தூக்கமல்ல வழி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அப்படியானால், தேவாஸுர யுத்தமில்லாமல், மனஸ் இல்லாமல், அதிலிருந்து முளைக்கும் ஆசை இல்லாமல் நாம் சாந்தமாக இருக்க வழி தூங்கிக் கொண்டேயிருப்பதுதானா? நிறையத் தூக்க மாத்திரை வாங்கி வைத்துக்கொண்டு, முழித்துக்கொள்ளும் போதல்லாம் போட்டுக்கொண்டு மறுபடி தூங்கிவிடலாமா?

அது ஸரியில்லை.

நல்ல தூக்கத்திலே மனஸின் க்ருத்ரிமம் இல்லை, ஆத்மா மட்டும் இருக்கிறது என்றாலும், ‘ஆத்மாநுபவம்’ என்கிற ஆனந்தமான சாந்தமான நிலையாக நாம் அதைத் தெரிந்து கொண்டு தூக்கத்தின் போது அநுபவிக்கிறோமா என்ன? இல்லை. முழித்துக்கொண்ட பிற்பாடு “ஸுகமாகத் தூங்கினேன்; நிம்மதியாயிருந்தது” என்று சொல்லத் தெரிகிறதே ஒழிய, தூங்கும்போது அந்த ஸுகமோ, நிம்மதியோ நமக்குத் தெரியவில்லை. ஏதோ மரக்கட்டை மாதிரி கிடக்கிறோம். இப்படி வெறும் ஜட நிலைக்கு நம்மைத் தாழ்த்திக் கொள்வது நம்மையே நாம் அவமரியாதை பண்ணிக்கொள்வதுதான். வேறு யாராவது நம்மை “ஜடமே” என்று கூப்பிட்டால் அவமானம், கோபம் படுகிறோமே, நம்மை நாமே அப்படி பண்ணிக்கொள்ளலாமா? ஸ்ருஷ்டி என்ற பெரிய விஷயத்தையே ஏளனப்படுத்துவதாக ஒரு மநுஷ்யன் தன்னை எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டிருக்கும் ஜட ஸ்திதிக்குத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.

ஜட நிலைமைக்கு அப்புறம் ஓரறிவிலிருந்து ஆறறிவு என்று ஸ்ருஷ்டி க்ரமம் உயர்ந்துகொண்டே போவதில் மநுஷ்யன் உச்சாணியல் இருக்கிறான். இந்த ஆறறிவால் இவனுக்கு ஏகப்பட்ட உபத்ரவங்கள், ஹிம்ஸைகள் ஏற்படுவது வாஸ்தவந்தான். ஆனால், அதற்காகப் பேடி மாதிரி, ஒருவன் தன்னை நபும்ஸகனாக்கிக் கொள்கிற மாதிரி, இதுகள் எல்லாவற்றையும் சக்தியிழக்கப் பண்ணி ஜடமாக்குவது கொஞ்சங்கூட அழகில்லை. ஆறறிவுகளால் ஹிம்ஸை, உபத்ரவம் வந்தாலும் எத்தனையோ நல்லதும் பண்ண முடிகிறதோ இல்லையோ? உசந்த தத்வ விசாரணை, ஸங்கீதம், சில்பம், பொது ஜன ஸேவை, அன்பு, த்யாகம், இப்படி எத்தனையோ நல்லவற்றிலும் கர்மேந்த்ரிய ஞானேந்த்ரியங்களையும் மனஸையும் செலுத்த முடிகிறதோல்லியோ? இப்படிச் செய்ய முயலவேண்டும். அப்புறம், ஆறறிவுக்கு மேலே ஒரே அறிவாக ஆக, ஞான விசாரம் செய்யவேண்டும்; ஆறறிவுக்குக் கீழே ஜடநிலைக்குப் போகப்படாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கொள்ளுவதும் தள்ளுவதும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வைராக்யமும் அப்யாஸமும்
Next