மரணத்தால் ஆசை அழியுமா? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘ஸரி, இந்த உடம்பு இருப்பதால்தானே ஆசை ஏற்படுகிறது? ஆசையால் துன்பப்படுவது – துன்பப்படுத்துவது, ஆசையால் பயப்படுவது – பயமுறுத்துவது, ஆசையால் அவமானத்துக்கு ஆளாவது – அவமானத்துக்கு ஆளாக்குவது எல்லாம் உடம்பு உள்ளவரைதானே? செத்துப்போனவர்களுக்கு துன்பம் உண்டா, பயம் உண்டா, அவமானமுண்டா?’ என்று நினைத்து மரணத்துக்கு வேண்டிக்கொள்ளலாமா? குளம் குட்டையில் விழலாமா? சாண் கயிற்றைத் தேடலாமா?

ஊஹூம். இது ஸொல்யூஷன் (தீர்வு) இல்லை.

செத்துப் போனவர்களுக்கு ஆசையும் அதனால் ஏற்படும் பயம், அழுகை, அவமானம் முதலானதும் இல்லை என்று முடிவு பண்ணினது தப்பு. செத்துப்போனவர்கள் ஒரேயடியாகப் போய்விடவில்லை. உயிரோடிருந்தபோது பலவிதமான ஆசைகளுக்கு உட்பட்டு அவர்கள் பண்ணிய பாபங்களை உடம்பு போன பின்னும் நரகாதி லோகங்களில் அநுபவித்துவிட்டு பாக்கியை அநுபவிக்க இந்த லோகத்துக்கே அவர்கள் வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

அதாவது, அந்த உடம்புதான் போச்சு. வேறே உடம்பு வந்துவிட்டது. அது மநுஷ உடம்பாகவே இருந்து மறுபடி பழையபடியே ஆசைகள் பட்டு அவஸ்தைகளைத் தேடிக்கொள்ளலாம். அல்லது ஒரு மாட்டின் உடம்பாகி ஏர்க்காலில் அவதிப்படலாம். குதிரையின் உடம்பாகி வண்டிபாரத்தை இழுத்துக்கொண்டு ஓடலாம். ஆக- உடம்பு, அதனால் வருகிற துன்பம் இரண்டையும் சாவினால் போக்கிக்கொண்டுவிட முடியாது.

அதிலும் தற்கொலையால் சாவு தேடிக்கொள்வது என்னும்போது, ப்ராண ஹத்தி என்று இதுவே பெரிய பாபமாகச் சேர்ந்து, இதற்காக வேறு மஹா கஷ்டமான தண்டனைகள் அநுபவிக்க வேண்டிவரும். தற்காலத்தில் சிலர் பெரிய தப்புக் கார்யம் பண்ணிப், ‘பிடிபட்டு விடுவோம்’ என்கிற ஸ்திதி உண்டானாலோ, அல்லது ஸஹிக்க முடியாத பெரிய துக்கம் எதுவாவது ஏற்பட்டாலோ ரிவால்வரை எடுத்துத் தங்களையே சுட்டுக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் ஸம்ஸாரத்தால் உண்டாகும் தீமைகளையும் துக்கங்களையும் போக்கிக்கொள்ள இது ஒரு வழியாகுமா என்றால், ஆகாது. ஸ்தூல சரீரத்தை அழித்துக்கொண்டாலும் அப்புறம் ஸூக்ஷ்மமாக ஏதோ ஒரு மாதிரியான மற்றொரு சரீரம் இருந்துகொண்டிருக்கும். நாம் பண்ணின கார்யம், எண்ணின எண்ணம் எல்லாவற்றுக்கும் காரணமாகவும், அவற்றை அநுபவித்த ஒன்றாகவும், சாவுவரை அநுபவித்தும் தீர்க்காமல் இன்னும் பாக்கி நிற்கும் அநுபவத்தை அடைய வேண்டியதாகவும், எண்ணின எண்ணங்களுடைய போக்குகள் மறுபடியும் அப்படியே எண்ண வைக்கிற விதத்தில் வேர் கொண்டு ஆஸ்பதமாகப் பற்றிக் கொண்டிருப்பதாகவும் ‘அந்தஃகரணம்’ என்பதன் ரூபமாக அந்த மற்றொரு சரீரம் இருந்துகொண்டிருக்கும். தற்கொலையால் ஸ்தூல சரீரத்தைப் போக்கிக்கொண்ட பிற்பாடும் அந்த சரீரத்தோடு சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.

நாமாக ஸூயிஸைட் பண்ணிப் போக்கிக் கொள்ளாமல் தானாக உயிர் போனால், ஜீவனின் ஸூக்ஷ்ம சரீரம் நரகம் அல்லது ஸ்வர்க்கத்தில் கர்மபலனை ஓரளவுக்கு அநுபவித்துவிட்டு, பாக்கியை அநுபவிக்க பூலோகத்திலேயே ‘எண்பத்துநாலுலக்ஷம் யோனி பேதம்’ என்னும் உயிரினங்களில் எதுவோ ஒன்றாகப் பிறக்கிறது. ஸூயிஸைட் பண்ணிக்கொண்டவனின் ஆவியோ நரகத்திலுள்ளதை விடக் கஷ்டமான அவஸ்தைகளை ஆத்மஹத்திப் பாபத்துக்காக இந்த லோகத்திலேயே அலையாய் அலைந்து அநுபவிக்கவேண்டும். நரகம் அல்லது ஸ்வர்க்கம், அப்புறம் மறுபடி பூமி என்பதற்கு முந்தி, ‘பேயாய் அலைவது’ என்றே சொல்கிறோமே, அப்படி ஒரே தவிப்புடன் அலையவேண்டும். அந்த ரூபத்தில் பசி தாஹம் முதலானவற்றைப் பூர்த்தி பண்ணிக்கொள்ளமுடியாமல் எவராவது ஒருத்தருடைய உடம்பைப் பிடித்து ஆட்டிவைத்துக்கொண்டு, இந்தப் பாபத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். வேப்பிலையால் வீறுவீறு என்று அடிவாங்கவேண்டும். இதோடு நிற்காது. மறுபடி ஜன்மா வரும். எந்தத் தப்பு வெளிவந்துவிடுமோ என்று பயந்து தற்கொலை செய்துகொண்டானோ, அல்லது எந்தத் தோல்வியைத் தாங்கமுடியாமல் சுட்டுக்கொண்டானோ, அல்லது எந்த வ்யாதிக் கஷ்டம் தாங்காமல் விஷத்தைச் சாப்பிட்டானோ அந்தத் தப்பு மாதிரியே ஒன்று அடுத்த ஜன்மாவில் அம்பலமாகி மானம் போகத்தான் போகும்; அல்லது அதே போன்ற தோல்வி அப்போது ஏற்படத்தான் செய்யும்., அதே மாதிரி வ்யாதி உபாதைப்படத்தான் செய்யும். அதனால் தற்கொலை மூலம் எதிலிருந்து ஒருத்தன் தப்புவதற்கு நினைக்கிறானோ அதனிடமிருந்து தப்புவதென்பது இல்லவே இல்லை. இதோடுகூடக் குட்டி போட்டுக் கொண்டு தர்கொலைக்குத் தண்டனையாக ஆவி ரூபத்தில் அநேக அவஸ்தைகள்!

இதனாலெல்லாந்தான் ஆத்மஹத்தி பெரிய பாபமென்று தர்ம சாஸ்த்ரங்கள் முடிவு செய்திருக்கின்றன. இக்காலச் சட்டப்படியும்கூட அது குற்றம் என்று வைத்திருக்கிறார்கள்.

படவேண்டிய கஷ்டங்களோடுகூட வேப்பிலை அடியும் வாங்குவதுதான் மிச்சம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is யுத்தம் தீர ஆசையை அழிக்க
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பிறவித் தண்டனை
Next