அர்ஜுனனின் குறை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆசையை அடக்குவது என்பதும் மனஸை அடக்குவது என்பதும் ஒன்றுதான். ஏனென்றால் ஆசைகள் முளைக்கிற ஆதார ஸ்தானம் மனஸ்தான். அதை அடக்கவே முடியாமல் அது பலவந்தமாய் ஜீவனை இழுத்துக்கொண்டு போகிறதே என்று அர்ஜுனன் அழுகிறான்.*

சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் |
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் ||

‘க்ருஷ்ணா! இந்த மனஸ் சஞ்சல மயமாயிருக்கிறதே; ஜீவனைப் போட்டுக் கலக்குகிறதே! (‘மாதி’ என்றால் கலக்குவது, கடைவது. ‘அம்ருத மதனம்’ என்பதில் வரும் ‘மத’ பாற்கடலைக் கடைந்ததைத்தானே குறிப்பிடுகிறது? ‘ப்ரமாதி’:ரொம்பவும் கலக்குவது. ஜீவனைப் போட்டுக் கடைந்து கலக்குகிறது மனஸின் எண்ணங்கள்.) இது ரொம்ப பலமாகவும் உறுதியாகவும் கலக்குகிறது. எப்படிக் காற்றைப் பிடித்து நிறுத்திவைக்க முடியாதோ, அப்படியேதான் இந்த மனஸையும் பிடித்து அடக்கி வைக்கமுடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறான் அர்ஜுனன்.

‘தஸ்ய’ – இந்த மனஸினுடைய; ‘நிக்ரஹம்’ – அடக்கல்; ‘வாயோரிவ’ – காற்றைப் போல, அதாவது காற்றை அடக்கிவைப்பது போல; ‘ஸுதுஷ்கரம்’ – ஸாதிக்க முடியாத கார்யம் என்று, ‘மந்யே’ நினைக்கிறேன்.


* இனிவரும் கீதைபகுதிகள் அதன் ஆறாம் அத்யாயத்தில் உள்ளவை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆசையின் செயலும் 'அதிஷ்டான'மும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கண்ணன் சொல்லும் உபாயம்
Next