இருக்கும் நிலையும், செய்யும் நிலையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மனஸானது நினைப்பு என்ற வேலையில்லாமலும், சரீரம் ஓடியாடிச் செய்யும் வேலையில்லாமலும் தூங்குகிறபோது அல்லது ஸமாதி நிலையிலிருக்கும்போது ஜீவன் அந்த ஆத்மாவாகவே இருக்கிறான் என்று சொன்னேன்.

அது இருக்கிற நிலை. மனஸும் உடம்பும் வந்தவிட்டதோ, உடனே அந்த ‘இருக்கிற’ நிலை போய், ‘செய்கிற’ நிலை வந்துவிடுகிறது. இவை இல்லாதபோது ஆத்மா ஏதாவது செய்ததா? இல்லை. எதுவுமே செய்யவில்லை. வெறுமனே இருந்துகொண்டு மட்டும் இருக்கிறது. இதைத்தான் ‘கேவல ஸ்திதி’ என்பது. “கேவலம்” என்றால் மட்டமானது என்று அர்த்தமில்லை. எதனாலோ இப்படி (அர்த்தம்) வந்து விட்டது. அந்த வார்த்தைக்கு ஸரியான அர்த்தம், இன்னொன்றின் கலப்பில்லாமல், தன்னன்தனியாக ஸ்வச்சமாக இருப்பது என்பதே. இப்படி “கேவல”மாக ஆத்மாவைப் பிரித்து அதிலே நிலைத்திருக்கும் அநுபவம்தான் “கைவல்யம்.” கைவல்ய பதவி, கைவல்ய மோக்ஷம் என்று கேள்விப்படிட்டிருப்பீர்கள். அப்படியென்றால், மனஸின் பந்தமும் அதனால் ஏற்படும் ஸம்ஸார பந்தமும் இல்லாமல் விடுபட்டுத் “தான்” மட்டும் கலப்பற்று நிற்கிற சாச்வதாநுபவம் என்று அர்த்தம்.

மோக்ஷம் என்பதை ஒவ்வொரு ஸித்தாந்தம் ஒவ்வொரு பெயரில் சொல்லியிருக்கும். அத்வைதிகள் அதை ஆத்ம ஸாக்ஷாத்காரம் அல்லது ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் என்கிறோம். சைவர்களும், வைஷ்ணவர்களும் சிவ ஸாயுஜ்யம், விஷ்ணு ஸாயுஜ்யம் என்பார்கள். புத்தர் ஒரு தீபம் அணைந்து போய்விட்டாற்போல ஸகலமும் அழிந்து போய்விட்ட “நிர்வாணம்” என்கிறார். ந்யாய – வைசேஷிக ஸித்தாந்திகள் துக்கம் என்பதே இல்லாததான “அபவர்க்கம்” என்பார்கள். ஜைன மதத்திலும், யோக சாஸ்த்ரத்திலும் “கேவல ஸ்திதி”, கைவல்யம்” என்றே மோக்ஷத்தைச் சொல்லியிருக்கிறது.

இப்படி வெறுமனே “இருந்துகொண்டு மட்டும் இருக்கிற நிலை” போய், மனஸ் முளைத்து “செய்கிற நிலை” ஏற்பட்டு விட்டால் உடனே அனர்த்த பரம்பரை அத்தனையும் புற்றீசல் மாதிரிப் புறப்பட்டு விடுகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆத்மாவினாலேயே மனத்தின் இயக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆசைப் பசியின் விளைவுகள்
Next