ஆசையின் செயலும் ‘அதிஷ்டான’மும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அப்புறம் சொல்லிக்கொண்டு போகிறார், அதன் க்ரூர ரூபம், கார்யம் முதலானதுகளை, அக்னியை எப்படிப் புகை மறைக்கிறதோ, கண்ணாடியை எப்படி தூசி மறைக்கிறதோ, வயிற்றில் உள்ள சிசுவை எப்படி கர்ப்பப்பை மறைக்கிறதோ, ‘அப்படி காமம் ஞானத்தைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு மறைக்கிறது,’ என்று சொல்லிவிட்டு மறுபடி, ‘ஆமாண்டா அர்ஜுனா! ஞானிக்குப் பரம சத்ரு இதுதான். பூர்த்தியே பண்ணமுடியாமல் கொழுந்தவிட்டுக்கொண்டிருக்கும் ஆசைத் தீதான் மநுஷ்யனின் அறிவை அப்படியே சூழ்ந்து கொண்டிருக்கிறது’ என்கிறார்.

முதலில் அறிவுத் தீயை மறைக்கும் புகையாய் ஆசை இருக்கிறது என்றார். அப்புறம், இதுவே அக்னிபோல ஒருத்தனைத் தபிக்கச் செய்வதை நினைத்து, ‘அறிவை எரிக்கிற நெருப்புப்போல ஆசை பிடித்துக்கொண்டிருக்கிறது’ என்கிறார்.

இன்னமும் சொல்கிறார்:

எந்த வஸ்துவானாலும் அது தொழில் பண்ணவேண்டுமானால் ஏதோ ஒரு இடத்தில் ஊன்றி நிலைப்பட்டு நின்று அங்கேயிருந்துதான் கைவரிசையைக் காட்டவேண்டும். இப்படி நிற்கும் ஸ்தானத்துக்கு “அதிஷ்டானம்” என்று பெயர்.

‘அதிஷ்டானம்’ என்றவுடன் ஸ்ந்நியாஸிகளின் ஸமாதிகளுக்கு அப்படிப் பேர் சொல்வது நினைவு வரலாம். எதனால் இந்தப் பேர் என்றே கேள்வி எழலாம்.

சரீரத்தைவிட்டு ஸித்தியான பெரியவர்களுடைய அநுக்ரஹ சக்தியில் ஒரு கலை ப்ராணவியோகமான பிறகும் அவர்களுடைய சரீரத்திலே இருந்து கொண்டிருக்கும். அந்தப் பெரியவருடைய தேஹத்தைப் புதைத்து வைக்கிற இடத்தில் இந்த அநுக்ரஹ கலையானது ஊன்றி நின்று பக்தர்களுக்குப் பாயும்படியாக ஸ்தானம் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதனால்தான் ஸமாதியை ‘அதிஷ்டானம்’ என்பது.

வழக்கத்தில் எப்படியிருக்கிறதென்றால், சில இடங்களில் ஸமாதியின் மேலே துளஸி வைக்கிறார்கள், சில இடங்களில் ஸமாதிக்கு மேல் சிவலிங்கம் ப்ரதிஷ்டை செய்கிறார்கள். துளஸி வைக்கப்பட்ட ஸமாதியை ப்ருந்தாவனம் என்றும் லிங்கம் வைக்ககப்பட்ட ஸமாதியை அதிஷ்டானம் என்றும் சொல்வதாக வழக்கு ஏற்பட்டிருக்கிறது. நம் மடத்து ஆசார்யர்களிலேயே கலவையில் ஸித்தியான இரண்டு பெரியவர்களுக்கு அங்கே துளஸி வைத்த ப்ருந்தாவனம் அமைந்திருக்கிறது, இளையாற்றங்குடியில் ஸித்தியானவருக்கு அங்கே சிவலிங்க ப்ரதிஷ்டையோடு அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.

ஆசை தன்னை ஊன்ற வைத்துக்கொண்டிருக்கிற அதிஷ்டானம் என்ன என்று பகவான் சொல்கிறார். ஒன்றில்லை, மூன்று அதிஷ்டானங்கள். ஜீவனை ‘உண்டு – இல்லை’ என்று வதைப்பதற்காக அவனுடைய இந்திரியம், மனஸ், புத்தி மூன்றையுமே ஆசை ஆக்ரமித்துக்கொண்டு தனக்கு அதிஷ்டானமாக்கிக் கொண்டிருக்கிறது; அவனை மோஹத்திலே தள்ளி ஞானத்தை மறைக்கிறது என்கிறார்.

‘அர்ஜுனா! உன்னை நன்றாக அடக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டு இந்த ஆசைப் பாவியை (“பாப்மா” என்றே மறுபடி சொல்கிறார்) வெல்லு, கொல்லு’ என்கிறார்.

நன்றாக வர்ணித்துச் சொல்லிவிட்டால் போதுமா? கொல்ல முடியவில்லையே எதைப் பண்ணவே படாது என்று நினைத்து அதில் ஆசையை அடக்குகிறோமோ அதுவேதான் திமிறிக்கொண்டு கிளம்புகிறது?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is விடாமுயற்சி வேண்டும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அர்ஜுனனின் குறை
Next