ஆத்மாவின் சாந்தம் சூன்யமாகச் சாவிலும் தூக்கத்திலும் இருக்கிற மாதிரியான சாந்தம் அல்ல. புத்தர் சொன்ன நிர்வாணம் சூன்யத்தின் சாந்தம்தான். ஆனால், நம்முடைய சங்கரபகவத் பாதர்கள் உபநிஷத்துக்களின் ஆததாரத்திலிருந்து காட்டியது என்னவென்றால் ஸமாதி நிலையில் அடைகிற ஆத்ம சாந்தமென்பது ஆனந்த மயமானது, ஞான மயமானது என்பதே. அது பூர்ணாநுபவம். சூன்யாநுபவமில்லை. செத்த பின்னும் அழியாத உயிர்த் தத்வமாயுள்ள ஆத்மா ஞானமயமாயும், ஆனந்த மயமாயும் இல்லாமல் வேறெப்படி இருக்கமுடியும்?
ஆத்மா ஞானமயம் என்பது எப்படி என்றால்: உயிருள்ளதாக ஒன்றைச் சொல்வதே அது வெறும் ஜடமாயில்லாமல் அறிவும் உணர்ச்சியும் பெற்றிருப்பதைக் கொண்டுதான் அல்லவா? எனவே உயிருக்குமுயிராயுள்ள ஆத்மா என்பது அறிவும் உணர்ச்சியும் ஒன்றாகிவிட்ட சைதன்யமயமாயிருப்பதுதானென்பது நிச்சயமாகிறது. இதைத்தான் ஞானம் என்பதும்.
ஆத்மா எதனோடும் நேராக ஸம்பந்தப்படாமலிருப்பது என்றும் முன்னேயே சொன்னேன். ஆனபடியால் அது அறிவதற்கும், உணர்வதற்கும் வெளி வஸ்து எதுவுமில்லை. எனவே, அது எதை அறியும், உணரும் என்றால் தன்னையே தான் அறிந்து கொள்வதாயும் உணர்ந்துகொள்வதாயுமிருக்கும். வேறு மனஸோ, இந்த்ரியமோ கிட்டே போய் அறிந்துகொள்ள முடியாத ஆத்மாவை அந்த ஆத்மா மட்டும்தான் தெரிந்துகொண்டிருக்கிறது. ஸமாதியில் மனஸ் ‘டப்’பென்று நின்றுவிட்டவுடன் இப்படித் தன்னைத் தானே தெரிந்துகொள்ளும் ஆத்மாநுபவம் உண்டாகிறது. தூக்கத்தில் ஆத்மாநுபவம் தெரிவதில்லை.
‘ஆத்மா ஆனந்த மயம் என்பது எப்படி?’ என்றால், ‘வேறெப்படி அது இருக்க முடியும்?’ என்று திருப்பிக் கேட்கத் தோன்றுகிறது. கட்டுப்பாடே இல்லாமல் பரம ஸ்வதந்தரிமாய் உள்ள ஒன்று ஆனந்தமாயில்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்? ஆசைகளைக் கொண்டு மனஸ் போடும் கட்டு, இந்த்ரியக் கட்டு, மற்ற மநுஷ்யர்கள் – இடம் – பொருள் – ஏவல் இவற்றின் கட்டு, கர்மபந்தம், ஸம்ஸாரபந்தம் ஆகியவற்றால்தான் நாம் துன்பப்படுவது – இந்த எதுவும் ஆத்மாவுக்கு இல்லை. அதே ஸமயத்தில் அது அறிவோ உணர்சசியோ இல்லாததாயுமில்லலாமல் சைதன்யமயமாய், சிக்கனமாய் இருக்கிறது. எனவே தனது கட்டுப்பாடற்ற நிலையை அது உணர்ந்து அறியவும் செய்யும். இப்படிப்பட்ட பரம ஸ்வாதந்த்ரிய அநுபவமானது பேரானந்தமாகத்தானே இருக்கும்? கட்டுக்குள்ளேயே நமக்கு அவ்வப்போது தாற்காலிகமாக ஆனந்தம் வருகிறதென்றால், கட்டுப்பாடே இல்லாமல் சாச்வதமாயுள்ள ஆத்மாவின் இன்பமே பேரானந்தம். நமக்கு இன்னொருத்தரிடமிருந்து உண்டாகிற துக்கம், பயம், கோபம் எதுவும் தன்னையன்றி வேறெதையும் அறியாத ஆத்மாவுக்கு இல்லாததாலும் அதற்கு மாறாத ஸதாநந்தமாக, நித்யப் பேரின்பமாக இருக்கிறது.
நமக்கு மேலே அடக்க யாராவது இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலே இயற்கை என்கிற சக்தியின் ஆதிக்கத்தில்தான் எல்லாரும் மாட்டிக் கொண்டிருக்கிறோம். நம்மை ஆபீஸர் அடக்குகிறார், அவரையும் அவர் பெண்டாட்டி அடக்குகிறாள்! எல்லாரையும், எல்லாவற்றையும், இயற்கையையுங்கூட அடக்கி ஆள்கிறவனாக ஈச்வரன் இருக்கிறானே, அவனுங்கூட இப்படி த்வைதமாக ஈச்வரனென்றும் பக்தன் என்றும் இருக்கும்போது, பக்த “பராதீனன்” என்பதாக பக்தர்களின் ஆதிக்கத்தின்கீழே இருக்கிறான்! த்வைதம் இருந்தவிட்டால் ஸ்வாதீனம் கிடையாது. பராதீனம்தான். ஸ்வாதீனம் நம்மில் யாருக்கும் இல்லை. அது இருந்தொலொழிய பூர்ணானந்தம் ஏது? தன்னை அடக்க எந்த மேல் சக்தியும் இல்லலாமல் இருக்கும் அத்வைத ஆத்மாவுக்கே அகண்டாநந்தம் என்பது இருக்கிறது. அந்த ஆனந்த ஸமுத்ரத்தில் ஒரு துளி, இரண்து துளிதான். மாயை யானது அந்த ஆத்மாவின் ஆதாரத்தில் ஜீவாத்மாவின் வாழ்க்கையை நடத்தி வைக்கும்போது, அதாவது இந்த மாயா நாடகத்தைப் போடும்போது, ஜீவனுடைய இந்த்ரியங்களால் வெளிப்பொருட்களின் அநுபோகத்தின் மூலம் பெறப்படுவது.
உண்மையில் வெளி வஸ்துவில் ஆனந்தமில்லை. உள்ளே உள்ள ஆத்ம ஜ்யோதிஸை மாயையானது ஜீவனின் அந்தக்கரணத்தில் ப்ரதிபலித்து இந்த்ரியங்கள் வாயிலாக அநுபோகத்தைக் கொடுக்கும்போது அந்த ப்ரதிபிலிப்பின் ரச்மிகள் (கிரணங்கள்) தான் வெளி வஸ்துவிலிருந்துவரும் ஆனந்தம் போலமாறித் தெரிகிறது!