மனஸ் வந்துவிட்டால் உடனே அதற்கு ஆசைகள் என்ற ஆயிரக்கணக்கான பசிகள் ஏற்பட்டு, அதைத் தீர்த்துக் கொள்வதில் கோபம், லோபம், பொய், பொறமை, அழுகை, பயம், எல்லாமும் பட்டாளமாக வந்துவிடுகின்றன. அப்படியாவது ஆசை தீர்ந்ததா என்றால் அதுதான் இல்லை. விடாமல் ஒன்று மாற்றி ஒன்று என்று ஆசைப் பூர்த்திக்கான கார்யங்கள் நம்மைப் பிடித்துக்கொண்டு பேய் மாதிரி ஆட்டி வைக்கின்றன. ஆனந்தம் வேண்டும் என்பதற்காகத்தான் நாம் செய்கிற இத்தனை கார்யங்களும் என்றாலும், இந்தக் கார்யங்களினால் அதிகபக்ஷமாக அடையக்கூடிய ஸந்தோஷங்களுங்கூடத் தற்காலிகமாக இருந்து மறைந்துதான் போகின்றன. எதுவுமே கலப்படமில்லாத ஸந்தோஷமாக இல்லாமல் கையோடேயே ஒரு துக்கத்தையும் அழைத்துக் கொண்டு வருகிறது.
“பக்ஷணம் சாப்பிட்டால் ஸந்தோஷமாயிருக்கிறது, வயிற்றுவலியும் வருகிறது” என்பது வயிற்றுப் பசி விஷயத்தில் மட்டும்தான் என்று இல்லை. கண்ணின் பசி, காதின் பசி, சரீரப்பசி, எண்ணத்தின் பசி, பணப்பசி எல்லாவற்றிலும் இதே தான் நடக்கிறது. குழந்தை விளையாடிப் பார்த்தால் ஸந்தோஷமாயிருக்கிறது. அதற்கு ஒரு ஜ்வரம் வந்துவிட்டால் இந்த ஸ்ந்தோஷத்தைப்போல் நாலு மடங்கு கவலை ஏற்படுகிறது. நிறையப் பணம் வந்தால் ஸந்தோஷமாயிருக்கிறது, அதே ஸமயத்தில், திருட்டுப் போயிடப் போறதே! டாக்ஸை உசத்திவிடப் போறானே! எவனாவது டொனேஷன்’ கேட்டுண்டு வந்துடப் போறானே” என்றெல்லாம் பல தினுஸான கவலையும் பயமும் உண்டாகிறது. உத்யோகம் பண்ணுவது, குழந்தை குட்டி பெற்றுக்கொள்வது, பணம் சேர்ப்பது, க்ளப்புக்குப் போவது ஸினிமாவுக்குப் போவது என்றிப்படி-இன்னும் என்னென்ன செய்கிறோமோ அவை எல்லாமும் – ஸந்தோஷம் வேண்டும், ஆனந்தம் வேண்டும் என்பதற்காகவே ஆனாலும், ஒவ்வொன்றாலும் உண்டாகிற ஸந்தோஷத்தோடு கூட அதை விடவும் ஜாஸ்தியாக துக்கம், விசாரம், பயம், ஆத்திரம், அவமானம், பொறாமை, அஹங்காரம் எல்லாமும் உண்டாகின்றன. அப்படியாவது இந்த ஆனந்தங்களில் ஏதாவது ஒன்றையாவது சாச்வதமாகப் பிடித்து வைத்துக்கொள்ளமுடிகிறதா என்றால் அதுவும் இல்லை.
ஏதோ ஒன்றின் மேல் ஆசை உண்டானவுடன் அதை எப்படி அடைவது என்ற கவலை பிறக்கிறது. இன்னொருத்தன் அதை அடைய முயற்சி செய்கிறானென்றால், போட்டி போடுகிறானே என்று கோபம் வருகிறது. அதை அவன் அடைந்துவிட்டால் பொறாமை, நாம் அடைந்து விட்டால் திமிர் – அவனை அவமானப்படுத்தத் தோன்றுவது – இப்படியாக, ஆசையின் நிகர விளைவாக, ஏதோ ஒரு தோஷத்தை ஸம்பாதித்துக் கொள்கிறோம். ஆசைப்பட்ட வஸ்துவை அடைந்தபின் அல்ப ஸந்தோஷம். அப்புறம் அது தேய்ந்து மறைந்து போய் இன்னொரு வஸ்துவுக்காக இதே மாதிரிப் பறப்பும் தோஷங்களை ஸம்பாதித்துக்கொள்வதும்.
ஆசை வைத்த எதையோ ஒன்றை அடைவதற்காகவே க்ஷணநேரம் சும்மாயில்லாமல் கார்யம் செய்கிறோம். தூக்கத்திலிருந்து முழித்துக்கொண்டு மனஸ் புறப்பட்டதோ இல்லையோ இந்தக் கார்யப் பிசாசு பிடித்துக்கொண்டு சாந்தம் என்ன, நிம்மதி என்ன, நிறைவு என்ன என்றே தெரியாதபடி ஆட்டிவைக்க ஆரம்பிக்கிறது. நடு நடுவிலே ஏதோ கொஞ்சம் ஆசை ஈடேறி, பிறக்கிற நிம்மதியும் த்ருப்தியும் போன சுவடு தெரியாமல் அத்ருப்தி ப்ரவாஹத்தில் எங்கேயோ அடித்துக்கொண்டு போய்விடுகிறது.