அழுகிற அர்ஜுனனிடம், ‘நீ சொல்கிறாற்போல மனோ நிக்ரஹம் கஷ்டமானதுதான். ஆனாலும் இது ஸாதிக்கவே முடியாதது இல்லையப்பா’ என்று பகவான் உத்ஸாஹப்படுத்திச் சொல்கிறார். அவன் சொன்னதை ஒப்புக்கொள்கிறாற் போலவே ‘ஸிம்பதெடிக்’க்காக ஆரம்பித்து அப்புறம் அவன் முடியாதது என்று கைவிடப் பார்க்கிற ஸாதனையை முடியும்படிப் பண்ண வழி சொல்லித் தருகிறார், ‘ஹோப்’ கொடுத்துச் சொல்கிறார்.
அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் |
‘சலம்’ என்றால் சஞ்சலம்தான். சஞ்சலித்துக்கொண்டேயிருக்கும் மனஸை அடக்க முடியாதுதான். ‘துர் நிக்ரஹம்’ – நிக்ரஹம் செய்வதற்கு முடியாது. ‘அஸம்சயம்’ – இதிலே ஸந்தேஹமில்லை. ‘அர்ஜுனா (அர்ஜுனனை ‘மஹாபாஹு’ என்கிறார். மஹா வீரனாதலால் அவனுடைய தோள் வலியைக் குறிக்க ‘மஹாபாஹு’ என்று கூப்பிடுகிறார். வெளி யுத்தத்தில் போலவே உள் யுத்தத்திலும் அவன் மஹா வீரன் ஆகணும் என்று தார்பர்யம்.) ஸந்தேஹமில்லாமல் நீ சொன்னமாதிரிதான் மனஸ் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கிறது. அதை நிக்ரஹம் பண்ணுவது லேசில்லைதான்’ என்று, அவன் சொன்னதற்கு ஆமாம் போட்டுவிட்டு, அதற்குப் பரிஹாரமும் சொல்கிறார்.
ரொம்பவும் முக்யமான விஷயத்தைச் சொல்கிறார்: “அப்யாஸம், வைராக்யம் என்ற இரண்டில் தீவிரமாயிருந்தாயானால் மனோ நிக்ரஹம் பண்ணி விடலாம்” என்கிறார்.
‘எத்தனை திமிறினாலும், உன்னை திசை தப்பி எத்தனை தரம் இழுத்துக்கொண்டு போனாலும் ஸரி, அதற்காக மனஸைக் கட்டுப்படுத்த ப்ரயாஸை எடுக்காமல் விட்டு விடாதே. வெளியிலே ஓடுகிற அதை ஒவ்வொரு தரமும் மறுபடி உன் வழிக்கு இழுத்துக்கொண்டு வரப் பார். இப்படி விடா முயற்சியுடன் எதிரத்துப் போராடிக்கொண்டேயிருந்தால், அது ஒருநாள் அடங்கிப் பணிந்துபோக ஆரம்பித்துவிடும். எதிடமும் ஆசைவைக்கப்படாது என்ற வைராக்ய சிந்தை, எத்தனை வழுக்கிவிட்டாலும் ஊன்றி நிற்கஅப்யாஸம் செய்து கொண்டே இருப்பது – ஆகிய இந்த இரண்டால் முடிவிலே ஒரு நாள் ஜயித்துவிடலாம்’ – இப்படி பகவான் ஆறுதலாக பதில் சொல்கிறார்.
யதோ யதோ நிச்சரதி மநச் சஞ்சலம் அஸ்திரம்|
ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்||
‘யதோ யதோ’ – எது எதை, அதாவது எந்தெந்த ஆசையை, முன்னிட்டு; ‘சஞ்சலம்’ – சஞ்சலித்துக்கொண்டேயிருப்பதும்; ‘அஸ்திரம்’ – எதிலும் நிலைப்பட்டு நிற்காததுமான; ‘மந:’ – மனஸானது, ‘நிச்சரதி’ – வெளியில் ஓடிக்கொண்டேயிருக்கிறதோ, ‘ததஸ்தத:’ – அந்த ஒவ்வொரு ஆசையிலிருந்தும், ‘ஏதத்’ – இந்த மனஸை, ‘நியம்ய’ – இழுத்து அடக்கி; ‘ஆத்மநி ஏவ’ (‘அத்மந்யேவ’) – ஆத்மாவிலேயே; ‘வசம் நயேத்’ – வசப்படுத்தி வைக்கவேண்டும். எத்தனை தரம் என்னென்ன ஆசைகளை முன்னிட்டு மனஸ் வெளியில் திரும்பத் திரும்ப ஓடினாலும் ஸரி, ஒவ்வொரு தரமும் அந்த ஆசை ஒவ்வொன்றிலிருந்தும் மனஸைத் திருப்பிக் கட்டுப்படுத்தி ஆத்மாவிலேயே அடங்கியிருக்கச் செய்யவேண்டும்.