ஆத்மா: மாறுபாடு அற்றது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆத்மா என்கிற ஜீவனுடைய நிஜ ஸ்வரூபத்தில் விஷயத்தைக் கொண்டு வந்துவிட்டார்!

தனி ஜீவன் என்று குறுகி நிற்கிறபோது மனஸ்தான் ஜீவன் என்று தோன்றுகிறது. தனக்கென்று தனித்தனியாக இன்னின்ன லக்ஷணம் இருக்கிறது, அதாவது தான் சிவப்பு, தனக்கு இன்ன பெயர், இன்ன ஊர், இன்னார் அப்பா – அம்மா, இன்ன படிப்பு, இன்ன வேலை, இன்னின்ன குணம் (ஒருத்தன் முன்கோபியாயிருக்கிறான்; இன்னொருத்தன் சாந்த ஸ்வபாவியாயிருக்கிறான்; ஒருத்தன் குஷியாயிருக்கிறான்; இன்னொருத்தன் அழுமூஞ்சியாயிருக்கிறான். ஒருத்தன் கெட்டிக்காரனாயிருக்கிறான், இன்னொருத்தன் அசடாக இருக்கிறான். இப்படித் தனி ஆள் என்ற நிலையில் ஒவ்வொருவனுக்கும் குறிப்பிட்ட குணங்கள் இருக்கின்றனவே, அதிலே தனக்கு இன்னின்ன குணம்) என்பதாகக் கட்டுப்படுத்திக் காட்டும் லக்ஷணங்கள் எல்லாம் ஜீவனானவன் தன்னை மனஸோடு identify பண்ணிக்கொள்வதனால் ஏற்பட்டவைதான். அதாவது, ஜீவன் தன்னுடைய மனஸின் எண்ணங்களால் தன்னை எப்படித் தெரிந்து கொள்கிறானோ அதுவே தன்னுடைய நிஜ ஸ்வரூபம் என்று நினைக்கிறான்.

அவனே தூங்குகிறான், அல்லது க்ளோரோஃபார்ம் கொடுத்த மயக்கத்திலிருக்கிறான், அல்லது யோக நிஷ்டையில் அப்படியே ஸமாதியில் ஆழ்ந்து கிடக்கிறானென்றால் அப்போதெல்லாம் மனஸ் வேலை செய்யவில்லை. அவனுக்கு எந்தவிதமான எண்ணமும் இல்லை. தன்னைக் குறித்து தனித்ததாக எந்த லக்ஷணமும் இருப்பதாக அவனுக்கு அப்போது தெரிவதேயில்லை. இந்த நிலைகளில் ஸகல ஜீவன்களும் ஸமம்தான் – அரசன் ஆண்டி இரண்டு பேரும் ஒன்றுதான். தூங்குகிற அல்லது மூர்ச்சித்திருக்கிற அல்லது ஸமாதி நிலையிலுள்ள ராஜாவுக்குத் தன் ராஜரீக மஹிமை எதுவும் தெரியாது. அப்போது ஆண்டிக்கும் தன் தரித்ரத் திண்டாட்டம் தெரிவதில்லை. பலிஷ்டனான ஒரு வஸ்தாத், ரொம்பவும் துர்பலனான ஒரு நோஞ்சான், A -யிலிருந்து Z -வரை டிகிரிகள் போட்டுக்கொள்ளும் மஹாமேதாவி, சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறாத நிரக்ஷரகுக்ஷி- இப்படி எவரானாலும் தங்கள் தனி குணம், லக்ஷணம் எதுவும் இல்லாமல், அனைவரும் ஒரே ஸ்திதியில் இருப்பதாக இந்த மனஸற்ற நிலை இருக்கிறது. மனஸின் வேலையில்லாமல் தூங்குகிறவனுக்குத் தன் பேர், ஊர், தனக்கு ப்ரியமானவர்கள், விரோதமானவர்கள் ஏதாவது தெரியுமா? தான் ஆணா பெண்ணா, கிழமா குழந்தையா என்பதெல்லாம் கூடத் தெரிவதில்லை. மனஸ் வேலை செய்யும்போது தனித்தனி லக்ஷணங்களோடு ஒருத்தருக்கொருத்தர் நூறாயிரம் வித்யாஸத்தோடு இருக்கிற அத்தனை கோடானு கோடிப் பேர்களும் அது வேலை செய்யாத ஸமயத்தில் ஒரு வித்யாஸம்கூட இல்லாமல் ஒன்றாகவே இருக்கிறார்கள் -ஆனாலும் இருக்கிறார்கள்; லக்ஷணங்கள் என்ற கட்டுப்பாடுகள் இல்லாத நிஜமான “நானாக” இருக்கிறார்கள்.

இதுதான் முக்யமான விஷயம். தூக்கம், மூர்ச்சை, ஸமாதி ஆகிய நிலைகளில் ஒருத்தன் செத்துப் போய்விடவில்லை. உயிரோடுதான் இருக்கிறான். அப்போதும் இவனுக்குள்ளே ஒன்று இருந்து கொண்டிருக்கிறதே, அதுதான் ஆத்மா.

அதற்கு சாவே கிடையாது. அதற்கு மாறுதலும் கிடையாது. மாறுதல் என்பதும் ஒரு தினுஸில் சாவுதான் – யோசித்துப்பார்த்தால் புரியும். “சாவு” என்பது “இல்லாமல் போவதுதானே?” “பொய்யாய்ப் போவது” தானே? பூ காயாய் மாறுகிறது, காய் பழமாய் மாறுகிறது, புழு குளவியாய் மாறுகிறது என்றெல்லாம் சொல்லும்போது அந்தப் பூ, காய், புழு எல்லாம் இல்லாமல் போய்தான் அவற்றின் இடத்தில் காயும், பழமும், குளவியும் வந்திருக்கின்றன. அதாவது, வளர்ச்சி என்று சொல்கிற மாறுதலுக்குள்ளே ஒரு அழிவு அல்லது சாவு இருக்கிறது; ஒரு ரூபம் அழிந்துதான் இன்னொன்றாக வளர்ந்து உருவாகிறது.

நம் உடம்பு மாறுகிறது. குழந்தையாயிருந்த உடம்பு வேறே; நடுத்தர வயஸுக்காரனின் உடம்பு வேறே. எத்தனையோ விதத்தில் மாறி, வளர்ந்து குழந்தையின் உடம்பு மத்யம பிராயத்தினனின் உடம்பாகிறது. அதற்கப்புறம் ஜரை (மூப்பு) வருகிறது. இதுவரை வளர்ச்சியால் மாறிய உடம்பு இனிமேல் தேய்வினால் மாற ஆரம்பிக்கிறது. தோல் மாறிச் சுருங்குகிறது. தலைமயிர் மாறி நரைக்கிறது. நமக்கு அப்படித் தெரியாவிட்டாலும், ப்ரதிக்ஷணமும் உடம்பு மாறிக்கொண்டேதானிருக்கிறது என்று டாக்டர்களும், ஃபிஸியாலஜிக்காரர்களும் சொல்கிறார்கள். அதாவது- உடம்பை “நான்” என்று நினைக்கிறோமாயினும் அது க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக்கொண்டு, அதாவது செத்துப் போய்க் கொண்டிருக்கிறது! அப்படியானால் போன க்ஷணம் செத்துப்போய்விட்ட உடம்பை இந்த க்ஷணமும் “நான்” என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, இது எப்படி? போன க்ஷணம் என்ன? நாற்பது, ஐம்பது வருஷம் முந்தி நடக்கக்கூடத் தெரியாமல் இருந்த குழந்தையுடம்பிலிருந்து இன்றைக்கு இருக்கிற உடம்புவரை மாறிமாறி – அதாவது செத்துச் செத்து – உண்டான அத்தனை உடம்புகளையும் ஒரே “நானு”டையதாக நினைக்கிறோமே இது எப்படி?

இப்படியேதான் மனஸை எடுத்துக்கொண்டாலும், அது ஓயாமல் சஞ்சரித்துக் கொண்டேயிருப்பதைத்தான் இத்தனை நாழி சொன்னேன். அதாவது ஓயாமல் மாறிக்கொண்டு, செத்துக்கொண்டு இருக்கிறது. போன ஸெகன்ட் அதற்குத் துக்கம்; இந்த ஸெகன்ட் ஸந்தோஷம்; அடுத்த ஸெகன்ட் கோபம். மனஸின் வளர்ச்சியும் அறிவின் வளர்ச்சியும் குழந்தைப் பிரயாத்திலிருந்து எத்தனை வித்யாஸமாக மாறி இருக்கிறது? அப்புறம் ரொம்ப வ்ருத்தாப்யத்தில் இவையே தேய்ந்து ஓய்ந்தும் போய்விடுகின்றன. அதாவது மாறுதல் என்கிற அழிவின் ஓட்டம் நிற்பதே இல்லை. மாறுபாட்டை ‘விகாரம்’ என்பார்கள். விகாரம் என்றால் கோரம், குரூபம் என்று தமிழில் அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். காரணம், மாறுபடுகிறபோது அப்படி மாறுபாடு காண்கிற வஸ்துவின் ரூபம் நசித்துப் போவதுதான்! ஒரு வஸ்து நாசமாகிக் கிடந்தால் அது பார்ப்பதற்கு ரொம்பவும் விகாரம்தானே? ஆனாலும் இங்கே நான் சொன்ன எக்ஸாம்பிள்களிலெல்லாம் ஒரு வஸ்து நசிப்பதோடு முடியவில்லை; இன்னொன்றாக அது பரிணமிக்கவும் செய்கிறது. பூ நசித்ததோடு முடியாமல் காயாகிறது. காய் நசித்ததோடு முடியாமல் பழமாக ஆகிறது. புழு நசித்ததோடு முடியாமல் குளவியாகிறது. உயிர்தத்வம், உயிர்தத்வம் என்னும் எதுவோ ஒன்று பூக்கும் அடிப்படையிலிருந்து கொண்டு அந்த ரூபத்தை அழியப்பண்ணியே காயாக்கி, அந்தக் காய்க்கும் அடிப்படையாயிருந்து கொண்டு அதைப் பழமாக்குகிறது. உயிரோடு மரத்திலே அந்தப் பூ ஒரு அங்கமாய் ஒட்டிக்கொண்டிருப்பதால் இப்படி நடக்கிறது. அதுவே மரத்திலிருந்து ஒரு பூவை நாம் பறித்து விட்டால் அது வாடிச் செத்துப் போவதோடேயே முடிந்து போகிறது. அப்போது பூ காயாவதில்லை. புழுவின் ஆதாரமாக உள்ள உயிர்தத்வம் அந்தப புழு ரூபத்தைக் கொன்ற பின்னும் அதே உயிராதாரமாக அதனிடத்தில் புதிதாக உண்டாக்கிய குளவியிடம் இருக்கிறது. புழுவை நாம் நசுக்கிப்போட்டால், அல்லது ஒரு குருவி எடுத்துத் தின்றுவிட்டால் அது குளவியாகாமல் ஓரேயடியாய் அழிவடைகிறது.

இப்படியே நம் உடம்பும் மனஸும் அழிந்து அழிந்து புதுப்புது ரூபம் எடுத்துக்கொண்டேயிருக்கும்போது அத்தனைக்கும் அடிப்படையாக இருக்கிற உயிர்த் தத்வம்தான் ஆத்மா. உயிர்த் தத்வம் என்றால் மூச்சு இல்லை. மூச்சு போன பின்னும் ஆத்மா அழிவதில்லை. மூச்சைக்கொண்டு உடம்பு வாழும்படியாகச் செய்யும் உயிருக்குயிரான தத்வமே ஆத்மா. அதுதான் “நிஜ” நாம். போன நிமிஷம் இருந்து, இந்த நிமிஷம் இல்லாமலாகிவிட்ட உடம்போ, மனஸோ எப்படி நிஜ நாமாக இருக்கமுடியும்? அதுதான் க்ஷணத்துக் க்ஷணம் பொய்யாகி விடுகிறதே! இம்மாதிரி மாறுதல்கள் இல்லாமல், அதாவது நிர்விகாரமாக, எப்போதும் ஒரே போலவே இருந்துகொண்டிருக்கும் ஆத்மாதான் நிஜ “நான்.” உடம்பும் மனஸும் பல தினுஸாய் மாறினாலும், அத்தனை நிலைகளிலும் “நான்” என்று இருக்கிற பாவம் மட்டும் கொஞ்சங்கூட மாறாமலே தானே இருக்கிறது? அதனால் அந்த நிலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்த “நான்” என்ற அடிப்படையான ஆத்மாவை மட்டும் பிரித்துப் பார்த்தால் இதுதான் நமது நிஜ ஸ்வரூபம் என்று ஆகிவிடுகிறது.

உடம்பைப் பற்றிய ப்ரக்ஞை இல்லாமல், மனஸின் ஓட்டமும் இல்லாமல் ஆழ்ந்து தூங்கும்போது, மூர்ச்சை போட்டுக் கிடக்கும்போது, ஸமாதி நிஷ்டை கூடியிருக்கும் போது அப்படித்தான் ஆத்மா மாத்திரம் இருக்கிறது.

அது மாறுபடாத வஸ்து. குழந்தையாயிருந்தபோது இருந்த “நான்” என்ற நினைப்புக்கும் இப்போதுள்ள “நான்” என்ற நினைப்புக்கும் கொஞ்சமாவது வித்யாஸமிருக்கிறதா? இல்லையே! விஷயம் தெரியாதபோது, விஷயம் தெரிந்த பிற்பாடு, வியாதியுள்ளபோது, ஆரோக்யமாயிருக்கிற போது, தரித்ரப்பட்டபோது, பணம் வந்ததற்குப் பிற்பாடு – இப்படி சரீரம், மனஸ் இவை பலவிதங்களில் கஷ்ட ஸுகங்கள்படுகிறபோதும் அந்த இரண்டின் நிலைகள் பலதினுஸாக மாறிக்கொண்டே இருந்தாலும், அத்தனையிலும் “நான்” என்ற பாவம் மாத்திரம் முழுக்க ஒரே விதமாகத்தான் இருக்கிறது. மாறிவிட்டவற்றை, இனியும் மாறிக்கொண்டே இருக்கப் போகிறவற்றை “நான்” என்ற சொல்வதற்கில்லை. அத்தனை நிலைக்கும் ஆதாரமாயிருந்து கொண்டு, “ஸூத்ரே மணிகணா இவ” என்று பகவான் (கீதை. 7-7) சொன்னபடி, பல மணிகளையும் ஒரே ஜபமாலையாகக் கோத்துக் கொடுக்கிற சரடு மாதிரி, அத்தனை மாறுபட்ட நிலைகள் அததுவும் தனியே சிதறிப்போய் நசித்துவிடாமல், தொடர்புப்படுத்தி ஒரு வாழ்க்கையாகக் காட்டிக்கொடுக்கிற ஆத்மாதான் நிஜத்தில் நாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கண்ணன் சொல்லும் உபாயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'நிஜ' ஆத்மாவும் பொய் வேஷ மனஸும்
Next