விடாமுயற்சி வேண்டும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆசை அடங்கமாட்டேனென்றாலும் திரும்பத் திரும்ப அடக்கப் பார்த்துக் கொண்டேதானிருக்கவேண்டும். வைராக்யம் என்பதான ஆசையின்மையை, பற்றின்மையை ஸம்பாதித்துக்கொள்ள விடாமுயற்சி பண்ணிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஏனென்றால் ஆசை என்ற இந்த ஒரே ஒரு சத்ருவை எப்படியோ ஒரு தினுஸில் எப்பாடுபட்டாவது நாம் ஒழித்துக் கட்டிவிட்டால் போதும் – அப்புறம் நாம் ராஜாதான். ராஜா என்றால் இந்த உலகத்து ராஜா இல்லை. அவனுக்கு உள்ள ஆசையும் தொல்லையும் நமக்கு வேண்டவே வேண்டாம். நான் சொல்வது ஆசை, தொல்லைகிட்டேயே வராத சாச்வத சாந்தத்தை உடைய ராஜா.

பல நூறாயிரம் கெட்ட வ்ருத்திகளை ஒவ்வொன்றாய் அடக்கப் பார்த்து ப்ரயோஜனமில்லை. அது முடியாத காரியம். ஆகையால் அவை கிளைகள் என்றால் அவற்றுக்கு வேறாக உள்ள ஆசை என்ற ஒன்றை வெட்டிவிட்டால் போதும். ஆனால் வெளியே நீண்டிருக்கும் கிளையை வெட்டுவதைவிட உள்ளே புதைந்துள்ள வேரைத் தோண்டி அழிப்பது ரொம்பவும் கஷ்டம் தான். இருந்தாலும் இதை செய்யாவிட்டால் வெட்டிய கிளைகள் மறுபடிமறுபடி முளைத்துக்கொண்டு தானிருக்கு மென்பதால் எப்படியாவது இதை ஸாதிக்கத்தான் வேண்டும்.

கறையான புற்று வைக்கிறது. அதை உடைக்கிறோம். அடுத்த வாரம் பார்த்தால் அது மறுபடி முளைத்திருக்கிறது. மறுபடி தட்டிவிடுகிறோம். அதற்கப்புறம் சில நாள் போனால் புற்று மறுபடியும் கிளம்பிதானிருக்கிறது. இதற்கு முடிவு எப்படி? தாய்ப்பூச்சி இருக்கிறவரைக்கும் அது கொஞ்சங்கூட அலுக்காமல் சலிக்காமல் இப்படிப்புற்று வைத்துக்கொண்டேதான் இருக்கும். அது எங்கே எந்த சந்துபொந்தில் மூங்கிலுக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறதோ அங்கே தேடித் தோண்டி அதை எடுத்து ‘ஸம்ஹாரம் பண்ணினால்தான் அப்புறம் புற்று புறப்படாமலிருக்கும். இப்படியே ஸகல கஷ்டத்துக்கும், ஸகல துர்வ்ருத்திகளுக்கும் தாய்ப்பூச்சியாயுள்ள ஆசையை அழிக்காமல், அந்தக் கஷ்டம் ஒவ்வொன்றையும் நிவ்ருத்தி செய்துகொள்ளவும், ஒவ்வொரு துர்வ்ருத்தியாகப் போக்கிக் கொள்ளவும் பாடுபட்டால் அவ்வளவும் நிஷ்பலனாகத்தான் ஆகும். Cause -ஐ (காரணத்தை) அழிக்காமல் விடும்வரை effects-ஐ (விளைவுகளை) நிரந்தரமாக அழிப்பது என்பது நடக்காத காரியம்.

பகவான் காம – க்ரோதம் என்று சொல்லி, க்ரோதத்தையும் காமத்திலேயே அடக்கி ஒருமையாகப் பேசும்போது இப்படித்தான் உபதேசம் செய்திருக்கிறார்.

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண – ஸமுத்பவ: |

இதற்கு அர்த்தம் சொல்லிவிட்டேன். தொடர்ந்து,
மஹாசநோ மஹாபாப்மா வித்த்யேநம் இஹ வைரிணம் |

என்று சொன்னதற்கும் கொஞ்சம் அர்த்தம் சொன்னேன்.

இந்தக் காமமானது பெருந்தீனி கேட்பது: “மஹாசந:”, ஒரு தரம் தினி போட்டுவிட்டால், அதாவது ஒரு ஆசையை ஒரு தரம் பூர்த்தி பண்ணிக்கொண்டுவிட்டால், அதோடு அதன் பசி தீர்ந்து விடுவதில்லை. சாப்பாட்டு விஷயத்தில் எப்படி ஒரு வேளை போஜனம் செய்தால் சாச்வதமாய் நம் வயிறு நிரம்புவதென்றில்லாமல் தினந்தினம் மூன்றுவேளை நாலு வேளை சாப்பிடவேண்டியிருக்கிறதோ, அப்படியேதான் ஆசைப் பசியும் எத்தனை தடவை தீர்த்துக் கொண்டாலும் தீராமல் மறுபடி எழும்புகிறது. அப்புறம் “மஹாபாப்மா” – மஹாபாவி என்று ஆசையை (பகவான்) திட்டுகிறார். நம்முடைய அத்தனை பாப பட்டாளத்துக்கும், அதாவது கெட்ட வ்ருத்திகளான அஸுரப் படைக்கும் இதுதானே உற்பத்தி ஸ்தானம்? ஆதனால் “மஹாபாப்மா”- வித்த்யேநம் இஹ வைரிணம் – வித்தி ஏநம் இஹ வைரிணம். பொழிப்புரையாய் சொன்னால், ‘இஹ ஏநம் வைரிணம் வித்தி.’ ‘இஹ’ – இந்த உலகத்திலே, ஸம்ஸாரத்திலே, ‘ஏநம்’ – இதை, இந்தக் காமத்தை, ‘வைரிணம்’ – விரோதியாக, ‘வித்தி’ – அறிந்து கொள். ‘இந்த லோக வாழ்க்கையில் காமம்தான் பெரிய சத்ரு என்று தெரிந்து கொள்ளடா அப்பா!’ என்கிறார்!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வேப்பம்பழத் தித்திப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆசையின் செயலும் 'அதிஷ்டான'மும்
Next