ஆக, ஆரம்பித்த இடத்துக்கே திரும்ப வருகிறோம் – நமக்குள்ளே தினந்தினமும் நடக்கிற தேவாஸுர யுத்தத்திலே நல்ல வ்ருத்திகளான தேவசக்திகளை ஹதாஹதம் பண்ணும் கெட்ட வ்ருத்தி என்னும் அஸுர சக்திகளுக்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது ஆசைதான்.
உயர்ந்த ஸந்தோஷத்தைத் தருவதாக நமக்குத் தோன்றுகிற நல்ல ஆசைகள் கூட உண்மையில் துன்பம் தருபவைதான். ஏனென்றால், எப்பேர்ப்பட்ட ஆசையாயிருந்தாலும் அது ஒரு வித அரிப்புத்தான் ஆசை, ஆசை என்பது. மனஸுக்கு எடுக்கிற தாஹம் தான் ஆசை. ஆசையிருக்கிறதென்றால் மனஸ் என்று ஒன்று இருக்கிறது என்றே அர்த்தம். மனஸ் என்பது இருந்துவிட்டால் உபத்ரவம்தான். மனஸ் அத்மாவுக்கு த்விதீயமான வஸ்து; அதனால் பஹேதுவானது என்று பார்த்தோமே! இந்த மனஸ் என்கிற வஸ்துதான் அகண்டானந்தமான பரமாத்மா சிறுத்துக் குறுகி போய் ஜீவாத்மா என்று வேஷம் போட்டுக்கொள்ளும்போது இப்படி அதைச் சின்னதாகக் குறுக்க வைத்துக் கட்டுவது. தனி ஜீவன்கள், Individual -கள் என்று தங்களை அவர்கள் தெரிந்துகொள்வதே தனித்தனி மனஸ்களைக் கொண்டுதான். ஆனதால் மனஸ் என்பது பரமாத்மாவுக்கு வேறேயாகத்தான் எப்போதும் இருக்கமுடியும். ரொம்ப உயர்ந்த நிலையில்கூட அது பரமாத்மாவைத் தொட்டுக் கவிந்து கொண்டோ, அல்லது பரமாத்மாவின் சக்தி, கருணை முதலானவற்றை ஒரளவுக்குத் தனக்குள்ளும் நிரம்பிக்கொண்டோதான் இருக்கமுடியுமே தவிர, அப்படியே அவனுடைய அகண்டாகார ஸ்வரூபத்தோடு ஒன்றாகி, அவனுடைய அகண்டாநந்தத்தைத் தானும் அநுபவிக்க முடியாது. இந்த மனஸைப் பூராவும் அவனிடமே கரைத்து இல்லயென்றாக்கிக் கொண்டால்தான் சாச்வதமான அகண்ட ஆனந்தம் கிடைக்கும்.
வைகுண்டத்திலே, கைலாஸத்திலே பேரானந்தம் அநுபவிப்பதாகச் சொல்வதும்கூட மனஸை வைத்துக் கொண்டு பெறும் அநுபவம்தான். த்வைத விசிஷ்டாத்வைத ஸித்தாந்திகள் இது துக்கக் கலப்பேயில்லாத சாச்வத ஆனந்தம் என்று சொல்கிறார்கள். ஆனாலும்கூட அங்கே அவர்கள் முக்தர்களாகச் சொல்பவர்கள் பரமாத்மாவுக்கு வேறேயாக இருந்துகொண்டு, வேறுபட்ட மனஸால்தான் அவரை அநுபவிக்கிறார்களாதலால், நிறைந்த நிறைவு நிலையிலேயே நிரந்தரமாக இல்லாமல் குறைவுகளுக்கும், துக்கங்களுக்கும் எப்போதாவது ஒரு ஸமயத்திலாவது ஆளாகத்தான் செய்கிறார்களென்றே புராணங்களிலிருந்து தெரிகிறது. ஸாக்ஷாத் அம்பாள், மஹாலக்ஷ்மியிலிருந்து நாரதர், ஸநகாதிகள், ப்ருங்கி மஹர்ஷி மாதிரியான மஹா மஹா பெரியவர்களும்கூடத் தனியான ஒரு மனஸோடு பரமாத்மாவுக்கு வேறே மாதிரி பாவத்தில் இருக்குமபோது துக்கத்துக்கும் கோபத்துக்கும் ஆளாவது, சாபத்துக்கு ஆளாவது, பரமாத்மாவைப் பிரிந்து ரொம்பவும் துக்கிப்பது, பூலோகத்தில் பிறந்து பச்சாதாபப்பட்டு மிகவும் உக்ரமாகத் தபஸ் செய்து தங்களையே வருத்திக்கொள்வது என்றெல்லாம் அவஸ்தைப்படத்தான் வேண்டியிருக்கிறது என்று புராணக் கதைகளிலிருந்து தெரிகிறது. அதனாலேதான், மற்றப் பற்றுக்கள் (ஆசைகள்) விடுவதற்காகப் பரமாத்மா ஒருவனிடம் மாத்திரம் பற்று (ஆசை) வையுங்கள் என்று,
பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்று திருவள்ளுவர் சொன்னதற்கு மேலேயும் போய்;
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்.
என்று திருமூலர் சொன்னார்.