ஆத்மாவினாலேயே மனத்தின் இயக்கம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆனால், விசித்ரம் என்னவென்றால், சாந்தமயமான இந்த ஆத்மா இல்லாமல், சாந்தியே தெரியாத மனஸுக்கு வேலை செய்கிற சக்தி இல்லை. மனஸின் வேலை என்பது என்ன? எதையாவது நினைப்பது, ஆசைப்படுவது. நினைப்பும் ஆசையும் இல்லாததாக ஆத்மா இருந்தாலும் அந்த உயிர்த் தத்வம் இல்லாமல் மனஸ் நினைக்க முடியாது. மனஸின் நினைப்புக்களை (குறிப்பாக ஆசைகளை) ஒட்டித்தான் சரீரம் வேலை செய்வது. உடம்பைப்பலவிதமாய் வேலை வாங்குவது மனஸ்தான். ஆனால் அந்த, மனஸும் வேலை செய்வது ஆத்மாவின் சக்தியால்தான். ஆனால், ஆத்மாவோ தனியாய் உள்ளபோது “சக்தி” என்பதற்கு இடமே கொடுக்காததாக, ஒரே சாந்த மயமாகத்தான் இருக்கிறது. “ஆத்மசக்தி” என்று தற்காலத்தில் பத்திரிகைகளிலும் ப்ரஸங்கங்களிலும் ரொம்ப அடிபடுகிற வார்த்தைகூட யோசித்துப் பார்த்தால் ஸரியானதில்லைதான். இன்னொன்றை (நல்லதாகவோ, கெட்டதாகவோ) பாதிப்பதாக ஒன்று உள்ளபோதுதான் அதன் “சக்தி” பற்றிய பிரஸ்தாவமே வரமுடியும். எதனோடும் ஸம்பந்தப்படாமல் தான் பாட்டுக்கு சாந்தமயமாய் இருக்கிற ஆத்மாவில் “சக்தி”க்கு இடமில்லை.

“ஸம்பந்தப்படவில்லை என்கிறீர்கள், நீங்கள்தானே கொஞ்சம் முன்னாடி மனஸ், உடம்பு எதுவானாலும் அவை வேலை செய்ய ஆத்மாதான் ஆதாரம் என்றீர்கள்?” என்று கேட்கலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'நிஜ' ஆத்மாவும் பொய் வேஷ மனஸும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  இருக்கும் நிலையும், செய்யும் நிலையும்
Next