பிறவித் தண்டனை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)
ஒரு விதத்தில் பார்த்தால், இயற்கை மரணத்துக்கு அப்புறம் புனர்ஜன்மா ஏற்பட்டு மறு உடம்பு வருவதுங்கூட அடிவாங்குவதற்குத்தான். ஸாத்விக தண்டனை அதிகமாகிவிட்ட இக்காலச் சட்டமுறை அமலுக்கு வருவதற்கு முன்பெல்லாம் குற்றவாளிகளுக்கு இத்தனை கசையடி என்று தண்டனை விதிப்பார்க்ள. கட்டிவைத்து அடிப்பார்கள். பெரிய குற்றங்களுக்குத் தரும் அத்தனை கசையடியையும் குற்றவாளியால் ஒரே ஸமயத்திலே தாங்கிக்கொள்ளமுடியாது. நடுவிலே மூர்ச்சை போட்டுவிடும். அல்லது உயிரே போய்விடும். ‘இப்படி ஆவதற்கு விடக்கூடாது. ஒவ்வொரு கசையடியையும் அவன் அநுபவித்துக் கஷ்டப்படவேண்டும். அப்போதுதான் தண்டனை பெற்றதாகும்’ என்ற அபிப்ராயம் அப்போது நியாய பரிபாலனமாக நினைக்கப்பட்டது. அதனால் என்ன பண்ணுவார்களென்றால், பக்கத்தில் ஒரு வைத்யரை வைத்துக்கொண்டே அடிக்க ஆரம்பிப்பார்கள். அவர் குற்றவாளியை அவ்வப்போது பரீக்ஷித்துக் கொண்டேயிருப்பார். ஏதோ ஒரு கட்டத்தில் அதற்குமேல் ஸ்மரணையோடு வலியை அநுபவிக்க முடியாதென்றோ, ப்ராணன் போய்விடுமென்றோ அவருக்குத் தெரிந்தால், உடனே ‘இதோடு இன்றைக்குப் போதும். நாளைக்கு, அப்புறமும் மீந்தால் அதன்பின் வரும் நாட்களில், பாக்கி அடிகொடுக்கலாம்’ என்று சொல்வார். அப்படியே நிறுத்திவிடுவார்கள். அப்புறம் குற்றவாளிக்கு ஆஹாரம் போடுவார்கள். நல்ல ஆஹாரமாகவேபோடுவார்கள். அப்போதுதானே அடிவாங்க சக்தி இருக்கும்? அப்புறம் நன்றாகத் தூங்கவும் பண்ணுவார்கள். இந்த உபசாரமெல்லாம் மறுபடி தண்டனை தருவதற்காகவேதான்! மறுநாள் மறுபடி ‘பூசை’ ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த மாதிரிதான் நாம் பண்ணின பாபங்களை அநுபவிக்க உடம்பைக் கொடுத்து, கஷ்டங்கள் என்கிற கசையடிகளை பகவான் கொடுக்கிறார். இந்த உடம்பு அதற்கு மேலே தாங்காது என்று அவர் நினைக்கிற கட்டத்தில் சாவை அனுப்பிவைக்கிறார். அப்போதைக்குத் தூங்கப் பண்ணிவிடுகிறார். கொஞ்ச நாழி அவரிடம் லயிப்பு! அப்புறம் அதே உயிரைப் பிறப்பிக்கிறார். குழந்தையாகப் பிறந்து பால்யதசை முடிக்கிறவரை அதற்குக் கஷ்டம் அதிகம் தெரிவதில்லை. வ்யாதி வக்கை அதைப்பிடுங்கி எடுத்தாலும், அப்பா அம்மா அடித்தாலும் அப்போதைக்கு ஏதோ ‘வ்ராச்சு’ ‘வ்ராச்சு’ என்று கத்தித் தீர்க்கிறதே தவிர, துக்கச் சுமை என்று ஒன்றைத் தோளிலே போட்டுக் கொண்டு நீடித்துத் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதில்லை.
வயஸு வந்தபின் நாம் படுகிற கஷ்டத்தில் கால்வாசிதான் நாம் நடைமுறையில் ப்ரத்யக்ஷமாக அநுபவிப்பதாக இருக்கும், பாக்கி முக்கால்வாசி அந்தக் கஷ்டத்தையே பற்றி நினைத்து நாம் தோளில் தோய்த்துப் போட்டுக் கொள்வதுதான். துக்கம் கால்வாசி என்றால் துக்கம் கொண்டாடுவது முக்கால்வாசி! ஏற்பட்டுவிட்ட துக்கத்தை நினைத்துப் பார்ப்பது, இது போதாதென்று இதிலிருந்து இன்னும் என்னனென்ன உண்டாகுமோ என்று இனிமேல் ஏற்படக்கூடிய துக்கங்களைக் கல்பித்துக் கொண்டேயிருப்பது ஆகியவற்றின் பாரம் நமக்கு ஜாஸ்தி. குழந்தைக்கு இந்த மனச்சுமை இல்லை. எதையும் ஆழப் போட்டுக்கொண்டு நாம் உழப்பிக்கொள்கிறமாதிரி இல்லாமல் அது க்ஷணத்தில் மறந்துவிட்டு லேசாகிவிடும். நம்மாதிரி அதற்கு வாழ்க்கை ப்ரச்னைகளும் இல்லை. பொதுவாகக் குழந்தை ப்ரயாமானது விளையாட்டு, சீராட்டல் என்று ஸந்தோஷமாகவே போகிறது. குற்றவாளிக்கு ஆஹாரம் போட்டுப் போஷிப்புப்பண்ணி, மறுபடி தண்டனை வாங்குவதற்குத் திராணி உண்டாக்கிய மாதிரி நமக்கு பால்யத்தை வைத்திருக்கிறார் பகவான். அப்புறம் மறுபடி கஷ்டக் கசையடி ஆரம்பித்து விடுகிறது.