்க முடியாது. உசந்தால் அரை மணிக்கு மேல் தாங்காது. வித்வான் எத்தனை நன்றாகப் பாடினாலும் அவர் ஐந்து மணி, ஆறு மணி பாடிக்கொண்டே போனால் ‘போர்’ அடித்துவிடுகிறது வீட்டுக்குப் போக பஸ் கிடைக்குமா என்று விசாரம் ஏற்படுகிறது!
பாதாம்கீர் நன்றாயிருக்கிறது என்றாலும் எத்தனை டம்ளர் சாப்பிடுவது? இரண்டு மூன்று டம்ளர் சாப்பிட்டால் வயிறு முட்டிப்போகிறது. அதற்கு மேலே உபசரித்தால், ‘அய்யோ, தயவு செஞ்சு விட்டுடப்பா’ என்று கெஞ்சுகிறோம். இந்த இரண்டு மூன்று டம்ளராவது நல்லது பண்ணுகிறதா? இல்லை. ஒன்றோடு நிறுத்திக் கொண்டிருந்தால் உடம்புக்குப் புஷ்டியைத் தந்திருக்கும். ஆசையின் மேலே மேலும் இரண்டு டம்ளர் சாப்பிட்டதில் வயிற்றுப் போக்கு, வாயில் எடுப்பு உண்டாகிறது. ஆனந்தம் ஸம்பாதித்துக் கொண்டது நன்றாயிருக்கிறதல்லவா?
ஆசை வஸ்துவை அளவோடு நிறுத்திக்கொள்ள முடிவதில்லை. அதற்கு மேல் வேண்டியிருக்கிறது. அதற்காக, “அதையே சாச்வதமாய் அநுபவி, நாள் பூரா பாட்டுக்கேளு, அண்டா பாதாம் கீர் சாப்பிடு” என்றாலும் முடிவதில்லை. புஸ்தகப் புழு என்று நாளெல்லாம் படிப்பவர்களுக்குக்கூட ஒரு இடத்தில் அலுப்புத் தட்டி புஸ்தகத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, கொஞ்சும் ‘வாக்’ பண்ணிவிட்டு வரலாம் என்று புறப்படுகிறார்கள். அலுப்பாவது சாச்வதமாகத் தட்டிவிட்டதா, அப்படியாவது இந்தப் பாட்டு அசை, சாப்பாட்டு ஆசை, படிக்கிற ஆசை, அல்லது வேறு எத்தனையோ ஆசைகளில் ஒன்று அடியோடு தீர்ந்ததா என்றால் அதுவும் இல்லை, இன்றைக்கு வேண்டாம் என்று விட்ட ஆசை நாளைக்கு ரொம்பவும் வேண்டியதாக அரித்தெடுக்க ஆரம்பிக்கிறது.