கொள்ளுவதும் தள்ளுவதும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஒன்றைக் கொள்ளுவதற்காகச் செய்யும் முயற்சியில் கஷ்டம்; அதை நமக்கென்று (வைத்துக்) கொண்டிருப்பதிலேயே எத்தனையோ கஷ்டம்; அது கைவிட்டுப் போனாலும் கஷ்டம். கொள்ளுகிறதால் ஏற்படும் இந்தக் கஷ்டங்களோடேயே கைகோத்துக் கொண்டு, தள்ளுவதால் ஏற்படும் அநேக கஷ்டங்களும் சேருகின்றன. எந்தக் கார்யமானாலும் ஒன்றைக் கொள்ளுவது (ஸம்பாதிப்பது) , இன்னொன்றைத் தள்ளுவது (விலக்குவது) இரண்டும் சேர்ந்து சேர்ந்தே வரும். இல்லாததைக் கொண்டு வரவேண்டும்; வேண்டாமென்பதைத் தள்ளவேண்டும். உடம்பு நன்றாயிருக்கச் சாப்பிடவும் வேண்டும். விஸர்ஜனம் பண்ணவும் வேண்டும் என்றிருக்கிறமாதிரிதான். போக்கிரி வேலைக்காரனைத் தள்ள வேண்டும், நல்ல வேலைக்காரனைக் கொண்டுவரவேண்டும், சத்ருக்களைப் போக்க வேண்டும், மித்ரர்களை அடைய வேண்டும். பணத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால், அந்த முயற்சிக்கு இடையூறாக வருகிற எல்லாவற்றையும் தள்ளவேண்டும். எல்லா ஆசைக்கும் இப்படியே.

இப்படிக் கொள்ளுவது, தள்ளுவது இரண்டாலும் உபத்ரவம். (உட்) கொண்ட ஆஹாரம் ஜெரிக்காமல் உபத்ரவப்படுத்துகிறது; அல்லது மறுபடி அதே மாதிரி வேண்டும் என்ற அரிப்பை ஏற்படுத்துகிறது. விஸர்ஜனம் ஆகாவிட்டால் வியாதி உண்டாக்குகிறது; அல்லது ஒரேயடியாகப் “போய்”, கால் கை ஓய்ந்து படுக்கும்படிப் பண்ணுகிறது. தள்ளின வேலைக்காரன் நம் கையை காலை உடைத்துப்போட வேண்டும் என்று கருவிக்கொண்டு போகிறான். அவனிடம் பயப்படுகிறோம். ‘கொண்ட’ வேலைக்காரன் இன்க்ரிமென்ட் கேட்கிறான்; ஸ்ட்ரைக் செய்வேனென்று பயமுறுத்துகிறான். ஒரு காலத்தில் கொண்டவனையே இன்னொரு காலத்தில் தள்ளவேண்டியதாகிறது. முதல் நாள் ‘கொண்ட’ ஆஹாரத்தைத்தானே மறுநாள் விஸர்ஜனமாகத் தள்ளுகிறோம்?

சத்ருவிடம் பயப்படுவது போதாதென்று மித்ரர் ரொம்பவும் உறவு கொண்டாடிக்கொண்டு வந்து விடப்போகிறாரே என்று அதைவிட பயப்பட வேண்டியிருக்கிறது. (நம்மைப் பற்றி அவர்களுக்கும் இதே மாதிரி இருக்கலாம்!) ஆக, கொண்டதையே தள்ளும்படி ஏற்படுகிறது.

இப்படிப் பார்த்துக்கொண்டே போனால் கார்யம் செய்வதே பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறது.

கார்யமே இல்லாமல் வெறும் ஆத்மா மட்டும் இருக்கும்போது எத்தனை நன்றாயிருக்கிறது? நமக்கு ஸமாதி நிஷ்டை பற்றித் தெரியாவிட்டாலும் நித்ரை பற்றித் தெரியும். அந்த நித்ரை எத்தனை ஆனந்தமாயிருந்தது? ஒரு கார்யமும் இல்லாமல், மனஸும் இல்லாமல் எத்தனை நிம்மதியாயிருந்தது? ஒரு ராஜாகூட, ஸகல போக்யங்களிலும் அலுத்துப்போய் தன் ராஜரிகப் பெருமை எதுவுமில்லாத நித்ரையில் விழவேண்டுமென்று தினமும் நினைக்கத்தானே செய்கிறான்? அது எதனால் என்றால் ஆத்மாவாக இருக்கும்போது கொள்ளுவது, தள்ளுவது என்ற இரண்டும் இல்லாததால்தான். ஆத்மாதான் நிஜ நாம் என்று பார்த்தோம். நம்மை நாமே கொள்ளுவது என்பது எப்படி ஸாத்யம்? இனிமேல்தான் நாம் நம்மைக் கொள்ளவேண்டுமென்றால் இப்போது நாம் யாராகவோவா இருக்கிறோம்? நாம் எப்படி நாமாக இல்லாமலிருக்கமுடியும்? நாம் எப்படி யாரோவாக இருக்கமுடியும்? – இந்த இரண்டுமே ஸாத்யமில்லை. அதே மாதிரி நம்மையே நாம் எப்படித் தள்ளிக்கொள்ளமுடியும்? முடியுமானால் தள்ளுவது யார்? தள்ளிய பின் மிஞ்சக்கூடியது யார்? நம்மைத் தவிர நம்மிடம் எதுவும் இருக்கவே முடியாதாதலால், ஆத்மாவைத் தள்ளவோ, தள்ளியபின் மிஞ்சி நிற்கவோ எவரும் இருக்கமுடியாது. நம்மை நாமே தள்ள முடியாது, கொண்டு வரவும்முடியாது. நாம் நாமாக இருந்துகொண்டே இருக்கிறோமாதலால், புதிதாகக் கொண்டு வரமுடியாது.

அம்பாளை இப்படிப்பட்ட ஆத்ம ஸ்வரூபமாக வைத்துத்தான் (லலிதா) ஸஹஸ்ரநாமத்தில் அவளுக்கு ஹேயோபாதேய வர்ஜிதா என்று ஒரு பெயர் சொல்லியிருக்கிறது. “ஹேயம்” என்றால் தள்ளப்படுவது. “உபாதேயம்” என்றால் கொள்ளப்படுவது, தள்ளவும் முடியாதவளாக, கொள்ளவும் முடியாதவளாக இருப்பவள் “ஹேயோபாதேய வர்ஜிதா.” நம்மைத் தவிர வேறாக இருப்பவற்றைத்தான் கொள்ளவும், தள்ளவும் ஓயாமல் கார்யம் செய்து வீணாகிறோம். நாமாகவே இருப்பதற்குக் கார்யம் வேண்டாம். நாமாகவே இருக்கும் போது கார்யத்தின் தொல்லையே இல்லை.

அதனால்தான் தூக்கத்திலே அத்தனை ஸெளக்யம், சாந்தி. ஆசையின் பிடுங்கல், மனஸின் அரிப்பு இல்லாமல், தேவாஸுர யுத்தம் என்றேனே, அது இல்லாமல் நாம் நிம்மதியாயிருப்பது தூக்கத்தில்தான். நமக்குத் தகுதி இல்லாவிட்டாலும் பகவான் பரம கருணையால் தினமும் ஏழெட்டு மணி இந்த சாந்த நிலையை அநுக்ரஹம் பண்ணுகிறார். ஒருகால், பிறரிடம் கருணையால் நாம் அவர்களுக்கு இந்த ஏழெட்டு மணியாவது உபத்ரவம் பண்ணாதிருக்கவே நம்மைத் தூங்கப் பண்ணுவதாகவும் இருக்கலாம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆசைப் பசியின் விளைவுகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தூக்கமல்ல வழி
Next