இன்னொரு விசித்ரம் – ஆனந்தத்தைத் தருவது என்பதால் ஒன்றிலே ஆசை ஏற்படுவதாகப் பார்த்தோம். ஆனால் இந்த போக்ய வஸ்து அதன் அநுபோகத்தில் ஏதோ ஒரு அளவில் அலுத்துப் போவது மட்டுமில்லாமல், கால தேச ஸந்தர்ப்பாதிகளாலும் ஒவ்வொரு ஸமயத்தில் வேண்டாததாகி விடுகிறது. இப்போது ஆனந்தம் தருகிற ஒன்று எப்போதும் ஆனந்தம் தருவதில்லை. எத்தனை ருசியான ஆஹாரமானாலும், நமக்கு ரொம்பவும் பிடித்தமான உணவு பதார்த்தமானாலும் கொஞ்சம் ஜ்வரம் வந்துவிட்டால் வைக்க வழங்குகிறதா? வேண்டும், வேண்டும் என்று எந்தப் பதார்த்தத்தைத் தேடிப்போய்ச் சாப்பிடுவோமோ அதையே இப்போது வேண்டவே வேண்டாம் என்கிறோம். தேடிப் தேடிப் போய் எது எதுகளை பர்ர்போபமோ அவற்றையே கண்வலி வந்தால் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்கிறோம். உசந்த காஷ்மீர் சால்வைதான். ‘எத்தனை ஹிதமாய் இருக்கிறது?’ என்று மார்கழி மாஸம் எடுத்தும் போர்த்திக் கொண்டோம். சித்திரை பிறக்கிறது. அதே சால்வைதான். அது ஹிதம் தருகிறதா? மேலே பட்டாலே ‘நெருப்பாட்டம்’ இருக்கிறது. முதல் கார்யமாகப் பெட்டியிலே போட்டு மூடுகிறோம்.
வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். பிரிட்டிஷ் துரைத்தனத்தார் காலத்தில் கிஸ்தி நோட்டீஸ்கள் வருமாம், நிலச் சொந்தக்காரனுக்கு, ‘இப்படித் தீட்டி விட்டானே!’ என்று கோபம் கோபமாக வருமாம். இந்தக் காலத்தில் ‘ஒரு தினுஸில்’ உத்யோகஸ்தர்களை (உத்யோகஸ்தர்களை விட அரசியல்வாதிகளை) ‘ஸரி கட்டி’ வரி, கிரி எதுவானாலும் ஸாதகமாக மாற்றிக் கொள்வதாகச் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் இந்த ‘தினுஸு’ அவ்வளவாக நடைமுறையில் இல்லை. அடியோடு இல்லாமலில்லை. ஆனால் இப்போது தாண்டவம் பண்ணுகிற அளவுக்கு அப்போது இல்லை. இப்போது மாதிரி எடுத்ததற்கெல்லாம் ‘ரிட்’டும் அப்போது போடமுடியாது. ஆனதால் அந்த நிலச்சுவான்கள் மூக்கால் அழுதுகொண்டே கிஸ்தியைக் கட்டிவிடுவார்களாம். மனஸிலே மட்டும், ‘வரி போட்ட ஆபீஸரை எப்படியாவது பழி வாங்கவேண்டும்’ என்று கங்கணம் கட்டிக்கொள்வார்களாம்.
தநுர்மாஸ பஜனை முடிந்து ராதா கல்யாணம் நடக்கும். நிலக்காரர்கள் அதற்கு அந்த உத்யோகஸ்தரை மரியாதை பண்ணிக் கூப்பிடுவார்கள். அவரும் வருவார். ராதா கல்யாண முஹ¨ர்த்தம் முடிந்து நன்றாக போஜனமும் பண்ணி வைத்து, சந்தன தாம்பூலம் கொடுத்து உத்யோகஸ்தரை ரொம்பவும் மரியாதையுடன் அனுப்பிவைக்கிற கட்டம் வரும்.
‘நன்னா சந்தனம் பூசிக்கோங்கோ, பூசிக்கோங்கோ’ என்று அவரிடம் கேட்டுக்கொள்வார்கள். நல்ல குளிர் மாசம். அவர் எவ்வளவு பூசிக்கொள்வார்? ஏதோ கையில், கழுத்தில் கொஞ்சம் தடவிக் கொள்வார்.
வரி கட்டிவிட்டு, மனஸுக்குள் க்ஷாத்ரமாயிருப்பவர்கள் பழிவாங்குவதற்கு இதிலேதான் ‘ஆயுத’த்தை ஒளித்து வைத்துக் கொண்டிருப்பார்கள்! வெளியிலே மரியாதை குறையாமல் ரொம்பவும் அன்பு ஸ்வாதீனமாக, யார்டா அங்கே? ஸார் ஷர்ட்டைக் கழட்டுடா, ராதா க்ருஷ்ண ப்ரஸாதமா உடம்பெல்லாம் சந்தனம் தடவலாம்” என்று சொல்லி, அப்படியே அவர் உடம்பெல்லாம் பேலா சந்தனத்தையும் கொட்டிச் சொத சொதவென்று தேய்த்து விடுவார்களாம். பக்கத்துக்கு ஒருத்தராகக் கூப்பிட்டு நிறுத்திப் பெரிய பெரிய விசிறிகளை அவர்களிடம் கொடுத்து, “ஸாருக்கு நன்னா விசுறுங்கோடா” என்பார்களாம்.
இந்த பலவந்த உபசாரத்தில் அதிகாரி உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்கிக்கொண்டு தவியாய்த் தவித்து ஊரைவிட்டு மாற்றல் கேட்டுக்கொண்டு ஒடிப்போய்விடுவாராம்! ஆயுதமாக ஹிம்ஸித்த இந்த சந்தனமும் விசிறியும் சித்திரை வைகாசியில் ‘சைத்யோபசாரம்’ என்பதாக எத்தனை ஆனந்தம் தந்திருக்கின்றன?