‘நிஜம்’ என்பதை ‘உண்மையானது’ என்று நாம் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். ‘நிஜம்’ என்பதற்கு நிஜமான அர்த்தம், ‘தனக்கே உரிய ஸ்வபாவம்’, ‘தன் உண்மை இயல்பு’ என்பதாகும். இரண்டு அர்த்தத்திலும் ஆத்மாதான் நிஜ நாம். அதை அறியாத நாம் மனஸின் பொய் வேஷத்தில் நம் ஸ்வபாவத்தைத் தெரிந்து கொள்ளாமலிருப்பவர்கள்தான். மனஸை நாமாகவே நினைத்துவிடுகிற அளவுக்கு அது பெரியே வேஷம் போட்டு ஏமாற்றிவிடுகிறது.
ஒரு வேஷமில்லை, மாறிக்கொண்டே இருக்கிற பல வேஷங்கள்! பழநியில் (தண்டாயுதபாணிக்கு) கிடுகிடு வென்று ஒரு அபிஷேகத்துக்கு மேல் இன்னொரு அபிஷேகமாகப் பண்ணித் திரைபோட்டு அலங்காரம் பண்ணித் திறந்து காட்டுவார்கள். ஒரு அலங்காரத்திலே ஆண்டிப்பண்டாரமாக நிற்பார்; கொஞ்ச நேரத்தில் இன்னொரு அபிஷேக, அலங்காரமாகித் திரையை விலக்கும்போது பார்த்தால் ராஜாவாகக் காட்சி கொடுப்பார்; அதற்கப்புறம் இன்னொரு அலங்காரத்தில் வேடரூபத்தில் தர்சனம் தருவார். அதே மாதிரிதான் நம் வேஷமும் மாறிக்கொண்டே இருக்கிறது. பிறந்ததிலிருந்து (கருவாய் உருவனாதிலிருந்து, இன்னும் பின்னே போனால் எத்தனையோ ஜன்மத்துக்கு முன்னாலிருந்து) நம் உடம்பும் மனஸும் மாறிக்கொண்டே இருக்கிறதென்றால் ஒவ்வொரு மாற்றமும் ஒரு வேஷந்தானே? இருந்தாலும், ஒரு துணியும் போட்டுக்கொள்ளாமல், மல மூத்ரங்களை அடித்துக்கொண்டு, செருப்பு, துடைப்பக்கட்டை எதுவானாலும் ‘ஹாவு ஹாவு’ என்று கடித்துக்கொண்டு ‘ஹா, ஹூ’ என்று விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையதோன் இன்றைக்கு எத்தனையோ நாசூக்கு நாகரிகம் பார்க்கிற நாம் என்பதாக ஒரு “நான்-எண்ணம்” அன்றிலிருந்து இன்றுவரை அறாத, மாறாத தொடரிழையாக இருந்துகொண்டேயிருக்கிறது. இந்த எண்ணத்துக்கு அடியில் நமக்கு உயிராதாரமாக இருப்பதுதான் ஆத்மா. அன்றைக்குக் குழந்தை வேஷத்தில் இருந்தவனும் இன்றைக்கு இப்போது நாமுள்ள இந்த வேஷத்திலிருப்பவனும் ஒரே ஆஸாமி என்று நமக்குத் தெரிந்து, மற்றவர்களுக்கும் தெரிவது அத்தனை வேஷத்துக்கும் ஆதாரமாக மாறாமலுள்ள அந்த ஆத்மாவினால்தான்.
ஸினிமா, ட்ராமாவிலே பல வேஷங்களில் ஒரு நடிகன் வருகிறான். ஒன்றில் அவன் ராமனாக வரலாம். இன்னொன்றில் ராவணனாக வரலாம். ஒன்றில் பணக்காரனாகவும் இன்னொன்றில் தரித்ரனாகவும் வரலாம். இப்படி வேஷம் மாறுகிறதென்றாலும் வேஷம் போட்டுக் கொண்ட ஆஸாமி ஒருத்தன்தான். அப்படியே நம்முடைய வாழ்க்கை நாடகத்தில் நாம் போட்டுக்கொள்ளும் பல வேஷங்களில் ஒரு வேஷமாக இல்லாமல், இத்தனை வேஷமும் போட்டுக்கொள்கிற அந்த ஒரு நிஜ ஆஸாமியாக இருப்பது ஆத்மாதான். வேஷங்கள் பல இருக்கின்றன என்பதாலேயே, வேஷமாயில்லாத ஒரு நிஜ ஆஸாமியும் இருப்பதால்தான் இந்த வேஷங்கள் அவனுக்கு ஏற்பட முடிகிறது என்று ஆகிவிடுகிறது.
வேஷத்தைக் கலைத்துவிட்டு, அந்த ட்ரெஸ், மேக்கப் எல்லலாவற்றையும் எடுத்துவிட்டு ஆஸாமி தன் வீட்டில் இருக்கிறாற்போல், ஆத்மாவானது மனஸ், உடம்பு முதலிய உடுப்பும் ஹரிதாரமும் இல்லாமல் ஸுஷுப்தியிலும் (தூக்கத்திலும்) நிஷ்டையிலும் இருக்கிறது. அப்போது உடம்போடு, மனஸோடு பட்டுக்கொள்ளாமல், தனியாயிருப்பதானால் ஒரே சாந்தமாய் இருக்கிறது. ஒரு கார்யமும் எண்ணமுமில்லாமல், இவற்றால் ஏற்படும் இழுபறிப் போராட்டம், அதாவது தேவாஸுர யுத்தம் இல்லாமல் ஜீவன் இருப்பது அப்போதுதான். ஆசையும், அதனால் ஏற்படும் அவஸ்தையுமில்லாமல் ஜீவன் இருப்பது மனஸின் ஆட்டமில்லாமல் ஆத்மா மட்டும் இருந்து கொண்டிருக்கும் நிலையிலேதான். ப்ரசாந்த நிலை என்கிற உசந்த அமைதி நிலை அதுதான்.