பகவான் சொன்னாற்போல வைராக்யத்தாலும், அப்யாஸத்தாலும் அஸுர சக்திகளைத் திரும்பத் திரும்ப அடக்கி, தேவ சக்திகளைத் சக்திகரமாகச் செயலாற்ற வைப்பதே இதற்கெல்லாம் ஆரம்பம்.
ஒன்றைக் கொள்வது, ஒன்றைத் தள்ளுவது என்பதால் ஏற்படும் விருப்பு வெறுப்புகளில் பிடித்த பிடியாயில்லாமல் விலகியிருக்கப் பழகுவதுதான் வைராக்யம். நம் மனஸுக்குப் பிடித்தது பிடிக்காதது என்று பார்க்காமல், இவற்றில் வைராக்யத்தைக் கொள்ள முயற்சி பண்ணிக்கொண்டே, தர்மரக்ஷணைக்காகவும் நம்முடைய ஜீவன் பக்குவப்படுவதற்காகவும் நாம் என்ன பண்ணவேண்டும் என்று சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறதோ அவற்றின் பொருட்டே இந்த்ரியங்களையும் மனஸையும் ஈடுபடுத்திக் கார்யங்கள் பண்ணவேண்டும். இதிலும் கொள்ளுவது – தள்ளுவது, லாபம் – நஷ்டம், ஜயம் – அபஜயம், மானம் – அவமானம் எல்லாம் வரத்தான் வரும். இவற்றையும் ஸமசித்தத்தோடு எடுத்துக் கொள்ளத்தான் வைராக்யம் தேவை. இதைப் பெறுவதற்கு முயன்று கொண்டே போகவேண்டும்.
இந்த விடாமுயற்சி, அல்லது பயிற்சிதான் ‘அப்யாஸம்’ என்று பகவான் சொன்னது. தேஹாப்யாஸம் என்கிறோம். எத்தனை நாள், ஒவ்வொரு நாளும் எத்தனை தரம், தண்டால், பஸ்கி போடவேண்டியிருக்கிறது? அந்தந்த யோகாஸனத்துக்கு உரியபடி கையை காலை நீட்டி மடக்குவதற்கு எத்தனை நாள் முயற்சியும், பயிற்சியும் பண்ணிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது? அப்படிப் பண்ணிக்கொண்டே போனால் கடைசியில் ஒரு நாள் ஸரியாக வந்து விடுகிரதொல்லியோ? அப்படித்தான் அஸுரப்போகிலே ஓடும் மனசை விடாமுயற்சியலும் விடாத பயிற்சியாலும் திரும்பத் திரும்ப இழுத்து தேவ சக்திகளான நல்ல விஷயங்களில் செலுத்த வேண்டும்.
இப்படி ஜட நிலைக்கு மேற்பட்ட ஆறறிவை முதலில் அதன் மிருகத்தன்மையிலிருந்து மநுஷத் தன்மைக்கும் அப்புறம் தேவத் தன்மைக்கும் உசத்திக் கொண்டே போய், அப்புறம் இவற்றுக்கும் உயர்வான ஏக அறிவான ஆத்மாவிலே கரைத்துவிடவேண்டும். முடிவில் ஆறறிவைப் போக்கடித்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் அதனால் சாச்வத சௌக்யம் இல்லை. ஆனால் இப்படிப் போக்கடித்துக் கொள்வது ஆறறிவுக்குக் கீழ்ப்பட்ட ஜட நிலையில் ஆத்மாவின் ஸுகாநுபவம் நமக்கே தெரியாமல் தூங்குவதாக இருக்கக்கூடாது; இவற்றுக்கு மேற்பட்டதாய், இவற்றுக்கு ஆதாரமாய், எது இல்லாமல் இவை இயங்க முடியாதோ அதுவாக உள்ள ஆத்மாவை நன்றாக உணர்ந்து அறிகிற சாந்த ஸமாதி நிஷ்டையாயிருக்க வேண்டும்.
உழைத்து உழைத்தும் யோசித்து யோசித்தும் களைத்துப் போகிற உடம்புக்கும் மனஸுக்கும் ஓய்வு தருவதற்காக எவ்வளவு தூங்க வேண்டுமோ அவ்வளவே தூங்கணும். அதை சாந்த ஸமாதி என்று நினைத்துவிடக் கூடாது.