வேப்பம்பழத் தித்திப்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

யாராயிருந்தாலும் ஒரே கெட்டதாகப் பண்ணாமல் எங்கேயோ கொஞ்சம் நல்லதும் பண்ணுவதால் நடுநடுவிலே கொஞ்சம் கொஞ்சம் இன்பமானது நடக்கிறது. இந்த ஸந்தோஷம் கசையடிக்கு ஆயின்ட்மென்ட் போடுகிறது. எங்கேயாவது யாருக்காவது புண்யசாலிகளுக்குக் கசையடியில்லாமல் சந்தனப்பூச்சாகவே நடக்கிறது. அது ரொம்பவும் அபூர்வம். நூற்றுக்குத் தொண்ணூறு நாம் பாபம் செய்தவர்களேயானதால் ஸந்தோஷம் ஒரு மடங்கு என்றால் கஷ்டம் பத்து மடங்கு என்றே வருகிறது. ரொம்ப உசந்தாலும் வாழ்க்கையில் நாம் அநுபிக்கிற ஆனந்தம் வேப்பம்பழத்தித்திப்புத்தான். வேப்பங்காயைவிட வேப்பம்பழத்துக்குத் தித்திப்பு உண்டு என்பது வாஸ்தவந்தான். ஆனால் அது மாம்பழத்தின் தித்திப்பாக முடியுமா? ரொம்பக் கசப்பிலேயே கொஞ்சம் தித்திப்புமாக, அநேக கஷ்டங்களுக்கு மத்தியிலே அல்ப ஆனந்தம் நமக்குக் கிடைக்கிறது. இவ்வளவுக்குத்தான் நமக்குத் தகுதி. அல்லது இப்போதே நம் தகுதியை மீறி பகவான் கொஞ்சம் தயை தாக்ஷிண்யம் காட்டுவதால்தான் இவ்வளவு கஷ்டத்தோடாவது நிற்கிறது என்று சொல்லலாம்.

ஆசைதான் இதற்கெல்லாம் காரணம் என்றால், அந்த ஆசை உடம்பை அழிப்பதாலும் போகாது என்றால் என்னதான் பண்ணுவது? எப்படித்தான் தப்பித்துக் கொள்வது?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பிறவித் தண்டனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  விடாமுயற்சி வேண்டும்
Next